கைமேல் பலன்
சுந்தர் ஓரளவு நன்றாகப் படிக்கக்கூடிய நல்ல பையன்தான். ஆனால் சற்று விளையாட்டுப் புத்தியும் அதிகம். பள்ளி-விட்டு வந்தவுடன், வீட்டுப் பாடத்தை எழுதியபிறகு விளையாடப் போகச் சொல்-வாள் அவன் அம்மா. ஆனால் சுந்தர் கேட்கமாட்டான். எல்லாம் அப்புறமா எழுதலாம் என்று கூவியபடியே, புத்தகப் பையை மேசைமேல் எறிந்துவிட்டு, விளையாட உடனே வெளியில் ஓடிடுவான்.
இருட்டிய பிறகு களைப்பாக வந்து சேருவான். சாப்பிட்டுப் படுக்கத்தான் தோன்றும். காலையிலும் நேரம் கழித்தே எழுவான். அவசர அவசரமாக வீட்டுப் பாடங்-களை எழுதி, பள்ளிக்கு ஓடுவான். என்ன சொன்னாலும் அவன் இந்த வழக்கத்தை மாற்றவேயில்லை.
ஒரு நாள் விளையாடும்போது விழுந்து முழங்காலில் அடிபட்டது. அவன் அம்மா டாக்டரிடம் காட்டி, கட்டுப்போட்டு, கூட்டிவந்தாள். களைப்பினால் இரவு நன்றாய் உறங்கிப் போனான். மறுநாள் காலையில் அசதியுடன் எழுந்து பள்ளிக்குச் சென்றான்.
ஆசிரியர், எல்லோரிடமும் வீட்டுப்பாடக் கட்டுரையை எழுதியாகிவிட்டதாவெனக் கேட்டார். எழுதாத ஒவ்வொரு மாணவனை-யும் காதைப் பிடித்துத் திருகினார். சுந்தருக்கும், அப்போதுதான், அவனும் கட்டுரை-யை எழுதவில்லை என நினைவுக்கு வந்தது. ஆசிரியரின் காதுத்திருகலின் வலியை எண்ணி பயந்தான். அதனைத் தவிர்ப்பதற்காக உடனே ஆசிரியரிடம் ஒரு பொய்யைச் சொல்லித் தப்பிக்க-லாமென எண்ணினான்.
சார், நான் நேற்று பள்ளி-முடிந்து வீட்டுக்-குப் போகிற வழியில், தவறி விழுந்ததால் காலில் அடிபட்டது. என்னு-டைய புத்தகங்க-ளெல்லாம் சிதறி விழுந்ததில், கட்டுரை நோட்டு மட்டும் சாக்கடைக் கால்வாய்க்குள் விழுந்துவிட்டது. டாக்டரிடம் போகவேண்டி-யிருந்ததாலும், கட்டுரை நோட்டில்லாததாலும் எழுதவில்லை என்று கூறியபடியே காலில்பட்ட காயத்தைக் காட்டினான்.
ஆசிரியரும் அதை உண்மையென நம்பி, சரி, நாளைக்கு ஞாயிற்றுக்-கிழமைதானே? ராஜாவின் கட்டுரை நோட்டை வாங்கிக் கொண்டுபோய், ஒரு புதிய கட்டுரை நோட்டில், பழைய எல்லாக் கட்டுரை-களையும் சேர்த்து எழுதி, திங்கட்கிழமை காலையில் கொண்டுவா. திங்கட்கிழமை மாலை இன்ஸ்-பெக்டர் வருகிறார் என்றார்.
அய்யையோ, இதென்ன இப்படி ஆகி-விட்டதே? சின்னப் பொய் சொன்னால் தப்பிக்கலாமென்று நினைத்தால், பெரிய தண்டனையாகிப் போனதே? இரண்டு பக்கம் எழுதுவதற்குப் பதிலாக, கிட்டத்-தட்ட முப்பது பக்கங்கள் மறுபடி எழுதணுமே? பழைய கட்டுரைநோட்டையும் இனிமே காட்ட முடியாதே? சாக்கடையில் விழுந்து விட்ட-தெனப் பொய் சொன்னதற்கு இரட்டிப்புத் தண்டனையா? என்று சுந்தர் வருந்தினான்.
தன்னுடைய தாயார் சொன்ன மாதிரி வீட்டுப் பாடம் முதலிலேயே எழுதியபிறகு விளையாடப் போயிருந்தால இந்தத் தண்டனையிலிருந்து தப்பித்திருக்கலாம். விளையாட்டுப் புத்தியாலும், தாய்ச் சொல்லைக் கேளாததாலும், பொய் சொன்னதாலும் இந்தப் பெரிய தண்டனை, கைமேல் பலனாய் ஆனதே என்று அவன் உணர்ந்து, தன் தவறுக்காக வருந்தி, இனிமேல் ஒழுங்காக இருக்கவும், பொய் பேசாதிருக்கவும் மனதில் உறுதி பூண்டான்.
– கே. பி. பத்மநாபன்