சூழல் காப்போம்-7
மின்சார சிக்கனம்பற்றி கடந்த மாத இதழில் பார்த்தோம்.
இன்னும் பல மாதங்களுக்கு இதைப் பேச வேண்டும் போலிருக்கிறது.
கடந்த மாதம் 12 மணிநேரம் மின்வெட்டு என்று எழுதியிருந்தோம்.
இப்போது அது 16 மணி நேரத்தைத் தாண்டி 18 மணி நேரத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.
ஒரு யூனிட் மின்சாரம் எப்படிச் செலவாகிறது என்று ஒரு பட்டியல் இதோ:
ஏ.சி.பெட்டி 1 1 மணி நேரம் = 1 யூனிட்
ஹீட்டர் – 1 மணிநேரம் = 1 யூனிட்
பிரிட்ஜ் – 7 மணிநேரம் = 1 யூனிட்
டிவி பெட்டி – 10 மணிநேரம் = 1 யூனிட்
ஃபேன் -15 மணிநேரம் = 1 யூனிட்
விளக்கு – 29 மணிநேரம் = 1 யூனிட்
இதில் முதல் மூன்றும்தான் அதிகம் மின்சாரத்தைக் காலி செய்கின்றன. இவற்றை ஓரிரு செல்சியஸ் குறைத்துக் கொண்டால் கூட அதனால் மின்சாரம் சிக்கனமாகும் என்கிறார்கள்.
இவைதவிர, டி.வி., டி.வி.டி., கணினி போன்றவற்றை ஸ்டாண்ட் பை_யில் வைக்காமல் தேவையில்லையென்றால் அணைத்து விடுங்கள் என்கிறார்கள்.
இதை எழுதும்போது, எனக்கு என் வீட்டு நினைவு வருகிறது. நான் இன்னும் கொஞ்சம் சிறுவனாக இருக்கும்போது, இப்படி மின்சாரத்தை வீணடிக்கும் வேலையை யெல்லாம் நானும் செய்திருக்கிறேன்.
அறையிலிருந்து வெளியேறும்போது விளக்கை/மின்விசிறியை அணைக்காமல் வருவது, தொலைக்காட்சியை முழுவதும் அணைக்காமல் (off), தூங்கு நிலையில் அணைப்பது (stand by mode), கணினியை இயங்குநிலையில் (On) வைத்துவிட்டு, வேறு பணிகளைச் செய்துகொண்டிருப்பது போன்று கொஞ்சம் கொஞ்சம் மின்சாரத்தை நானும் வீண் செய்திருக்கிறேன்.
அப்போதெல்லாம் என் தந்தைதான் ஓடிச்சென்று மின்விளக்கை அணைப்பது, மின்விசிறியை அணைப்பது என்று வீணாவதைத் தடுப்பார்.
அத்துடன், இப்படி வீணடிப்பது தவறு என்றும் சுட்டிக்காட்டிக் கொண்டேயிருப்பார். நானோ, நாம்தான் இதற்கெல்லாம் பணம் கட்டுகிறோமே, என் இஷ்டத்திற்கு செயல்படக்கூடாதா? என்று கேட்பேன்.
ஓரிரு ரூபாய்களுக்காக இவ்வளவு கண்டிப்பு தேவையா என்றும் கடுப்படைவேன்.
ஆனால், பணம் கட்டுகிறோம் என்பதற்காக வீணாக்குவதா? இந்த மின்சாரத்தைத் தயாரிக்க எவ்வளவு செலவு? அதனால் எவ்வளவு சூழலை அழிக்க வேண்டி இருக்கிறது என்ற கேள்விதான் எனக்குக் கொஞ்சம் அறிவைத் தந்தது.
அதன் பிறகு மின்சாரம் தயாரிக்க எவ்வளவு பிரச்சினை? எத்தனை மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து, நமக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்ய அழிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதெல்லாம் புரிந்தது.
இப்படியெல்லாம் எழும் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யத்தான் இப்போது மாற்று முறைகளை நாம் யோசிக்கிறோம். நாம் பயன்படுத்தும் பொருட்களின் குப்பை கள், கழிவுகள் போன்ற வற்றிலிருந்து மின்சாரம் தயாரிப்பதன்மூலமாக கழிவுகளையும் முறையாக அப்புறப்படுத்தி, அதைக்கொண்டே மின்சாரத்தையும் தயாரிக்கலாம். இந்த மாற்று மின்சக்தி முறையை நமது பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது.
சரி, இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். மின் உற்பத்தியில் சிறந்து விளங்கும் நாடுகளே மின்சாரத்தை சிக்கனமாக்குவதுபற்றி எப்படியெல்லாம் யோசிக்கின்றன என்பதைப் பார்ப்போம் என்று சொன்னேனல்லவா கடந்த இதழில்…
இதோ, ஒரு எடுத்துக்காட்டு. ஸ்டாக்ஹோமில் செயல்படுத்தப்படும் முறை ஒன்று!
நகரும் படிகள் ((Escalator)), மின் தூக்கிகள் (Lift) வந்த பிறகு நம்மில் பெரும்பாலோர் மாடிப்படிகளில் ஏறுவதைக் குறைத்துக் கொண்டோம். ஒரு மாடி ஏறுவதற்குக் கூட நமக்கு மின் தூக்கி தேவைப்படுகிறது. அதிலும் குழந்தைகளுக்கு மின்தூக்கி என்பது விளையாட்டு. பெரியவர்களின் துணையில்லாமல் மின்தூக்கியினுள் சென்று, 4ஆவது மாடி, 5ஆவது மாடி செல்லவேண்டும் என்று பொத்தானை அமுக்கி, அங்கே போய்விட்டு, மீண்டும் மின்தூக்கி வழியாகவே கீழிறங்குவதைப் பலரும் பார்த்திருப்போம். சிலர் செய்துமிருப்போம்;
அதில் இருக்கும் ஆபத்தை உணராமலே! திடீரென மின்வெட்டு ஏற்பட்டு பாதியில் நின்றுபோய்விட்டால் என்ன செய்வது என்பதுகூடத் தெரியாது குழந்தைகளுக்கு! எனவே, இதுபோன்ற ஆபத்தான விளையாட்டுகளைத் தவிர்க்க வேண்டும்.
சரி, நாம் செய்திக்கு வருவோம். (முன்பே பெரியார் பிஞ்சு இதழில் இதுகுறித்துப் பதிவு செய்துள்ளோம்) ஸ்டாக்ஹோமின் ஓடன்பிளான் பகுதியில் சாலையைக் கடக்க ஒரு சுரங்கப் பாதை (Subway). அங்கே படிகளும் உண்டு; நகரும் படிகளும் (Escalator) உண்டு. ஆனால் நகரும் படிகளைப் பயன்படுத்துபவர்கள்தான் அதிகம் பேர். படிகளில் ஒருவர் அல்லது இருவர்தான் ஏறுவார்கள்.
வயதான ஆட்கள் உடல் முடியாமல் செல்வது சரி. இளைஞர்களும் குழந்தைகளும்கூட மின் படிகளை நாடினார்கள். மாடிப்படி ஏறினால் உடல் கொஞ்சம் வேலைசெய்து ஊளைச் சதை போடுவது குறையும். மின்சாரமும் சிக்கனமாகும். எப்படி மாற்றுவது? சிலரை மட்டும் படிகளில் செல்லுங்கள் என்று கட்டாயப்படுத்த முடியாது. யோசித்தனர்;
ஒரு புதுமையான திட்டம் போட்டனர். திட்டம் பெருவெற்றி. மின் படிகளைப் பயன்படுத்திய வர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் (66%) மாடிப் படிகளில் ஏறத்தொடங்கினர். வயதான மூதாட்டி உள்பட.
அந்தத் திட்டம் என்ன தெரியுமா? யாருக்கும் சொல்லாமல் ஒருநாள் அந்த மாடிப் படிகளில் சின்ன வேலை செய்தார்கள். பியானோ இசைக் கருவிபோல் ஒவ்வொரு படியில் ஏறும்போதும் இசை எழுப்பும்படி அமைத்தார்கள். பார்ப்பதற்கு மிகப்பெரிய பியானோ போன்ற வடிவம் இருப்பதோடு மட்டுமல்லாமல், ஏறி நடந்தால் இசையும் தோன்றும்.
முதல் முறை ஏறியவர்களுக்கு அதிர்ச்சி! என்ன திடீரென ஏதோ சத்தம் வருகிறதே என்று! அடுத்த படி ஏறினார்கள் வேறு ஒரு ஒலி! படிப்படியாக ச…ரி…க..ம… என்று சுரம் சேர்க்கிறது. அவ்வளவுதான் பெரியவர் முதல் சிறியவர் வரை எல்லோரும் குதூகலமாகி விட்டார்கள். யார் படியேறினாலும் இசை கேட்கிறது ஸ்டாக்ஹோம் சுரங்கப் பாதையில்!
நடக்க வைத்து மின்சாரம் சேமிக்க இவர்கள் முயன்றால், நடப்பதன் மூலம் மின்சாரம் தயாரிக்கும் முயற்சியும் நடந்து வருகிறது.
நடந்துகொண்டே இருக்கும்போது உங்கள் செல்பேசி சார்ஜ் ஏறும் என்றால் நிறைய நடக்க ஆரம்பிப்போம். உடலும் ஆரோக்கியமாகும்; சூழலும் காக்கப்படும். எனவே புதிதாய்ச் சிந்திப்போம்.