சூழல் காப்போம்-2
– பிஞ்சண்ணா
‘இந்தப் படம் சொல்லும் சேதி என்ன’ என்று பார்த்தீர்களா? என்ன இருக்கிறது இதில்?
மரத்தில் ஒருவர் அமர்ந்திருக்கிறார். தொலைவில் சில குடிசைகள் மிதக்கின்றன.
வெள்ளம் போல் தெரிகிறது. அவ்வளவு தான்! என்கிறீர்களா?
அவ்வளவு தான்! சரியாகக் கண்டு கொண்டீர்கள். வெள்ளம் ஏற்பட்டு குடிசை வீடுகள் அடித்துச் செல்லப்படும்போது தப்புவதற்கு மரம் உங்களுக்கு இடம் கொடுக்கும். எனவே நீங்கள் மரத்தைக் காத்தால், மரம் உங்களைக் காக்கும். “Save Trees… Trees Save” என்பது தான் இதன் பொருள்.
மரம் நம்மைக் காக்கும் என்றால் வெள்ளத்திலிருந்து காக்கிறது என்பது மட்டுமல்ல பொருள். அது ஓர் அடையாளத்திற்காக, பளிச்சென்று மனதில் நிறுத்துவதற்காகச் சொல்லப்பட்டது.
முன்பெல்லாம் சுற்றுச்சூழலைத் தூய்மையாக வைத்துக் கொள்வோம் என்று தான் அனைத்து இடங்களிலும் பிரச்சாரம் நடக்கும். இப்போதோ… சுற்றுச் சூழலைக் காப்போம் என்று சொல்ல வேண்டியிருக்கிறது.
பாருங்கள் நமது தொடருக்கே நாம் சூழல் காப்போம் என்று தானே பெயர் வைத்திருக்கிறோம். ஏன் சூழலைக் காக்க வேண்டி வந்தது? அந்த அளவுக்கு அதன் நிலை போகக் காரணம் என்ன? என்று தெரிந்தால் தானே நாம் காக்க முடியும்.
தானாகவெல்லாம் அழிவு ஏற்படவில்லை. இன்றைய நிலைமைக்கு முழுக்கக் காரணமானவர்கள் நாம் தான்! நாங்களா?, நான் பிறந்தே பத்து, பன்னிரண்டு ஆண்டுகள் தானே ஆகின்றன. நானா காரணம்? என்ற உங்கள் கேள்வியில் நியாயம் இருக்கிறது.
நாம் என்றால் கொஞ்சம் நாம், நிறைய நமது முன் தலைமுறையினர். கடந்த நூற்றாண்டில் அறிவியல் வளர்ச்சியடைய அடைய இயற்கையின் அவசியத்தை கொஞ்ச காலம் அனைவரும் மறந்துவிட்டார்கள்.
இயற்கையான காட்டுத்தீ, வெள்ளம் போன்றவற்றால் அழிந்துகொண்டும் மீண்டும் வளர்ந்து கொண்டுமிருந்தன இயற்கை வளங்கள், மரங்கள், உயிரினங்கள் ஆகியவை.
மனிதன் தனது தேவைக்காக என்று காட்டை அழிக்கத் தொடங்கியது தான் இயற்கையின் அழிவுக்குப் பெரும் காரணமாக அமைந்துவிட்டது. தொழிற்சாலைகள் கட்டவும், பெரும் நிறுவனங்கள் கட்டவும், சுரங்கங்கள் தோண்டவும் பெரும் காடுகளை அழிக்கத் தொடங்கியதால், மரங்களின் எண்ணிக்கை பெருமளவில் குறையத் தொடங்கியது.
மரங்கள் தானே ஆக்சிஜன் என்னும் உயிர்வளியை அதிக அளவில் உற்பத்தி செய்கின்றன. அவற்றை நாம் எடுத்துக் கொண்டு கார்பன் டை ஆக்சைடை அல்லவா உலகத்துக்குத் தருகிறோம். ஆக்சிஜன் தரும் மரங்களை வெட்டினால், கார்பன் டை ஆக்சைடின் அளவு தானே அதிகமாகும். மழை தேவையான நேரத்தில் உருவாவதற்கான சூழ்நிலை ஏற்படாது.
மரங்கள் குறையத் தொடங்கியதாலும், தொழிற்சாலைகளின் பெருக்கத்தாலும் பூமி வெப்பமாகத் தொடங்கியது. வீடுகளைக் கட்டுகிறோம், அதற்கு நிலங்களை உருவாக்குகிறோம் என்று விவசாய நிலங்களையும், காடுகளையும் வாங்கி கொஞ்சம் கொஞ்சமாக அவ்விடங்களை கட்டிடங்கள் ஆக்கிரமித்துக் கொண்டன.
ஆறுகளின் ஒரங்களின் மரங்கள் இல்லாததால் மண்ணரிப்பு ஏற்படுகிறது. பறவைகள், உயிரினங்கள் வாழ்வதற்கான இடம் கிடைக்காமல் போய்விடுகிறது.
இயற்கையின் இயல்பை மாற்றி விடுகிறோம். முந்தைய காலங்களில் நம் மனித இனத்திற்கு உடையாகவும், இன்றும் நமக்கு உணவாகவும், பல நேரங்களில் உறைவிடமாகவும் இருக்கும் மரங்களை அழித்தால் மனிதனுக்கு மட்டுமா கேடு?
மொத்த உலகத்திற்குமல்லவா கேடு! இப்படி கொஞ்சம் கொஞ்சமாக இந்த பூமி இன்றைக்கு இருக்கும் ஆபத்தான நிலையை அடைய நாமும் காரணமாகிவிட்டோம் என்பதையும் அறிவியல் தான் கண்டுபிடித்துச் சொன்னது. அதனால் தான் இன்று சூழல் காப்பை அறிவியல் மும்முரமாக முன்னெடுக்கிறது. சரி, நாம் அதற்கு என்ன செய்யலாம். மரம் நடலாம்.
மரத்தை எப்படி நட முடியும்? அதுதானே! வளர்ந்தால் தானே மரம். மரக்கன்றைத் தான் நட முடியும். எனவே நாமும் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கலாம்.
எப்போது நடுவது?
எப்போதும் நடலாம்.
எங்கே நடுவது? சாலை ஓரங்கள் இருக்கின்றன. வீட்டுத் தோட்டங்கள் இருக்கின்றன. பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன. மைதானங்கள் இருக்கின்றன. இந்த இதழிலேயே பசுமை வெளி இயக்கம் கண்ட வங்கேரி மாத்தாய் பற்றிய செய்தியைப் படித்தீர்கள் அல்லவா? அவர் மறைந்தாவிட்டார்? அந்த மரங்கள் இருக்கும் காலம் வரை, அந்த மரங்களால் உருவாகும் புதிய மரங்கள் இருக்கும்வரை உயிருடன் இருப்பாரே! கோடிக்கணக்கான மரங்களை நட்டு வளர்த்திருக்கிறாரே! நம்மால் செய்ய முடியாதா?
நிச்சயமாக முடியும். ஒவ்வொரு ஆண்டும் பிறந்தநாள் கொண்டாடுகிறோம் அல்லவா? அன்று மரக்கன்று நடலாமே.. இது எனது 10-ஆவது பிறந்தநாளுக்கு நட்டது. இது 11-ஆவது பிறந்தநாளுக்கு… இது 12-க்கு என்று உங்கள் வளர்ச்சியை இயற்கையோடு கொண்டாடலாம்.
நம் பிறந்தநாளுக்கு மட்டுமல்ல… அக்கா, அண்ணன், தம்பி, தங்கை, அப்பா, அம்மா, பாட்டி, தாத்தா என அனைவருக்கும் பிறந்தநாள் வருகிறதே! உங்கள் வீதி முழுக்க நட்டுவிட வேண்டியது தான்.
ஒவ்வொன்றிலும் உங்கள் நினைவுக்காக குறித்துக் கூட வைக்கலாம். பரிசுப் பொருளாக பிறருக்கு மரக் கன்றுகள் வாங்கித் தரலாம். அவர்களும் அதைப் பின்பற்றக் கூடும் அல்லவா?
வீடுகளில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு வருவோருக்கு நினைவுப் பரிசாக எதை எதையோ தருவார்கள். ஆனால், நீங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களிடம் மரக்கன்று வழங்க பரிந்துரைக்கலாம்.
1000 பேருக்குத் தரும்போது அதில் பாதிப் பேராவது தங்கள் இடத்திலேயே வளர்ப்பார்கள். தங்கள் இடத்தில் வளர்க்க முடியாதவர்கள் தெரிந்தவர்களிடம் கொடுப்பார்கள். எப்படியோ அந்த கன்று வளர்ந்து கொண்டிருக்கும். எங்கோ ஓரிடத்தில் பலன் தந்து கொண்டிருக்கும் அல்லவா?
ஆசிரியர் தாத்தா பிறந்தநாளையொட்டி கடந்த ஆண்டு தமிழகம் முழுக்க மரக்கன்றுகள் நடப்பட்டன. பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் தொடர்ந்து அப்பணியைச் செய்துவருகிறது. நீங்கள் ரசிக்கும் திரைப்பட நகைச்சுவை நடிகர் விவேக், 10 லட்சம் மரக்கன்றுகளை நடும் முயற்சியில் இருக்கிறார்.
நாமும் செய்யலாம் அல்லவா? ஆண்டுக்கு 10 மரங்களைக் கூடவா நம்மால் உருவாக்க முடியாது? இது ஒரு தொடக்கம் தானே! எப்படி வளர்த்தாலும் அதன் பலனை நாம் தான் அனுபவிக்கப் போகிறோம். காயாகவோ, கனியாகவோ, கட்டையாகவோ, உரமாகவோ நமக்குத் தான் அதன் பெரும் பயனை அடையப் போகிறோம்.
இவ்வளவையும் விடுங்கள்… நாம் பிறக்கிறோம்… வளர்கிறோம்… செழிக்கிறோம்… மரணமடைகிறோம்… நமக்குள்ள உரிமை, நமக்கு எல்லாம் கொடுக்கும் மரங்களுக்கு இல்லையா? மனிதனுக்கு பயன் தந்தால் மட்டும் தான் மரங்கள் மண்ணில் இருக்க வேண்டுமா, என்ன? இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டுமானதல்லவே…
நாமே கடைசியாய் பிறந்தவர்கள் தான் என்பதற்காக நாமே உலகத்தை கடைசியாக அழித்துவிடவேண்டுமா என்ன? இன்றே செயல்படத் தொடங்குவோம். சூழல் காக்க வேண்டியதன் அவசியத்தை நாம் உணர்வதோடு பிறரையும் உணரவைப்போம்.
நமது பெரியார் பிஞ்சுகள் பழகு முகாமிலும், தாங்கள் பங்கு கொண்டதன் அடையாளமாக அனைவரும் மரக்கன்று நட்டிருக்கிறார்களே!
(காப்போம்)