“1,28,097 அடி”யாத்தி
இரண்டு மாடி கட்டிடத்திலிருந்து சாதாரணமாக எட்டிப் பார்த்தாலே நமக்கு தலை சுற்றும். ஆனால், ஒருவர் 1,28,097 அடி உயரத்திலிருந்து குதித்திருக்கிறார். என்ன பொய் சொல்றீங்களானு நீங்க கேட்கலாம். இது உண்மைதான்.
இது நடந்தது 2012 அக்டோபர் 14ம் தேதி ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த பெலிக்ஸ் பம்காட்னர் (Felix Baumgavtner) என்ற 43 வயதுடையவர்தான் இந்த உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார். இவருக்கு பயம் என்றால் என்னவென்றே தெரியாதாம். இவருக்கு இதேதான் வேலை.
இதற்கு முன்னர் பல உயரமான கட்டிடங்கள், பாலங்கள், மலைகள் என பலவற்றிலும் இருந்து குதித்திருக்கிறார். ஆனால் இவை யெல்லாம் இப்போது நிகழ்த்திய சாதனைக்கு சற்றும் ஈடாகாது.
அமெரிக்காவில் இருக்கும் நியுமெக்சிகோ மாகாணத்திலிருந்து ஹீலியம் (Helium) நிரப்பிய பலூனில் இணைக்கப்பட்ட கேப்ஸ்யூல்(Capsule) என்ற அறையில் 38.4 கிலோ மீட்டர் உயரத்திற்கு பறந்து சென்றார். அவர் அந்த தூரத்தை அடைய 2.30 மணி நேரம் ஆனது. அந்த கேப்ஸ்யூலில் பூமியில் இருக்கும் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொள்ள உதவும் சாதனங்கள் மற்றும் பிராணவாயு உள்ளிட்டவை இருந்தன.
பெலிக்ஸிக்கு கட்டுப்பாட்டு அறையிலிருந்து தட்பவெப்ப நிலை, காற்றழுத்தம் குறித்த தகவல்கள் அவ்வப்போது கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. பெலிக்ஸ் முதலில் அக்டோபர் 9, 2012 அன்று குதிப்பதாக திட்டமிட்டிருந்தார். ஆனால் அன்றைக்கு வானிலை சரியில்லாத காரணத்தினால் அந்த சாதனை நிகழ்வு அக். 14க்கு ஒத்திவைக் கப்பட்டது.
முன்னதாக 1,20,000 அடியில் இருந்து குதிப்பதாகத்தான் அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால் அவர் சென்ற ஹீலியம் பலூனின் அதீத ஒத்துழைப்பால் 1,28,097 அடியிலிருந்து குதிப்பதற்கு வாய்ப்பு ஏற்பட்டது. அவர் அந்த இலக்கை அடைந்ததும் கட்டுப்பாடு அறையிலிருந்து அவருக்கு குதிப்பதற்காக அனுமதி கிடைத்தது. அதன் பிறகு அவர் அதற்காக 32 பாதுகாப்பு ஏற்பாடுகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி விட்டு, கேப்ஸ்யூலின் வெளியில் வந்து குதித்தார்.
அவர் குதித்ததும் பூமியை நோக்கி 1,342 கி.மீ. வேகத்தில் பாராசூட் இல்லாமல் பறந்து வந்தார். இது ஒலியை (Sound) விட அதிவேகமாகும். இதுவும் ஒரு உலக சாதனையாகும். இதற்கு முன்னர் 1,136 கி.மீ. வேகம் என்பதே சாதனையாக இருந்தது. அவர் குதித்த சில நொடிகளில் அவருக்கு ஒரு சிக்கல் ஏற்பட்டது. குதித்துக்கொண்டிருக்கும்போதே திடீரென அவர் கட்டுப்பாடின்றி சுற்ற ஆரம்பித்தார்.
இதனால் அவர் சுயநினைவை இழக்கும் அபாயத்திற்கு தள்ளப்பட்டார். ஆனால் அவர் எப்படியோ சுதாரித்துக் கொண்டு நேராக தன்னை நிலைப்படுத்திக் கொண்டார். இவர் 4 நிமிடங்கள் 19 நொடிகள் பாராசூட் இல்லாமல் கீழ்நோக்கி வந்தார். ஆனால் இதற்கு முந்தைய சாதனை 4 நிமிடங்கள் 30 நொடிகளாகும்.
பிறகு அவர் பாராசூட்டை இயக்கி கீழிறங்க மொத்தம் 8:30 நிமிடங்கள் ஆகியது. அவர் பூமியை தொட்டவுடன் இதற்கு முன்னர் 1960ல் ஜோசப் கிட்டிங்கர் (Josep Kittinger) என்ற அமெரிக்கர் நிகழ்த்திய சாதனையான 1,02,800 அடி என்ற சாதனையை முறியடித்து புதிய உலக சாதனையை நிகழ்த்தினார் என அறிவிக்கப்பட்டது.
இவருக்கு ரெட் புல் (Red Bull) என்ற நிறுவனம் முழு பண உதவியை அளித்தது. அவர் செய்தியாளர் களிடம், போதிய பயிற்சி மற்றும் தன்னம் பிக்கையினாலேயே இந்த சாதனையை நிகழ்த்த முடிந்தது என்றும், இதனை குழந்தைகள் யாரும் சோதித்துப் பார்க்க வேண்டாம் எனவும் கூறினார்.
– புருனோ