பெரியன கேட்கின்
உலகின் மிகப் பெரிய
விளையாட்டு அரங்கு
வடகொரியாவில் தேதாங் நதிக்கரையோரம் 16 அலங்கார வளைவுகள் சேர்ந்தாற்போல் காட்சியளிக்கும் உலகின் மிகப்பெரிய விளையாட்டு அரங்கம் ரங்ராடோ மே நாள் விளையாட்டு அரங்கமாகும். இதில் 1,50,000 பேர் உட்கார்ந்து விளையாட்டுகளை இரசிக்கலாம். இதன் பரப்பு 6,79,133 சதுரஅடி. இதில் 8 அடுக்குகள் உள்ளன.
இந்தியாவின் மிகப் பெரிய விளையாட்டு அரங்கில் 1,20,000 பேர் அமர்ந்து பார்க்கக் கூடிய சால்ட் லேக் விளையாட்டு அரங்கம் உள்ளது. ஆனால், வடகொரியா போல் பெரியது அன்று.
– ராஜம்
வினா – விடை
1. சூரியன் வருவது யாராலே?
சுழலுது உலகம் அதனாலே,
2. சந்திரன் தெரிவது எதனாலே?
சரியும் சூரியக் கதிராலே,
3. காரிருள் வானில் மின்மினிபோல்
கண்ணில் படுவன அவை என்ன?
கணக்கில் அடங்கா விண்மீன்கள்
நம் கண்ணில் படுவதை அறிவோமே.
4. பேரிடி மின்னல் எதனாலே?
மோதுது மேகங்கள் அதனாலே.
5. பெருமழை பெய்வது யாராலே?
குளிருது மேகங்கள் அதனாலே.
6. யாரிதற் கெல்லாம் அதிகாரி?
எவரும் இதற்கில்லை அதிகாரி.
– _ எல்லாம் இயல்பாய் நடக்கிறது.
_புலவர் வீர.கலாநிதி, பழனி
நூலகத்திற்காக வேலையில் சேர்ந்தவர்
ராபர்ட் ஓப்பன் ஹைமர் என்பவர் சிறுவயதில் நூலகத்திற்குச் சென்று பல நூல்களையும் உயராய்வுக் கட்டுரைகளையும் படிக்கும் இயல்புடையவர். இவரது தந்தை, மகனைக் காணோமே என்று தேடும் போதெல்லாம் பெரும்பாலான நாள்கள் நூலகத்தில்தான் கண்டுபிடிப்பார்.
ஹைமர் படிப்பிலேயே ஆழ்ந்துவிடுவாரோ என்று அவரது தந்தை அஞ்சினார். படகு ஒன்றை வாங்கிக் கொடுத்து இன்பமாக நேரத்தைக் கழிக்கும்படிக் கூறினார். இங்கிலாந்து நாட்டின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சி மய்யங்களைப் பார்க்க ஆசை கொண்டார் ஹைமர். விளைவு, படகில் ஏறி அட்லாண்டிக் கடலைக் கடந்து இங்கிலாந்துக்கே சென்றுவிட்டார்.
படிப்பினை முடித்ததும் ஹைமருக்குப் பல பல்கலைக்கழகங்களில் இருந்து வேலைக்கு அழைப்பு வந்தது. எனினும் ஹைமர் பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வேலைக்குச் சேர்ந்தார். பல்கலைக்கழக டீன், உங்களைப் பல பல்கலைக்கழகங்கள் அழைத்தும் தாங்கள் இங்கு சேர்ந்ததற்கான காரணம் என்ன என்று கேட்டார்.
இங்கிருக்கும் நூலகத்தில் 16 மற்றும் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சில பழைய பிரெஞ்சுக் கவிதைகளை முன்பு வந்தபோது பார்த்துள்ளேன். அவற்றை மீண்டும் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில்தான் இங்கு வேலைக்குச் சேர்ந்தேன் என்று ஹைமர் பதில் கூறினார்.