ஆலங்காயா? ஆண்டவனா?
[இவ்வுலகைப் படைத்தது கடவுள். அதுவும் திட்டமிட்டு அர்த்தமுள்ளதாயும் அறிவு சார்ந்தும் கடவுளால் அது படைக்கப்-பட்டுள்ளது என்று பலராலும், பலகாலமாக கருத்துப் பரப்பப்பட்டு வருகிறது. வீடுகளிலும், வீதிகளிலும் பரப்பப்படுவதோடு நில்லாமல் பள்ளியில் பாடங்கள் வழியும் இக்கருத்து பரப்பப்பட்டு வருகிறது.]
ஒரு வழிப்போக்கன் களைப்பைப் போக்க ஒரு ஆலமரத்தின் அடியில் படுத்தான். அப்போது அவன் ஆலமரத்தை அண்ணாந்து பார்த்தான். அதன் காய்கள் சிறியதாக இருப்-பதைப் பார்த்து இவ்வளவு பெரிய ஆலமரத்திற்கு இவ்வளவு சிறிய காய். ஆனால் மெல்லிய பூசணிக் கொடிக்கு எவ்வளவு பெரிய காய்.
ஆண்டவனுக்கு அறிவில்லை என்று எண்ணியபடி தூங்கிவிட்டான். திடீரென அவன் நெற்றியில் ஓர் ஆலங்காய் வீழ்ந்து, வலியோடு திடுக்கிட்டு எழுந்தான். ஆகா! ஆண்டவன் உண்மையில் அறிவாளி! நாம்தான் முட்டாள்-தனமாய் முடிவு செய்தோம். பெரிய ஆல-மரத்திற்கு பெரிய காயை வைத்திருந்தால், அது நம் நெற்றியில் வீழ்ந்திருந்தால் விளைவு என்ன-வாயிருக்கும்! தலையே நொறுங்கியிருக்கும்.
அதனால்தான் தரையில் கிடக்கும் பூசணி பெரிதாகவும், உயரே இருக்கும் ஆலங்காய் சிறிதாகவும் ஆண்டவனால் படைக்கப்-பட்டிருக்-கிறது! என்று ஆண்டவன் படைப்பை வியந்தான் என்று பாடப் புத்தகத்தில் கதைவரும். இதைப் படிக்கும்போது பலருக்கும் கடவுள் நம்பிக்கை வரும்.
இது உண்மையா? இவ்வுலகம் ஆண்டவ-னால் திட்டமிட்டு படைக்கப்பட்டதா? கூர்ந்து சிந்திக்க வேண்டும்.
ஆலங்காய் உயரே இருப்பதால், திட்டமிட்டு சிறிதாய் ஆண்டவனால் படைக்கப்பட்டது என்பது உண்மையானால், தென்னங்காய் பெரிதாக உயரே ஏன் படைக்கப்பட்டது. அதுவும் கொத்துக்கொத்தாய் நூற்றுக்கணக்கில் ஏன் படைக்கப்பட்டடது. பெரிய தென்னை மட்டை ஏன் உயரே படைக்கப்பட்டது? பெரிய பலாக்-காய் ஏன் உயரே படைக்கப்பட்டது? சிந்திக்க வேண்டும்.
அதேபோல், ஆட்டுக்கு வாலை ஆண்டவன் அளந்து வைத்தான் என்றும் அடிக்கடி கூறுவார்-கள்.
ஆட்டின் வால் குட்டையாக இருக்கும். ஆடு அதை ஆட்டிக்கொண்டேயிருக்கும். இதுக்கே இந்த ஆட்டு ஆட்டுதே! இன்னும் நீட்டாய் இருந்தால் என்ன ஆட்டு ஆட்டும் என்ற கருத்தில் இவ்வாறு கூறுவர்.
இது ஓர் தலைகீழ் கற்பிதம். ஆட்டின் வால் குட்டையாக இருப்பதால்தான் அதை ஆட்டிக் கொண்டிருக்கிறது. வால் நீளமாக இருந்தால் அதனால் ஆட்ட முடியாது. உண்மை இதுவாக இருக்க இதைத் தலைகீழாக கற்பனைச் செய்து, ஆடு ஆட்டும் என்பதால்தான் அதன் வாலைக் கடவுள் குட்டையாகப் படைத்தான் என்று எண்ணுவது முட்டாள்தனமாகும்.
பாலைவனத்துத் தாவரங்களின் இலை சிறிதாக இருக்கும். இதைக்கண்டு, கடவுள் நம்பிக்கை-யாளர்கள், பார்த்தீர்களா? பாலைநிலத்துத் தாவரங்-களின் இலை பெரிதாக இருந்தால், அதிக நீராவிப் போக்கு நடக்கும். பாலை நிலத்தில் நீர் அரிது என்பதால் இறைவன் சிறிய இலையாகப் படைத்து நீர் விரயத்தைத் தடுத்தார் என்கின்றனர். இதுவும் ஒரு தலைகீழ் கற்பிதமே!
பாலைநிலத்தில் நீர் இல்லாமையால்தான், அத்-தாவரங்களின் இலை மெல்ல மெல்ல சிறிதாக மாறின என்பதே உண்மை! செழிப்பான நிலத்-தாவரங்களை பாலைநிலத்தில் வளர்த்து சோதித்த-போது இலைப்பரப்பு குறைந்தது. எனவே, சூழலுக்கு ஏற்ப தாவரங்கள் தங்களைத் தக அமைத்துக் கொள்கின்றன என்பதுதான் உண்மையேயன்றி, கடவுள் திட்டமிட்டுப் படைத்-ததால் அல்ல. கடவுள் திட்டமிட்டு படைத்தால், பாலைநிலத்தில் நீரைப் படைத்திருக்கலாமே! சிந்திக்க வேண்டும்.
ஆட்டின் வாலை அளந்து படைப்பதற்குப் பதில், ஆடு ஆட்டாமல் இருக்கும்படி ஆண்டவன் படைத்துவிட்டுப் போகலாமே!
பகலில் சூரியன் வெளிச்சம் தரவும், இரவில் நிலவு வெளிச்சம் தரவும் படைக்கப்பட்டிருப்பின், இரவில் எல்லா நாட்களிலும் நிலவு வெளிச்சம் தரும்படி படைத்திருக்கலாமே! நிலவு எல்லா நாள்களிலும் வெளிச்சம் தருவதில்லையே!
பூமியின் நிழல் விழும் அளவைப் பொருத்தே நிலவின் ஒளி கிடைக்கிறது. கோள்கள் இயற்கையில் அமைந்த இடத்தைப் பொருத்தே இந்த ஒளி கிடைக்கிறது என்பதுதான் உண்மையேயன்றி மற்றபடி ஒளி கொடுக்க இறைவன் படைத்ததால் அல்ல.
பசுவைப் பால்தர இறைவன் படைத்திருந்தால், கொசுவை ஏன் படைக்க வேண்டும்? ஒரு இடத்தில் தண்ணீர் இருபது அடி ஆழத்திலும், மறு இடத்தில் 2000 அடி ஆழத்திலும், இன்னொரு இடத்தில் தண்ணீரே இல்லாமலும் ஏன் கடவுள் படைக்க வேண்டும்? தண்ணீரைக் கடவுள் தந்திருந்தால் மேலே தந்திருக்கலாமே! ஆக, எல்லாம் இயற்கையாய் அமைந்ததே தவிர கடவுள் படைப்பால் அல்ல; கடவுளும் இல்லை என்பது இவற்றிலிருந்து தெளிவாகிறது.
- சிகரம்