விளையும் பயிர் வீரத்துடன் நேர்மை
வர்ஜீனியாவின் வெஸ்ட் மூர்லண்ட் கெலிண்டி மாநிலத்தில் 1732ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் நாள் பிறந்தவர் இவர்.. சிறுவயதிலேயே திடகாத்திரமான உடம்பினைப் பெற்றிருந்தார். நல்ல பிள்ளை என்ற பெயர் எடுத்தாலும், கோபம் வந்தால் அவரை யாராலும் கட்டுப்படுத்த முடியாது.
நண்பர்களுடன் சிறு கற்களை உயரே வீசி எறிந்து யார் வீசிய கல் அதிக உயரத்திற்குச் சென்றது என்ற விளையாட்டினை விளையாடு வார். பெரும்பாலும் இவர் வீசிய கல்லே அதிக உயரத்திற்குச் செல்லும். ஒருமுறை, வர்ஜீனியா வின் நேச்சுரல் பிரிட்ஜின் உச்சியைத் தாண்டிச் சென்று கீழே வந்துள்ளது இவர் வீசிய கல்.
படைவீரன் விளையாட்டு விளையாடும் போது, இவரே படைத்தளபதியாக முன்வரிசை யில் நிற்பார். இடுப்பில் வைத்திருக்கும் வாளினை (மரக்கட்டையால் செய்யப்பட்டது) உருவி உயர்த்திப் பிடித்து, கிளம்புங்கள் என்று உரத்த சத்தமிடுவார். நண்பர்கள் ஹோ என்ற கூச்சலுடன் ஓடுவார்கள்.
இவரது அம்மா ஒரு குதிரைப் பிரியை. அவர்களிடமிருந்த குறிப்பிட்ட ஆண் குதிரையின்மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தார். அந்தக் குதிரை முரட்டுத்தனமானது. குதிரை புல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்தது. சிறுவர்கள் அங்கு விளையாடச் சென்றனர்.
குதிரையை உற்றுப் பார்த்த இவர், தன் சகோதரர்களிடமும் நண்பர்களிடமும் என்னை இந்தக் குதிரையின் மீது ஏற்றி உட்கார வையுங்கள், இந்தக் குதிரையை ஓட்டப் போகிறேன் என்றார். உடனிருந்த சிறுவர்கள் மிரள, உங்களால் என்னை உட்கார வைக்க முடியுமா முடியாதா என்றார்.
குதிரைக்கு முன்பு புல்லினைக் காட்டி, முதுகில் தடவிக் கொடுத்து எப்படியோ உட்கார வைத்துவிட்டனர். கோபத்தில் குதிரை எகிறிக் குதித்து ஓடியது. உடம்பை வளைத்துக் கீழே தள்ளிவிட முயற்சி செய்தது. சிறுவனோ, ஆணியடித்ததுபோல் குதிரையின்மீது அமர்ந்திருந்தார்.
கோபம் அதிகமாகிய முரட்டுக் குதிரை, தரையில் உருண்டு புரண்டு கீழே தள்ளிவிட முயற்சி செய்தது. மனதில் வைராக்கியத்துடனும் நம்பிக்கையுடனும் குதிரையின் உடம்போடு ஒட்டி இறுகப் பிடித்துக்கொண்டு சிறுவன் அமர்ந்திருந்தான்.
எழுந்து குதித்து தன்னால் முடிந்தவரை போராடிய குதிரையானது களைத்துச் சோர்வடைந்து கீழே விழுந்தது. அதன் வாயிலிருந்து இரத்தம் வழிந்தோடியது.
சிறுவர்கள் ஓடிவந்து குதிரையைப் பார்த்தனர். குதிரை இறந்திருந்தது. சிறுவனின் சாகசத்தை _ வீரத்தைக் கண்ட மற்ற சிறுவர்கள் அனைவரும் சேர்ந்து சிறுவனைத் தூக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்பு, அம்மாவுக்கு என்ன பதில் சொல்வது என்று சிந்தித்துக் கொண்டே வீட்டிற்கு வந்தனர்.
குதிரை புல் மேய்ந்துவிட்டதா என அம்மா கேட்டார். குதிரை இறந்துவிட்டது என்றான் சிறுவன். எப்படி என்றதும் உண்மையை எடுத்துரைத்தான். மகனின் வீரத்தையும் உண்மை பேசிய திறனையும் பாராட்டினார் அம்மா.
இச்சிறுவன், பின்னாளில் அமெரிக்கா விலிருந்த இங்கிலாந்துப் படைகளுக்கும் பிரெஞ்சுப் படைகளுக்கும் 7 வருடங்கள் நடைபெற்ற பழைய பிரெஞ்சுப் போரில் (Old French War) தன் திறமையை வெளிப்படுத்தி, 27ஆம் வயதில் வர்ஜீனிய சட்டமன்ற உறுப்பினராகி 1789 ஏப்ரல் 30அன்று அமெரிக்க காங்கிரசால் _ அமெரிக்க மக்களால் குடியரசுத் தலைவராக அறிவிக்கப்பட்ட இவர் யார்? கண்டுபிடியுங்கள்.