தடைகளைக் கடந்த தடகள வீராங்கனை
வில்மா ருடோல்ப் Wilma Rudalph (1940 – 1994)
சிறுவயதில் போலியோ நோயால் தாக்கப்பட்டு நடக்கும் திறனை இழந்தவர் வில்மா ருடோல்ப். மருத்துவர்கள் ஆராய்ந்து இனி இவர் துணை இன்றித் தனியாக நடக்க இயலாது என்று அறிவித்தனர். அந்தக் கணமே தன்னம்பிக் கையாலும் _ தன் குடும்பத்தினரின் அரவணைப் பினாலும் முயன்று தனியாக நடந்து காட்டி, ஏன்? இவருக்கு இணையாக உலகில் வேறு எவரும் ஓடமுடியாது என்று வென்று காட்டி, உலகத்தார் நெஞ்சங்களிலெல்லாம் வியப்பையும், உற்சாகத்தையும் ஊட்டியவர்தான் கருப்பின முத்து வில்மா ருடோல்ப்.
பிறப்பும் சூழ்நிலையும்
1940ஆம் ஆண்டு ஜூன் 23ம் நாள் ஏழ்மையான கருப்பினக் குடும்பத்தில் வில்மா ருடோல்ப் பிறந்தார். பிறக்கும்போதே குறைந்த எடை உடையவராக, ஊட்டச்சத்து குறைந்த வராக இருந்தார். தாயின் தொடர் கண்காணிப் பிலும் இடையீடில்லா முயற்சியினாலும் குழந்தை வில்மா காப்பாற்றப்பட்டார். தந்தை ருடோல்ப் இரயிலடியில் சுமை தூக்கும் தொழிலாளி, தாயார், வெள்ளையர்கள் வீடுகளில் வீட்டு வேலைகளைச் செய்யும் பணிப்பெண். மேலும் இவர் பிறந்த காலகட்டத்தில் அமெரிக்க அய்க்கிய நாட்டில் பெரும் பொருளாதார நெருக்கடி (The Great Depression). அதனால் பெரும்பாலான மக்கள் வேலை இழந்து, வீடுகளையும் இழந்து பல இன்னல்களுக்கு உள்ளாயினர். இந்த சூழலில் வேலை இன்மையால் இவர் குடும்பம் வறுமையின் பிடியில் வாடியது – குழந்தைகளுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் நிறைந்த உணவு வழங்க இயலா நிலை _ இதனால் பல நோய்கள் தொடர்ந்து வில்மாவைத் தாக்கின. தட்டம்மை, நிமோனியா ஆகிய நோய்கள் இவரை வாட்டின. தனது 4—–_வது வயதில் போலியோ நோயால் தாக்கப்பட்ட வில்மாவின் இடது கால் செயல் இழந்தது. துணையின்றி நடக்க இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டார்.
தன் முயற்சி தற்சார்பு
பல மருத்துவர்கள் பரிசோதித்து இடது காலில் கால்பிடிப்பு வளையத்தைப் பொருத்தி அவ்வளையத்தின் துணையுடன் நடக்க வழி வகுத்தனர். வாழ்நாள் முழுதும் இவ்வளையத்தின் துணையின்றி வில்மாவால் நடக்க இயலாது என்பது மருத்துவர்களின் கணிப்பு. ஆனால் இவர் உடன் பிறந்தவர்களும் _ இவரது தாயாரும் எப்பாடுபட்டாயினும் கால்பிடிப்பு வளையங்கள் துணையின்றித் தனியாக நடக்க இவருக்கு உற்ற துணை புரிந்தனர். வசதியின்மையாலும் _ கருப்பினத்தவர் என்பதாலும் இவர் பிறந்த டென்னெஸ்ஸி (Tennessee) மருத்துவமனைகளில் மருத்துவம் பார்க்க இயலா நிலை. ஆனால் இவரது ஊரிலிருந்து 50 மைல் தொலைவில் இவர்களுக்கென்றே (கருப்பினத்தவர்) அமைக்கப்பட்ட நாஷ்வில்லில் அமைந்த மேஅறி (Meharry) மருத்துவமனையில் தொடர் சிகிச்சை இவருக்கு அளிக்கப்பட்டது. வாரம் இருமுறை இம்மருத்துவமனைக்குச் சென்று தக்க பயிற்சிகளை மேற்கொண்ட வில்மா, தனது 7-_ம் வயதில் பள்ளியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருடன் பயின்ற மாணவர்கள் விளையாட்டில் ஆர்வமுடன் பங்கேற்றதைக் கண்டார். தானும் அவர்களுக்கு நிகராக தனது சொந்தக்காலில் (வளையங்களைத் தவிர்த்து) விளையாட உறுதி பூண்டார். பெற்றோரும், உடன்பிறந்தோரும் இவருக்கு உற்ற துணையாய் நின்றனர். வலிவிழந்த கால்கள் வலிவும், உறுதியும் பெற்றன; உள்ளத்தில் நம்பிக்கை துளிர்விடத் துவங்கியது.
திருப்பு முனை:
வில்மா தனது 9_வது வயதில் தனது கால்பிடிப்பை அகற்றித் தன்னந்தனியாக மெதுவாக நடைபயில ஆரம்பித்தார். சிறிது சிறிதாக முன்னேறித் தன் 12_ஆம் வயதில் கூடைப்பந்து விளையாட்டின் நுட்பங்களை உணர்ந்து – இவ்விளையாட்டின் சிறந்த வீராங்கனையாகப் பள்ளியில் திகழலானார். ஒருமுறை 49 புள்ளிகள் பெற்று மாநில அளவில் முதன்மை பெற்றார்.
இவரது தலைமையில் விளையாடி முதல் இடத்தைப் பெற்றுத்தந்த வில்மாவின் தனித்தன்மையை எட் டெம்பில் (Ed Temple) நன்கு உணர்ந்தார். இவர் டென்னசி பல்கலைக் கழகத்தின் பயிற்றுனர் ஆவார். கூடைப்பந்து விளையாட்டில் மட்டுமல்லாமல் தடகளம் பயிற்சியிலும் பங்குபெற இவர் வில்மாவுக்கு அழைப்பு விடுத்தார். பல்கலைக் கழக வளாகத்தில் இவருக்கு சிறப்புப் பயிற்சிகள் அளித்தார் (Ed Temple) எட் டெம்பில். வில்மா இடைவிடாமல் ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டு _ ஓடுவதற்கென்றே பிறந்தவர் இவர் எனப் பாராட்டப் பெற்றார்.
She was not born to walk,
She was born to RUN…
வாய்ப்பும் பதக்கமும்
நாடு, மொழி, இனம், மதம், நிறம் ஆகிய வேற்றுமைகளைக் கடந்து, விளையாட்டுத் துறையில் முன்னணியில் நிற்கும் அனைவர்க்கும் பொதுவாகப் பாராட்டும் -_ பரிசும் நல்கும் ஒலிம்பிக் போட்டிகள் பெருமைக்கு உரியவை. அத்தகு பெருமை சார்ந்த ஒலிம்பிக் போட்டிகளில் தடகளத் துறையில் போட்டியிடத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்குப் பெரிதும் உதவியவர் எட் டெம்பில் என்ற தலைசிறந்த பயிற்சியாளர். 1956ஆம் ஆண்டு தனது 16ஆம் வயதில் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் பந்தயத்தில் இவர் அமெரிக்க நாட்டின் சார்பில் 4x 100 மீட்டர் தொடர் தடகளப் போட்டியில் முதன்முதலாகப் பங்கேற்று வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
அமெரிக்காவின் சார்பில் போட்டியிட்டவர்களில் பங்குபெற்ற மிகவும் இளையவர் என்ற பெருமைக்கு உரியவரானார்.
இவ்வெற்றியை இவர் ஒரு துவக்கமாகவே எடுத்துக்கொண்டார். அடுத்து 1957ம் ஆண்டு டென்னசி பல்கலைக் கழகத்தில் மேற்படிப்புக் காகவும் _ தடகளப் போட்டிப் பயிற்சிக்காகவும் இப்பல்கலைக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். இவரது பயிற்சியாளர் எட் டெம்பில் ((Ed Temple) இவரிடமிருந்த அபார ஆற்றலை அறிந்து தனது செலவிலேயே, முழு ஈடுபாட்டுடன் அதிக நேரப் பயிற்சி அளித்தார். கல்லூரிகளுக்கான தடகளப் போட்டிகளில் இவர் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். 1960ஆம் ஆண்டு ரோம் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் பந்தயங்களில் பங்கேற்க மீண்டும் தகுதி பெற்றார்.
இவர் 100 மீட்டர், 200 மீட்டர், 4x 100 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டிகளில் கலந்துகொண்டு மூன்று தங்கப் பதக்கங்களை ஒட்டுமொத்தமாக வென்று தங்க மங்கை என்ற பெருமைக்கு உரியவரானார். ஒலிம்பிக் போட்டிகளில் ஆடவர்க்கு நிகராக மகளிரும் பெருவெற்றி பெற முடியும் என்பதை நிலைநாட்டிய முதல் அமெரிக்கப் பெண்மணி இவரே. ஒரு காலகட்டத்தில் தனித்து நடக்க முடியுமா? என்ற நிலையில் இருந்து படிப்படியாக முயன்று இவருக்கு இணையாக உலகில் யாராலும் ஓடமுடியாது என்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியவரும் இவரே.
சமுதாய ஒற்றுமை
அமெரிக்க குடிமக்கள் ஒவ்வொருவரும் இவரது வெற்றியைப் போற்றினர். இவ்வெற்றியின் பயனாய் அமெரிக்காவில் காலூன்றி இருந்த நிறவெறி அகன்றது.
கருப்பு இனத்தவரும் வெள்ளை இனத்தவரும் இணக்கமாக வாழ வழிகாட்டியவர் இவர். தங்கப் பதக்கங்களை வென்று ரோமிலிருந்து அமெரிக்காவுக்குத் திரும்பிய இவரை வரவேற்பதில் கருப்பினத் தவர்களும், வெள்ளை இனத்தவர்களும் ஒற்றுமையுடன் ஒன்றிணைந்தனர். இது இவரது வரலாற்றில் மட்டுமல்லாது உலக வரலாற்றிலேயே ஒரு திருப்புமுனையாகும்.
ஆடவர் பிரிவில் தடகளப் போட்டிகளில் ஒட்டுமொத்தமாக மூன்று தங்கப் பதக்கங்களை வென்ற கருப்பின வீரர் ஜெசி ஓவன்ஸ்சுக்குக் கிடைக்காத வரவேற்பு இவருக்கு கிடைத்தது. அமெரிக்க ஜனாதிபதி ஜான்_எப்_கென்னடியின் தலைமையில் இவருக்குச் சிறப்புச் செய்யப்பட்டது.
பயிற்றுநர் பங்கும் அதனால் இவர் பெற்ற உயர்வும்
ஒலிம்பிக்கில் தடகள வீராங்கனை என்ற தகுதியைப் பெற்ற இவருக்குப் பல நாடுகளில் இருந்து பாராட்டும் பட்டங்களும் வழங்கப்பெற்றன. கருப்பு முத்து என்றும், கருப்பு வைரம் என்றும், கருப்பு மான் என்றும் அழைத்துப் பெருமைப்படுத்தினர். இத்துடன் உலகின் வேகமான பெண்மணி என்ற சிறப்பைப் பெற்றார். இவரைப் பேட்டி கண்ட பத்திரிகையாளர்கள் இவர் அடைந்த வெற்றியில் சிறந்தது எது என்று வினவியபோது தனியாக ஓடிப்பெற்ற வெற்றியைவிட தொடர் ஓட்டத்தில் சக நண்பர்களுடன் ஓடிப்பெற்ற வெற்றியைப் பகிர்ந்து கொண்டதுதான் நான் பெற்ற சிறந்த வெற்றி என்று குறிப்பிட்டது இவரது உயர்ந்த பண்பாட்டை வெளிப்படுத்தியது.
இப்பெரு வெற்றிக்குப் பின்னர் அவர் டென்னசி பல்கலைக் கழகத்தில் மீண்டும் இணைந்தார்; இளங்கலைப் பட்டம் பெற்றார். ஆசிரியராகப் பணியேற்றுச் செயல்படத் துவங்கினார்; அத்துடன் தடகளப் பயிற்சியாளராகவும், தேசியத் தொலைக்காட்சியில் விளையாட்டு ஒலிபரப்பாளராகவும், பல்வேறுபட்ட துறைகளில் உள்ளவர்களுக்கும் நம்பிக்கையூட்டு பவராகவும் திகழ்ந்தார். இதைத் தொடர்ந்து வில்மா என்ற சுயசரிதையை எழுதினார்.
அதில் தம் இளமைக் காலத்தில் தோன்றிய தடைக்கற்களை பெருமுயற்சியால் வெற்றியின் படிக்கட்டுகளாக மாற்றிய செய்திகளைப் பதிவு செய்தார். இப்புத்தகம் பின்னர் ழிஙிசி நிறுவனத்தால் தொலைக்காட்சித் தொடராக வெளியிடப்பட்டது.
வில்மா அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்தைத் தொடங்கி சிறுவர்களுக்கும், உள்ளூர் மக்களுக்கும் கல்வி மற்றும் விளையாட்டு பயிற்சிகள் அளிக்க வழிவகுத்தார். இங்ஙனம் ஒரு தடகள வீராங்கனையாக, ஆசிரியராக, எழுத்தாளராக, கொடையாளராக, பலரது வாழ்வின் முன்னேற்றத்துக்கு உந்து சக்தியாக இவர் திகழ்ந்தார். அதற்குச் சான்றாக பிளோரன்ஸ் கிரிபித் ஜாயினர் (திறீஷீக்ஷீமீஸீநீமீ நிக்ஷீவீயீயீவீலீ யிஷீஹ்ஸீமீக்ஷீ) இவரைப் பின்பற்றி ஒரே ஒலிம்பிக்கில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்று பெருமைக்கு உரியவரானார்.
வாழ்க்கைக் கல்வி:
இவர் 1963ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு நான்கு குழந்தைகளுக்குத் தாயானார். என்னால் முடியாது என்ற வார்த்தைக்கே இடம் இல்லாமல் வாழ்ந்து காட்டினார்.
உழைப்பின்றேல் உயர்வில்லை; போராட்டம் இன்றேல் வெற்றி இல்லை என்பது இவர்தம் வாழ்வில் காட்டிய வழி. மருத்துவ உலகம் இவர்தம் சாதனைகளை ஒரு புதுமை என்று வியந்தது. வாழ்வில் முடியாது என்பதை முயற்சியாலும் நடக்காது என்பதைத் தன்னம்பிக்கையாலும் வென்று காட்டியவர். இவர் 1994ஆம் ஆண்டு நவம்பர் 12_ம் நாள் மறைவுற்றார்;
எனினும் உலகத்தார் உள்ளங்களில் எல்லாம் நீக்கமற நிறைந்து புகழால் தம் வாழ்வில் நிறைவுற்றார்.