பலவீனத்தைப் பலமாக்குவோம்!
– சிகரம்
இயற்கையில் எவரும் முழுநிறைவுடன் பிறப்பதும் இல்லை; வாழ்வதும் இல்லை! மனித உடல் மட்டுமல்ல மண்ணுலகும், விண்ணிலுள்ள கோள்களும் குறைபாடுகளோடுதான் உள்ளன. படைப்பு என்றால் அது முழு நிறைவாக இருக்கும்.
இவ்வுலகில் எதுவும் படைப்பு அல்ல. இயற்கையில் அமைவது குறைகளோடுதான் இருக்கும். நிலவுக்கும் குறையுண்டு; மண்ணுக் கும் மாசுவுண்டு, உடலுக்கும் ஊனம் உண்டு. எனவே, குறைகளை எண்ணிக் குறுகாமல், குறையை நிறையாக்கி, பலவீனத்தை பலமாக மாற்றி சாதிக்க முயலவேண்டும். சாதனை என்பதும் உண்மையில் அதுதான்.
கமலகாசன் அழகானவர், சிவப்பானவர்; செந்தில் கருப்பு, அழகானவர் இல்லை; தலை வழுக்கை. குள்ளமணி மிகக் குள்ளம்; இவர்களுள் இயற்கையால் தனக்கு அமையப்பெற்ற அழகையும், நிறத்தையும் கொண்டு, தன் அறிவுக் கூர்மையை, ஆற்றலை வளர்த்து உயர்ந்தார். ஆனால் அவருக்குள்ள அழகும், நிறமும் இல்லாதவர்களும் புகழ், பெருமை இவற்றைப் பெற்றுள்ளனர்.
குமரிமுத்து
இரஜினிகாந்து தான் கருப்பு என்று எண்ணி முடங்கியிருந்தால் இன்றைக்குள்ள உச்சத்தை அவரால் எட்டியிருக்க முடியாது. குறையை எண்ணாது தனக்குள்ள திறமையைப் பயன்படுத்தியதால் மேலே வந்தார்.
குள்ளமணி
செந்தில் தன் உருவத்தையே சிரிக்க வைக்கப் பயன்படுத்தினார். குள்ளமணியும், குமரிமுத்துவும் தங்களுக்குள்ள குறைகளையே அடித்தள மாய்ப் பயன்படுத்தி உயர்ந்தனர். அக்குறைகளையே திரைத்துறையில் சாதிக்கப் பயன்படுத்தினர்.
லால்பகதூர் சாஸ்திரி
ஓமகுச்சி நரசிம்மன் தன் ஒல்லியான உடலையே தன் தொழிலுக்கு அடிப்படையாக்கினார். குட்டி என்று அழைக்கப்பட்ட இரு கால்களும் இல்லாத, இடுப்புக்குமேல் உடலைக் கொண்டவர் நாற்காலியில் இருந்தபடியே நடனம் ஆடி உலகையே வியக்கவைத்ததார்; தொலைக்காட்சிகளில் இடம்பிடித்தார்.
தனக்குள்ள குறையையே சுழற்பந்து வீச்சாக மாற்றி சாதனைப் படைத்த கிரிக்கெட் வீரர் உண்டு. பார்வையே இல்லாத மில்டல் படிப்பதில் சாதனை புரிந்தார். மிகக் குள்ளமான நெப்போலியன், சிறந்த போர் வீரர் என்ற உலக சாதனைப் படைத்தான்.
ஏழைக்குடும்பத்தில் பிறந்த, மிகக் குள்ளமான லால்பகதூர் சாஸ்திரி, செல்வக் குடும்பத்தில் பிறந்த உயரமான உருவமுடைய நேரு பிடித்த பிரதமர் பதவியைப் பிடித்தார்; சாதித்தார்.
உடலும், வாய்ப்பும் இயற்கையாய் அமைவது. இயற்கைக் குறைகளை எண்ணி வருத்தப்படுவது அறியாமை மட்டுமல்ல, அறிவுக்கு உகந்ததுமல்ல.
அறிவுடைமை என்பதும், சாதனையென்பதும், (இயற்கையை குறைசொல்வது அல்ல) இயற்கையில் அமைந்ததை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதேயாகும்.
இயற்கையில் ஒன்று இல்லையென்றால் இன்னொன்று இருக்கும். இல்லாததை எண்ணி ஏங்குவதைவிட, இருப்பதை எப்படிப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று முயல்வதே அறிவுடைமை.
இயற்கையில் நமக்கு பறக்கும் சக்தியில்லை; அதற்கான உடலமைப்பும் இல்லை. அதையே எண்ணி ஏங்காமல் மனிதன், எப்படி வானத்தில் பறந்து செல்லலாம் என்று எண்ணியதன் முயன்றதன் விளைவே விமானம்.
பறக்கும் அமைப்பு இல்லை, நாம் வானத்தில் பறக்கவே முடியாது என்று மனிதன் முடங்கியிருந்தால், வானூர்தி வந்திருக்காது. மாறாக எப்படி பறக்கலாம், எதை பயன்படுத்திப் பறக்கலாம் என்று மாற்றுவழி காண முயன்றவனுக்கு காற்று அழுத்தம் கை கொடுத்தது.
காற்றழுத்தம் குறைவான இடத்தை நோக்கி சுற்றியுள்ள காற்று விரைந்து தள்ளிக் கொண்டுவரும் என்ற அறிவியல் தத்துவத்தைப் பயன்படுத்தினான். காற்றாடியைக் கொண்டு காற்று அழுத்தத்தைக் குறைத்து, காற்றின் உந்துதலைக் கொண்டு விமானத்தை ஓடச் செய்தான். விரைந்து தரையில் ஓடும் விமானத்தை காற்றழுத்தத்தைக் கையாண்டு மேலெழச் செய்தான். தரையில் ஓடிய விமானம் விண்ணில் ஓடியது. பலவித சுக்கான்களைப் பயன்படுத்தி விமானத்தை திருப்பினான். இன்று விமானப் பயணம் விரைவாகவும், வழக்கமாகவும் வந்தது மட்டுமல்ல, பறந்து கொண்டிருந்த பறவைகளைவிட உயரமாகவும் விரைவாகவும் பறந்து சாதித்தான்.
மனிதக் கழிவைக்கூட, எரிவாயுவாகப் (Bio Gas) பயன்படுத்தினான். உப்பு நிலத்திலும் பயிர்வைக்க வழி கண்டான். சக்கையைக்கூட காகிதமாக மாற்றினான்.
எனவே, இல்லாததையும், குறையையும் எண்ணிக் குலைந்து குறுகி, சோராமல், முடங்காமல், மாற்றுவழி காணவேண்டும். குறையை புறந்தள்ளி இருப்பதைக்கொண்டு சிறப்புடன் வாழவேண்டும்.
பிஞ்சுகள் இளம்வயதிலே இவற்றைச் சிந்தனையில் பதிவு செய்துகொண்டு, குறைகளால் குலையாமல், நம்மால் முடியும்! இருப்பதைக் கொண்டு எண்ணியதை எட்டுவேன் என்று நம்பிக்கையுடனும், முயற்சியுடனும், அறிவுவழியில் சாதிக்க வேண்டும்!