விண்வெளிச் சுற்றுலா
வானத்தைப் பார்த்துக்கொண்டு ஆளுக்கொரு கதை சொன்ன காலமெல்லாம் போய்விட்டது. இந்திய வம்சாவளி அமெரிக்கர் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் 322 நாட்கள் தங்கியிருந்து விட்டு கடந்த நவம்பர் 19 ஆம் நாள் பூமிக்கு வந்துவிட்டார்.
இனி வரும் காலத்தில் நீங்களும்கூட விண்ணுக்கு சுற்றுலாப் போகலாம் என்கிறது ஒரு ரஷ்ய நிறுவனம். உங்கள் விடுமுறையை விண்வெளியில் கழிக்கலாம். ரஷ்யாவைச் சேர்ந்த நிறுவனம் 4 கேபின் கொண்ட 7 பேர் தங்கக் கூடிய விண்வெளித் தங்கும்விடுதி ஒன்றைக் கட்ட முடிவு செய்துள்ளது.
பூமி சுற்றுவட்டப்பாதையின் வானவெளியில் 217 மைல் தொலைவில் இந்த விண்வெளித் தங்கும் விடுதி அமைக்கப்படுகிறது. இதில் பெரிய ஜன்னல்கள் அமைக்கப்படும். அதன் வழியே பூமியை ரசிக்கலாம். இன்னும் மூன்று ஆண்டுகளில் இந்த விண்வெளித் தங்கும் விடுதி தயாராகிவிடுமாம்.
2016ம் ஆண்டு முதல் இதில் தங்க முடியும் என்கிறது அந்நிறுவனம்.இந்த விண்வெளிச் சுற்றுலாவின் பயண நேரம் இரண்டு நாட்கள். சோயுஸ் ராக்கெட் என்ற விண்கலம் மூலமாகச் செல்லவேண்டும்.5 நாள் பயணத்திற்கு தங்கும் செலவு மட்டும் ஒரு லட்சம் பவுண்ட் மற்றும் பயணக் கட்டணம் 5 லட்சம் பவுண்ட் வரை ஆகலாமாம்.
விண்வெளியில் உடல் எடை இருக்காது என்பதால் அங்கு சமதளபடுக்கை அல்லது நேராக நிற்கும் படுக்கையை தேர்வு செய்யலாம். சுற்றுலா பயணிகளுடன் அனுபவம் வாய்ந்த விண்வெளி வீரர்களும் உடன் குழுவினரும் செல்லுவார்கள்.
பூமியில் தயாரிக்கப்பட்ட உணவு ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டு, அங்கு மைக்ரோ ஓவனில் சுடவைத்து சாப்பிட லாம். ஐஸ், டீ, மினரல் வாட்டர், தண்ணீர், பழரசம் ஆகியவையும் கிடைக்கும். கழிவு நீர் மறுசுழற்சி செய்து பயன்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளது அந்த ரஷ்ய நிறுவனம்.