அமைதிக்கான நோபல் பரிசு பெறும் அய்ரோப்பிய ஒன்றியம்
அமைதிக்கான நோபல் பரிசு அய்ரோப்பிய நாடுகளின் ஒன்றியத்திற்கு வழங்கப்படுகிறது. 60ஆண்டுகளுக்கும் மேலாக அமைதிக்கு ஆக்கபூர்வப் பணியாற்றுதல், இணக்கம், ஜனநாயகத்தைப் பேணுதல் மற்றும் மனித உரிமைக்குப் பாடுபடுதல் போன்றவற்றிற்கு அளப்பரிய பங்காற்றியமைக்காக 2012 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசினை அய்ரோப்பிய ஒன்றியத்திற்கு வழங்குவதாக நோபல் பரிசுக் குழு அறிவித்துள்ளது.சிங்கள இனவெறியர்களால் துரத்தப்பட்ட நம் ரத்த உறவுகளான ஈழத்தமிழர்களை அரவணைத்த நாடுகளில் பெரும்பாலானவை அய்ரோப்பிய நாடுகள்தான்.அய்ரோப்பிய நாடான நார்வே ஈழத்திற்காக சிங்கள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியதையும் நம்மால் மறக்கமுடியாது.
நோபல் வென்ற அறிஞர்கள்
உலகின் மிகப் பெரிய பரிசு நோபல் பரிசு. ஒவ்வோர் ஆண்டும் பல்துறை அறிஞர்களுக்கு வழங்கப் படுகின்றன அல்லவா! இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன.மருத்துவத் துறையில் தற்போது முன்னணி ஆராய்ச்சி யாக இருப்பது ஸ்டெம்செல் ஆராய்ச்சி யாகும். இத்துறையில் ஆற்றும் அளப்பரிய பணிக்காக இங்கிலாந்தின் ஜான் குர்டன்(வயது 79)ஜப்பானின் சின்யா யமனகா(வயது 50)ஆகிய இருவரும் மருத்துவத்திற்கான நோபல் பரிசினைப் பெறுகிறார்கள்.
குவாண்டம் துகள்களை சிதைக்காமல் தனிப்பட்ட துகளை அளவிடமுடியும் என்ற கண்டுபிடிப்பைச் செய்த அமெரிக்க அறிவியலாளர்கள் செர்ஜ் ஹரோச்(வயது 68) மற்றும் டேவிட் ஜெ.வின்லாண்ட்(வயது 68) ஆகியோருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
வேதியியலுக்கான நோபல் பரிசை அமெரிக்க அறிவியலாளர்கள் ராபர்ட் ஜெ.லெப்கோவிட்ஸ்(வயது 69) மற்றும் பிரயன் கெ கோபில்கா ஆகியோர் பெறுகின்றனர். வெளிப்புறத் தூண்டல்களை நமது உடலின் செல்கள் உணர்ந்து அதற்கேற்றவாறு எதிர்வினையாற்றும் புரதங்களைக் கண்டறிந்ததற்காக இவர்களுக்கு இப்பரிசு கிடைத்துள்ளது.
இலக்கியத்திற்கான நோபல் பரிசு சீனா நாட்டினைச் சேர்ந்த மோ யான்(வயது 57) என்ற நாவலாசிரியருக்கு வழங்கப்படுகிறது. ஆசிரியராகப் பணியாற்றும் இவர் ஏராளமான சிறுகதைகளையும் எழுதியவர்.நாட்டுப்புற கதைகளை வரலாறு மற்றும் தற்கால இலக்கியத்துடன் இணைத்து படைப்புகளை வழங்கியதற்காக இப்பரிசை இவர் பெறுகிறார்.
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை அமெரிக்காவின் ஆல்வின் இ ரோத்(வயது 61)மற்றும் லாய்ட் ஷேப்லே (வயது 89) ஆகியோர் பெறுகின்றனர்.