ராகுல் வென்றது எப்படி?
மீனாவும் ராகுலும் ஒரே வகுப்பில் படிப்பவர்கள். நல்ல நண்பர்கள். ஆனால், படிப்பு என்று வந்துவிட்டால் எந்த வகையிலும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.
தன்னுடன் படிக்கும் மாணவர்கள் பாடத்தில் எந்த சந்தேகம் கேட்டாலும், பொறுமையாக விளக்கிக் சொல்லிக் கொடுப்பான் ராகுல். அது மட்டுமல்ல, சக மாணவர்களிடம் தனக்குத் தெரிந்த கருத்துகளைப் பகிர்ந்து கொண்டு பழகுவதில் தனி ஈடுபாடு காட்டினான்.
மீனாவோ, ராகுலுக்கு எதிர்மறையான குணங்களைக் கொண்டிருந்தாள். சக மாணவர்கள் பாடத்தில் ஏதாவது சந்தேகம் கேட்டால், தனக்குத் தெரிந்தாலும் சொல்லித்தர மாட்டாள். பிற மாணவர்கள் தன்னைவிட அதிக மதிப்பெண் எடுத்துவிடுவார்களோ என்ற பயம் மீனாவிடம் அதிகம் இருந்தது.
மீனாவின் பெற்றோர், பிறருக்குச் சொல்லிக் கொடுத்தால் உனது அறிவாற்றலும் வளரும் என்று பலமுறை அறிவுரைகள் சொல்லியபோதும், மீனாவின் மனம் அதனை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.
உனக்குத் தெரிந்ததைப் பிறருக்குச் சொல்லிக் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. அனைவரிடமும் அன்புடன் பழகும் பண்பையாவது வளர்த்துக்கொள் என்றார்கள். மீனாவால் எதையும் கேட்கவோ சிந்தித்துப் பார்க்கவோ முடியவில்லை.
+2 மதிப்பெண்களின் தகுதி அடிப்படையில் இருவருக்கும் ஒரே மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இருவரின் பெற்றோரும் தங்கள் பிள்ளைகளின் அறிவாற்றலை -_ திறமையை நினைத்துப் பூரித்து மகிழ்ந்தனர்.
மருத்துவக் கல்லூரியிலும் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு படித்து முதல் இரு இடங்களைத் தக்க வைத்துக் கொண்டனர். இருவரின் நட்பையும், அறிவாற்றலையும், திறமையையும் பார்த்த பேராசிரியர்கள், மாணவ மாணவியர் அனைவரும் வியந்தனர்.
முதல் ஆண்டு இறுதித் தேர்வும் வந்தது.
அப்போது, அவர்கள் வகுப்பில் படிக்கும் முகில் என்ற மாணவனின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. முகில் வெளிமாநிலத்திலிருந்து வந்து படிப்பவன். அவனது கிராமத்தில் போதிய மருத்துவ வசதியும் இல்லை.
மேலும், அவனது பெற்றோர் போதிய கல்வியறிவினைப் பெறாததுடன் பொருளாதார வசதியிலும் பின்தங்கியவர்கள் என்பதால் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலேயே சிகிச்சை செய்துகொள்ள முடிவு செய்தான்.
ராகுல் முழுப் பொறுப்புடன் முகிலின் அருகிலிருந்து கவனித்தான். மற்ற நண்பர்களும் உறுதுணையாக இருந்தனர். தேர்வு நேரம் என்பதால், தினமும் ஒவ்வொருவராகப் பிரித்துக் கொண்டு முகிலைக் கவனித்து வந்தனர்.
மீனா முகிலைப் பார்த்துக் கொள்ள வேண்டிய முறை வந்தது. முகிலின் அருகில் பார்த்துக்கொண்டு இருந்தால் தன்னால் சரியாகப் படிக்க முடியா என நினைத்த மீனா, தன்னால் பார்த்துக் கொள்ள முடியாது என்று தெளிவாகச் சொல்லிவிட்டாள்.
இதனைக் கேட்ட மற்ற நண்பர்கள் மீனாவிடம் பேச முயன்றபோது ராகுல் குறுக்கிட்டான். மீனாவுக்குப் பதிலாக இன்று நான் முகிலின் அருகிலிருந்து பார்த்துக் கொள்கிறேன் என்று கூறினான். முகிலைக் கவனித்துக் கொண்டே பாடங்களையும் படித்துத் தேர்வு எழுதினான்.
தேர்வு விடுமுறைக்குப் பின் இரண்டாம் ஆண்டின் கல்வியைத் தொடர அனைவரும் வந்தனர். தேர்வு முடிவுகளும் வந்தன. மீனாவும் ராகுலும் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
மாணவர் சங்கத் தலைவர் தேர்தல் வந்தது. ராகுல் எவ்வளவோ மறுத்தும் அவனது நண்பர்கள் தேர்தலில் போட்டியிட வைத்தனர். மீனாவின் தோழிகளும் மீனாவைக் களத்தில் இறக்கினர். தேர்தல் நடைபெற்று முடிவுக்காகக் காத்திருந்தனர்.
ராகுல் பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றான். தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியாத மீனா மனம் தளர்ந்தாள். மீனாவின் மனநிலையை அறிந்திருந்த ராகுல் தனது வகுப்புத் தோழன் ஆனந்துடன் சென்று மீனாவைப் பார்த்தான்.
மீனாவின் மனக்குமுறல் அழுகையாகப் பீறிட்டது. ராகுலின் மன வருத்தத்தை அறிந்த ஆனந்த் ராகுலைச் சிறிது நேரம் வெளியில் இரு. நான் மீனாவைச் சமாதானப்படுத்துகிறேன் என்றான்.
ஆனந்த், நான் ராகுலைவிட அறிவில், செயலாற்றலில் என்று எதிலும் குறைந்தவள் அல்லவே. பின்பு ஏன் இவ்வளவு பெரிய தோல்வியை எதிர்கொள்ள நேரிட்டது என்றாள்.
நான் சொல்வதைப் பொறுமையாகக் கேள் மீனா. நீ புத்தகங்களுடன் பழகி அவற்றைப் படித்ததுபோல் மனிதர்களுடன் பழகி மனித மனங்களைப் படிக்கத் தவறிவிட்டாய்.
பொதுவாக, மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் பிறருக்கு உதவும் மனப்பான்மை வேண்டும். மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் உதவி செய்து வாழ்வதோடு, விட்டுக் கொடுத்து வாழவும் பழகிக் கொள்ள வேண்டும்.
நாமோ மருத்துவத் தொழிலில் உள்ளவர்கள். நமக்கு இந்த நினைவானது மனம் நிறைய இருக்க வேண்டும். அந்த நினைவுகளுடன் ராகுல் ஒவ்வொருவருடன் பழகிய விதம்தான் அவனது வெற்றிக்குக் காரணம் என்றான்.
– குறள்மொழி