கடலின் வரலாறு
– பேராசிரியர் ந.க.மங்களமுருகேசன்
உதயன்: அப்பா, வீட்டுப் பாடம் எல்லாம் முடித்துவிட்டேன். நாளைக்குப் பள்ளியும் விடுமுறை. கடற்கரைக்கு அழைத்துச் செல்லுங்கள் அப்பா.
தந்தை: உதயன், எனக்கும் அம்மாவிற்கும் கடற்கரையில் நடைபயில வேண்டும் என்று ஆசைதான். உன்னை அழைத்துச் செல்ல வேண்டும். உன் தங்கை எழிலையும் உடன் அழைத்துப் பொழுதுபோக்கி வர ஆசையும்கூட. எதிர்பாராத விதமாக இன்று தவிர்க்க இயலாத வேலை வேறு இருக்கிறது.
உதயன்: அப்பா! அப்படியானால் இன்று கடற்காற்று வாங்கக் கடல் மணலில் விளையாட முடியாதா?
தந்தை: பொறு, பொறு. செந்தில் மாமா இன்று வருகிறேன் என்று சொல்லியிருக்கிறார். அவரோடு நீங்கள் இரண்டு பேரும் போய்விட்டு வாருங்கள். (உள்ளே நுழைந்தபடி)
செந்தில்: என்ன மாப்பிள்ளை, சின்ன மாப்பிள்ளை ஏதோ கோரிக்கை வைக்கிறார் போல இருக்கிறதே.
தந்தை: அது ஒன்றுமில்லை. நாளை விடுமுறையாம். கடற்கரைக்கு அழைத்துப் போகும்படி உதயனும், எழிலும் நச்சரிப்பு.
செந்தில்: இவ்வளவுதானா? இதுக்குப்போய்க் கவலைப்பட வேண்டாம். என் அன்பு மருமகனையும், மருமகளையும் அழைத்துச் சென்று வருகிறேன்.
அம்மா: அண்ணா, கொஞ்சம் பொறுங்கள். உங்களுக்குப் பிடித்த சத்தான சுண்டலும், சுக்கு மல்லி கொதிக்க வைத்ததும் வைத்திருக்கிறேன். சிற்றுண்டி இதனை முடித்து விட்டுப் போகலாம்.
தந்தை: சும்மா பேசிக்கொண்டே இருந்தால் எப்படி? கொண்டு வா உன் அயிட்டங்களை. ஒரு பிடிபிடித்து விட்டு மாப்பிள்ளையும் நம் செல்வங்களும் சென்று வரட்டும்.
(சிற்றுண்டி முடிந்ததும் உதயன், எழில் ஆகிய இருவரும் மாமா செந்திலுடன் கடற்கரைக்கு வந்து அமர்கிறார்கள்.)
உதயன்: எழில், இந்தக் கடலைப் பார்த்தாயா? எவ்வளவு பரந்து விரிந்து இருக்கிறது?
எழில்: ஆம் அண்ணா, இந்தக் கடலைப் பார்ப்பதும், பார்த்துக்கொண்டே இருப்பதும் பேரானந்தம். இந்த அலைகளுக்கு ஓய்வு என்பதே இல்லையே.
செந்தில்: ஜாக்கிரதை, கரை ஓரமாகவே நில்லுங்கள். அலை இழுத்துச் செல்லும் இடம் வரை சென்று விடாதீர்கள்.
உதயன்: மாமா, இந்தக் கடல் பற்றி எனக்கு எவ்வளவோ அய்யங்கள் இருக்கின்றன. கேட்கலாமா?
செந்தில்: வாருங்கள்! நாம் கரைமேல் தள்ளி அமர்ந்து கொண்டு பேசுவோம்.
உதயன்: மாமா இந்தக் கடல் இருக்குதே, அப்படியே எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலக் கொள்ளை அழகு இருந்தாலும் எனக்கு ஒரு சந்தேகம்.
செந்தில்: நினைச்சேன். என்னடா இவன் இன்னும் சந்தேகமே கேட்கலைன்னு. நீ என்ன கேட்கப் போறேன்னு சொல்லட்டுமா? உலகில் கடல் எப்படி ஏற்பட்டதுன்னு?
எழில்: எப்படி மாமா? இப்படி ஒரு வினாவைத்தான் கேட்கப் போறான்னு கனகச்சிதமா உங்களுக்குத் தோனுச்சு. அற்புதம் மாமா.
செந்தில்: இதிலே ஒன்றும் அதிசயமோ, அற்புதமோ இல்லை. கடலைப் பார்க்கிற எல்லோருக்கும் முதலில் தோன்றுவது இவ்வினாதான்.
உலகின் கடல்களில் உள்ள நீர் அனைத்தும் எங்கிருந்து வந்தது? சூரியனில் இருந்துதான் பூமி தோன்றியதாகக் கருதப்படுகிறது. சுமார் 500 கோடி ஆண்டுகளுக்கு முன் பூமி தோன்றியபோது இப்போது இருப்பதைப்போல இருக்கவில்லை.
பூமியானது கிட்டத்தட்ட பாகு உருட்டைபோல இருந்தது. இராட்சத மேகங்கள் பூமியைக் கப்பிக்கொண்டு, சூரிய ஒளி பூமியில் வந்து விழமுடியாத அளவுக்குப் பூமியைத் தொடர்ந்து இருள் கப்பிக் கொண்டு இருந்தது.
பூமியின் மேற்பகுதியில் இருந்த ஆயிரக்கணக்கான எரிமலைகள் ஓயாது நெருப்பைக் கக்கின. பாறைகளை வெளியே வீசியபோது எரிமலைகளின் தீப்பிழம்புகள் ஒளியை வீசின. தொடர்ந்து ஏற்பட்ட பூகம்பங்கள் பூமியை உலுக்கின. பூமியானது விம்மியது. நடுங்கியது. எழில்: நீங்க சொல்றதைக் கேட்கக் கேட்கப் பயமா இருக்குதே.
உதயன்: ஏய், கொஞ்சம் சும்மா இரு. மாமா சொல்றது ஒன்னும் பேய்க்கதை இல்லை. அறிவியல் உண்மை. வாயை மூடிட்டுக் கேளு.
செந்தில்: சரி, சரி, எழில் சின்னப் பொண்ணுதானே. எரிமலை தீப்பிழம்புகளை வீசும்போது பூமியில் நீரோ, சூரிய ஒளியோ கிடையாது. பூமியில் உயிரினம் தோன்றுவது என்னும் பேச்சுக்கு வாய்ப்பே இல்லை.
அப்போது சுமார் 600 கோடி ஆண்டுகளுக்கு முன் மேகங்கள் சிதறத் திடீரென்று மழை பொழியத் தொடங்கியது. பூமியில் கொதிக்கும் பாறைகள் மேலே விழுந்த மழை உடனே நீராவியாகிப் பின்னர் மழையாகிப் பொழிந்தது. கொட்டு கொட்டென்று கொட்டிய மழை அது. பூமி அதன் வரலாற்றில் ஒருபோதும் கண்டிராத மழை பெய்தது. பெய்து கொண்டே இருந்தது.
ஒரு நாள், ஒரு மாதம், ஓராண்டு அல்ல. நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பொழிந்தது. பூமி குளிர்ந்து மழை நீர் தேங்கியது. மேட்டுப் பரப்பிலிருந்து நீர் ஆறுகளைப்போல் பெருகிடக் குளங்களும் ஏரிகளும் தோன்றின. பள்ளங்களில் சமுத்திரங்கள் தோன்றி நீரைப் பெறத் தலைப்பட்டன.
உதயன்: அப்படியானால் பூமியின் மேற்புறம் மேலும் மேலும் வெப்பத்தை இழந்திருக்குமே. பூமியின் மேற்பகுதி குளிரும்போது அடிப்பகுதியில் வெப்பம் இருக்குமே.
செந்தில்: சரியாகச் சொன்னால் பாறைகளில் அடங்கிய உப்புத் தாதுக்கள் கரைந்து இறுதியில் கடலுக்குப் போய்ச் சேர்ந்தன. கடலில் மேலும் மேலும் உப்பு போய்ச் சேர்ந்தது.
எழில்: நானே கேட்கணும்னு நினைச்சேன். கடல் நீர் எப்படி உப்பு நீராகியது என்று.
உதயன்: மாமா! கடல் நீர் ஏன் இவ்வளவு உப்பாக இருக்கிறது என்பதற்கு உணர்ச்சிப்பூர்வமாக அண்ணா எப்போதோ சொன்னது நினைவுக்கு வருகிறது. இலங்கையில் வாடும் தமிழர்கள் விட்ட கண்ணீர்த் துளிகள்தாம் கடல் நீரை உப்பாக்கியிருக்கிறது என்று வருத்தத்துடன் சொன்னதாக…
செந்தில்: ஆமாம் உதயன், எப்போது இந்தக் கடற்கரைக்கு வந்தாலும், எனக்குக் கடலுக்கு அப்பால் கலங்கி நிற்கும் இலங்கைத் தீவுத் தமிழன் வாழ்வில் எப்போது விடிவு காலம் பிறக்குமோ எனும் வேதனைதான் நெஞ்சைத் தொடும். (சிறிது மவுனம்)
உதயன்: மாமா! இப்படி இலங்கைத் தமிழனின் வாழ்வில் இடி விழுந்ததை நினைத்தால் நம்மால் ஒன்றும் செய்ய இயலாது. தொடர்ந்து சொல்லுங்கள்.
செந்தில்: சொல்றேன், சொல்றேன். பாறைகளில் இருந்த உப்புச் சேர்ந்ததோடு சமுத்திரங்களில் நீர் ஆவியாகும்போது நீரில் படிந்திருந்த உப்பு சமுத்திரங்களிலேயே படிந்துவிட்டது. மழை பொழிந்தபோது மழைநீர் உப்புத் தாதுக்களைச் சமுத்திரங்களில் கொண்டு போய்ச் சேர்க்கச் சேர்க்க கடல் எல்லாம் உப்பைப் பெற்றன.
இவ்வாறு தோன்றிய கடலில்தான் உலகில் உயிரினம் தோன்றியது. கடல்களும் காற்று மண்டலமும் இல்லாவிடில் பூமியும் சந்திரனைப்போல உயிரற்ற பாலை வெளியாகத்தான் இருந்திருக்கும்.
எழில்: மாமா, அப்படியானால் சமுத்திரங்கள் அன்று முதல் தொடர்ந்து அப்படியே இருந்து வருகின்றனவா? ஆதியில் நிலமாக இருந்த பகுதிகள் நிலமாக இருந்து வருவதாகக் கருதலாமா?
செந்தில்: என்னமோ, உன் தங்கையை இலேசாக எண்ணினாயே. இப்போது பார்த்தாயா? என்ன அற்புதமான அறிவார்ந்த வினாவைப் போட்டு என்னைக் கொக்கி போட்டு விட்டாள். பெண்கள் எல்லோரும், அறிவில், ஆற்றலில் ஆண்களுக்குக் குறைந்தவர்கள் அல்ல.
உதயன்: ஒத்துக் கொள்கிறேன், ஒத்துக் கொள்கிறேன். எழிலின் கேள்விக்குப் பதிலைச் சொல்லுங்கள்.
செந்தில்: கடந்த காலத்தில் கடலுக்கு அடியில் இருந்த சில பகுதிகள் நிலப்பகுதிகளாக இருக்கின்றன. நிலப்பகுதிகள் கடல்களாகி இருக்கின்றன. ஏன், உலகின் உயர்ந்த இமயமலையே ஒரு காலத்தில் கடலுக்கு அடியில் இருந்ததாகக் கருதப்படுகிறது. லெமூரியா என இருந்த கண்டமே கடலில் மூழ்கி இருந்ததாக அறிவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.
இவ்விதமான பல மாற்றங்களுக்குப் பிறகுதான் இன்றைய கடல்களும், கண்டங்களும் உருவாயின. இக்கடல்களில் பசிபிக் மாக்கடல்தான் மிகப்பெரியது. பூமியின் பரப்பில் பாதி அளவுக்கு உள்ளது. அட்லாண்டிக் பெருங்கடல் இரண்டாவது இடத்தையும், இந்துமாக்கடல் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளன.
ஆர்டிக் கடல்தான் சிறியது. இன்னொரு உண்மை தெரியுமா-? இவ்வாறு மாக்கடல்களைப் பெயர் குறிப்பிட்டபோதும் இவை தனித்தனியாக அமைந்திருக்கவில்லை. ஒன்றோடு ஒன்று கலந்து பரவியிருக்கின்றன.
உதயன்: மாமா, கடைசியாக ஒரே ஒரு கேள்வி. கடல் நீரில் எவ்வளவு உப்பு இருக்கும். இதற்கு ஏதேனும் அளவு இருக்கிறதா?
செந்தில்: கடல்கள் வறண்டு வெறும் உப்பு மட்டுமே மிஞ்சி இருப்பதாயின் பூமியின் மேற்பரப்பின் மீது, அதாவது பூமத்திய ரேகைமீது ஒரு மைல் அகலமும் 180 மைல் உயரமும் கொண்ட உப்புச் சுவரை எழுப்பும் அளவுக்குக் கடல்களில் உப்பு உள்ளது.
சுமார் 340 சதுரமைல் பரப்புள்ள சாக்கடல் எனும் டெட்சீயில் ஏறத்தாழ 1,160 கோடி டன் உப்பு உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஒரு காலன் கடல்நீரில், அதாவது சுமார் 5 லிட்டர் கடல் நீரில் கால்பங்கு உப்பு உள்ளது.
உதயன்: நாம் பயன்படுத்தும் உப்பு கடல் நீரிலிருந்தும், உப்பு நீர் ஏரிகளிலிருந்தும், நிலப்பகுதிகளில் உப்புப் படிமங்களாக உள்ள உப்புப் பாறைகளிலிருந்தும் கிடைக்கிறது. அப்படித்தானே.
செந்தில்: ஆமாம்! உலகில் உப்புக்கு மட்டும் தட்டுப்பாடு ஏற்படவே ஏற்படாது.
எழில்: மாமா? கடற்கரைக்கு வந்து சுண்டல் வாங்கித் தராவிட்டால் எப்படி? உங்கள் செய்திகள் கடல் உப்பு போலக் கரிக்காமல் இனிக்கச் சுண்டல் வாங்கித் தாருங்கள்.
உம்! சுண்டல் சாப்பிடுவோமே. வீட்டிலும் சுண்டல், வெளியிலும் சுண்டல் சத்தான உணவுதான்.