தலைவர்கள் வாழ்வில்……..
சமஉரிமை போராளி
அமெரிக்காவில் ஜியார்ஜியா அட்லாண்டா நகரில் மார்ட்டின் லூதர் கிங் பிறந்தார். இவரது தந்தை அந்த வட்டாரத்தில் கிறித்துவத் தலைவராக இருந்தமையால் மகனும் மதகுருவாக விரும் பினார். பாஸ்டன் பல்கலைக் கழகத்தில் கிறித்துவ மதத் தத்துவங்களைக் கற்று 1954ஆம் ஆண்டில் சமயத் துறைக்கான டாக்டர் பட்டம் பெற்றார்.
நீக்ரோ மக்கள், வெள்ளையரின் கொடுமை களால் துன்பப்பட்டதைக் கண்டு கொதித்தார். பேருந்துக் கிளர்ச்சி அறப்போரினை முதலில் தொடங்கினார். அப்போது அவருக்கு வயது 26.
அமெரிக்காவில் நீக்ரோக்கள் பேருந்துகளில் பயணம் செய்யும்போது வெள்ளையர்கள் ஏறினால் நீக்ரோக்கள் எழுந்து தமது இருக்கையைக் கொடுக்க வேண்டும். கொடுக்க மறுப்பவர்களுக்கு அடி, உதை கிடைக்கும். பேருந்தின் அதிபர்களாக ஆங்கிலேயர்கள் இருந்தமையால், அவர்களும் நீக்ரோக்களுக்கு எதிராகவே செயல்பட்டனர்.
இந்த நடைமுறையினைக் கடுமையாக எதிர்த்தார் கிங். நீக்ரோக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பேருந்துகளைப் புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நீக்ரோ மக்களும் கிங் சொன்னதைப் பின்பற்றினர். பேருந்துகளில் கூட்டம் குறைந்தது.
பேருந்து நிறுவனங்களில் வேலை செய்துவந்த நீக்ரோக்களும் தங்களது வேலையை விட்டு வெளியேறினர். இதனால் பேருந்துத் தொழிலே நலிவடைந்தது.
பேருந்து உரிமையாளர்கள் லூதர் கிங்கிற்குப் பணம் கொடுக்க முன்வந்தனர்; பின்பு மிரட்டினர். எதற்கும் அசையவில்லை கிங். இறுதியில், பேருந்து தொழிலே லூதர் கிங்கால் நலிவடைந்துவிட்டதாகக் குறைகூறி கிங் மீது வழக்குத் தொடுத்தனர்.
பெரிய பெரிய வழக்குரைஞர்கள் பேருந்து உரிமையாளர் களுக்காக வாதாடினர். தனித்து நின்று வெள்ளையர்களை எதிர்த்த கிங், தன் இன மக்களுக்காக தானே வாதாடினார்.
வெள்ளையருக்குச் சமமான உரிமை நீக்ரோ மக்களுக்கு உண்டு என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கின் தீர்ப்பினால் கிங் உலகப் புகழைப் பெற்றதோடு உலகம் புகழும் தலைவரானார்.