கியூபாவின் கொடை ஓசே மார்த்தி
சேகுவேரா, காஸ்ட்ரோவின் முன்னோடி
உலகத்தில் ஏகாதிபத்திய நாடுகளின் காலனி ஆதிக்-கத்தின் கீழ் அடி-மைப்பட்டு, நீங்காத அல்ல-லுக்கு ஆட்-பட்ட மக்-களின், நீடு துயர் நீக்கத் தொடர்ந்து பாடுபட்ட செயல்வீரர்தான் ஒசே மார்த்தி. இவரது நாடு வட அமெரிக்கக் கண்டத்தின் தெற்கில் அமைந்த மிகச் சிறிய தீவாகிய கியூபா. இன்று உலக மக்கள் உள்ளங்களில் விடுதலைச் சிந்தனைகளைத் தூவிய சேகுவேரா மற்றும் பிடல் காஸ்ட்ரோவின் முன்னோடி.
அமைதியான வழியில் ஒரு நாட்டிற்கு விடுதலை பெற இவருடன் இணைந்து கியூபாவின் சுதந்திரத்திற்குப் போராடியவர்கள் அன்டோனியோ மாசியோ (Antonio Maceo) மற்றும் மேக்சிமோ கோமேஸ் (Maximo Gomez). எனினும் மார்த்தியின் பெயர் கியூபாவில் பதிவு பெற்ற அளவு ஏனைய விடுதலைப் போராட்ட வீரர்கள் மக்கள் நெஞ்சங்களில் இடம்பெறவில்லை;
பிறப்பும் உழைப்பும்
கியூபா நாட்டில் ஹவானா என்ற இடத்தில் 1853ஆம் ஆண்டு மரியா-நோ மார்த்தி (Mariano Marti) மற்றும் லியோனார் ஃபெரேஸ் (Leonor Perez) என்பவர்களுக்கு ஒரே மகனாகப் பிறந்தார்.
இவருடன் பிறந்த ஆறு-பேரும் சகோதரிகள். விளையும் பயிர் முளையி-லே தெரியும் என்பதற்கேற்ப இவர் இளம் வயதிலேயே சிறந்த ஓவியராக, சிற்பியாக, பல்துறை நுட்பங்களை உணர்ந்த கலைஞனாகத் தன்னை அறிமுகப்-படுத்-தியவர். பதினாறு வயதி-லேயே உள்-நாட்டுச் செய்தித் தாள்களில் தலையங்கம் தீட்டவும் – பாடல்-களை எழுதி நாட்டு விடுதலைக்காக உரமூட்டவும் விழைந்தார்.
இவரது உணர்வு-பூர்வமான கவிதைகளும் கட்டுரைகளும் தேசத்துரோகத்தைத் தூண்டுவதாகக் கூறி 16 வயதிலேயே விலங்கிட்டுக் கொடுஞ் சிறையில் தள்ளப்பட்டார்.தனது நாட்டிலிருந்து ஸ்பெயின் நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டார். அங்குதான் இவரது படிப்பு முழுமை அடைந்தது ஸ்பெயின் நாட்டில் மனித உரிமைகள் பற்றிய துறையில் சட்டம் பயின்றார்.
அத்துடன் தத்துவம், இலக்கியம் ஆகிய துறைகளிலும் பட்டம் பெற்றார். இளம் வயதில் சிறைச்சாலையில் கால்களில் கடுமையாக விலங்கிடப்பட்டதால் ஸ்பெயின் நாட்டில் படித்துக் கொண்டிருந்தபோது இரண்டு முறை அறுவை சிகிச்சை மேற்-கொண்டார்.
தனது வாழ்நாள் இறுதிவரை தடியின் துணையுடன் நடந்துசெல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.
பொதுநல வேட்கை:
ஸ்பெயின் நாட்டில் இவரது வாழ்நாள் நண்பர் ஃபெர்மின் வால்டெஸ் (Fermin Valdes) துணையுடன் பிரான்சு சென்றார். 1875 ஆம் ஆண்டு அங்கிருந்து மெக்சிகோ சென்றார். கியூபாவின் விடுதலைக்கு வேண்டிய பல வியூகங்களை இங்கிருந்து தீட்டவும் அங்கிருந்து நியூயார்க் நகர் சென்று தன்னொத்த புரட்சியாளர்களைச் சந்திக்கவும் இந்தக் காலக்கட்டம் இவருக்கு உதவியது. ஆகையால் 1875 ஆம் ஆண்டு இவர் மெக்சிகோவில் காலடி எடுத்து வைத்த ஆண்டு இவரது வாழ்வின் வசந்தகாலம் எனலாம். அவ்வாண்டு அவர் எழுதிய நாடகம் ‘Love is repaid by Love’ பெரு வெற்றி-யைத் தேடித் தந்தது.
மெக்சிகோவிலிருந்து கௌதமாலா சென்று வரலாறு, இலக்கியம் ஆகிய துறைகளில் பேராசி-ரியராகப் பணிபுரிந்தார். அந்த நாட்களில் ரால்ப் எமர்-சன் மற்றும் வால்ட் விட்மேன் ஆகிய பிரசித்தி பெற்ற கவிஞர்களின் கவிதைகளை விரும்பிப் படித்தார். அவர்களை நேசித்தார். ஏனெனில் அவர்கள் இருவரும் மக்கள் கவிஞர்கள். மார்த்தி, கியூபாவின் சுதந்திரத்-திற்குத் தொடர்ந்து குரல் கொடுத்ததால் ஆசிரியப்பணியைத்தான் செய்ய முடிந்தது. சட்ட ஆலோசகராக, வழக்கறிஞராகப் பணியாற்ற அனுமதி மறுக்கப்பட்டது.
இவர் நியூயார்க் நகர் சென்று பல செயற்கரிய செயல்களில் கியூபாவின் சுதந்திரப் போராட்டத்திற்கு வலுவூட்டி-னார். கியூபா அரசினால் நாடு கடத்தப்பட்ட பலரின் உதவி இவருக்குக் கிட்டியது. 1880இல் கியூபாவின் விடுதலைக்கு குரல் கொடுத்த பலர் முன்னிலையில் பனிநிறைந்த ஜனவரி மாதத்தில் நியூயார்க் நகரின் ஸ்டெக் அறையில் (Steck Hall) இவர் பேசிய பேச்சு கேட்டார் பிணிக்கும் தன்மையைப் பெற்று, கேளாதாரும் வியக்கும் வகையில் அமைந்திருந்தது. சுதந்திரக் கனல் மூண்டது – மக்கள் இதுவரை அத்தகைய ஒரு உணர்வுபூர்வமான – சுதந்திர தாகம் கொண்ட புரட்சி வெள்-ளம் கரைபுரண்டோடும் பேச்சைக் கேட்ட-தில்லை. ஒசேயின் பேச்சு மட்டுமல்ல; இவர் எழுத்துக்-களும், கவிதையும் அத்தகு நுட்பமும் – திட்பமும் வாய்ந்-தவை.
சுதந்திரம் என்பது எது
இவர் சுதந்திரம் என்பதற்குப் புதிய விளக்-கம் தந்தவர். எந்த ஒரு நாடு கல்வி, தொழில், சமுதாயம், கட்டமைப்பு ஆகிய அனைத்துத் துறைகளிலும் தன்னிறைவு பெறுகிறதோ அதுதான் உண்மையான சுதந்திரம். சமதர்ம சமுதாயம் என்பது எல்லாக் கோண-ங்களிலும் தனித்தன்மை உடைய ஒரு நாட்டை உருவாக்குவதே ஆகும். ஒருவரைப் பார்த்து வேறு ஒருவர் போலியாகப் பின்பற்றும் எந்த ஒரு குறிக்கோளும் மக்களுக்கு மன நிறைவு தராது என்பது இவரது கருத்து.
எந்த ஒரு நாட்டில் சிறு, குறு விவசாயிகள் அதிக அளவில் உள்ளார்களோ அந்த நாடு வசதி படைத்த நாடு. அதே சமயம் எந்த ஒரு நாட்டில் பெருநிலக் கிழார்கள்-ஏராளமாக இருக்கிறார்களோ அந்த நாடு வறுமையின் பிடியில் சிக்கியுள்ள நாடு. இதைப் புரிந்து இன்றும் செயல்பட்டால் உலகில் வறுமை ஒழியும், இல்லாமை இல்லாமல் போகும்; வாழ்வு சிறக்கும் வளம் கூடும்.
பல நாடுகளுக்கு அரசியல் சூழல் காரணமாகக் கடத்-தப்பட்ட போதிலும் இவர் வாழ்ந்த 42 ஆண்டுகளில் மகத்தான கல்வி பணியாற்றி-யுள்ளார். இவர் வகுத்த பாதையில் இன்று கியூபாவின் இளைஞர்கள் வெற்றி நடை-யிட்டு – பிறர் துன்பம் கண்ட இடத்தி-லெல்லாம் தமது அறிவு-பூர்மாக ஆக்கப்-பணிகளைச் செயல்படுத்தி மாந்தநேயத்தை உலகில் விதைத்துள்ளனர்.
புரட்சி என்ற சொல்லுக்குப் புதுவடிவம் தந்தவர் ஓசே. தம் நாட்டில் உள்ள மக்கள் இனம் கடந்து, கருப்பர் வெள்ளையர் என்ற பாகுபாடின்றி நாட்டின் விடியலுக்குப் (சுதந்திரத்திற்கு) போராட வேண்டும். அப்படிப் போராடும் போது கிராம மக்களின் (தனியாரின்) சொத்துக்கள் அழிக்கப்படக் கூடாது. போராட்டம் வெறியாக மாறக் கூடாது.
அதேசமயம் புரட்சி கியூபாவின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதாக இருத்தல் வேண்டும். என்று குறிப்பிட்-டுள்ளார். அதாவது செல்வம் வளம்மிக்க நாடுகள் ஏழ்மையில் வாடும் நாடுகளுக்குப் பொரு-ளுதவி செய்ய வேண்டும். அப்படி இல்லாமல் எல்லாச் செல்வங்களையும் தாமே அனுபவிக்க விழைந்தால் ஆயிரம் தொல்லைகள் (போர்கள்) வந்து சேரும் என்று கூறிய ஒசே மார்த்தி 1895ஆம் ஆண்டு மே 19ஆம் நாள் மறைந்தார். – கியூபாவின் விடுதலை வேள்வியில் புரட்சிக் கனல் வீசிய ஒசே மார்த்தியின் பிறந்தநாள் ஒவ்வொரு வருடமும் கியூபா நாட்டு மக்களால் கொண்டாடப்படுகிறது.
– சாரதாமணி ஆசான்