விந்தை உயிரினங்கள்
குரங்கின் பாசம்
ஒவ்வொரு உயிரும் தமக்கான தேவையைத் தேடிக்கொள்ளும் இயல்புடையது. விலங்குகள், பறவைகள், நீர்வாழ்வன என எல்லா உயிரினங்களும் அந்தக் கடமையில் இருந்து தவறவில்லை.
மனிதன்தான் இன்னும் யாராவது இலவசமாகத் தரமாட்டார்களா என தேடலை விட்டு சோம்பேறியாகிவிட்டான். இந்த குரங்கைப் பாருங்கள்; தன் குட்டியைக் கவ்விய படியே துன்பத்தைத் தாங்கியபடி நீர் குடிக்கிறது! நேப்பாள நாட்டின் தலைநகர் காத்மாண்டு அருகில் உள்ள சுயம்புனாத் பகுதியில் கடந்த ஜூன் மாதம் கண்ட காட்சிதான் இது.
புலி பசித்தால்…?
புலி பசித்தாலும் புல்லைத் திண்ணாது என்பார்கள்; சரிதான். ஆனால், பாலையுமா குடிக்காது. இதோ நாய்ப் பாலையே தன் தாய்ப் பாலாகக் குடிக்கிறது இந்தப் புலிக்குட்டி. இத்துடன் இதன் உடன் பிறந்த இன்னொரு புலிக்குட்டிக்கும் அந்த நாய் தன் பாலை ஊட்டி வளர்க்கிறதாம்.
ரஷ்யாவின் சோச்சி விலங்குகள் காப்பகத்தில் ஷர்பீ என்ற வகை நாயின் இந்தத் தாய்ப்பாசம் நெகிழவைக்கிறது அல்லவா! விலங்குகளே கூட இன்னொரு இன விலங்குடன் நேசம் கொள்ளாத் தொடங்கிவிட்டன. ஆனால், மனிதன்…? தன் இனத்திலேயே இன்னும் ஜாதி, மதம் பார்க்கிறானே…!
50 அய்த் தொட்ட ஓராங்குட்டான்
உலகின் மிக அதிக வயதான ஓராங்குட்டான் குரங்கு இது. மேற்கு பிரான்சிலுள்ள விலங்குகள் பூங்காவில் கடந்த ஜூலையில் தனது 50 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடியது.
1962ல் இந்தோனேசியாவில் பிறந்த இது முதலில் ஜெர்மனியில் இருந்தது. தற்போது பிரான்சில் வசிக்கிறதாம்.