அறியப்படாத அறிஞர் லுக்ரீஷியஸ் (LUCRETIUS)
பெரியார் பிஞ்சுகளான என் செல்லப் பேத்திகளே, வெல்லப் பேரன்களே என்று உங்களை அழைப்பதைவிட நல்ல நண்பர்களே என்று அழைத்து மகிழவே எனக்கு ஆசை பீறிட்டுக் கொண்டு வருகிறது! காரணம் எனக்கு 80ஆவது வயது வந்துவிட்டது என்று என்னை இழுத்துப் பிடித்து, விழாக் கொண்டாடி வாயில் உங்களைப் போன்ற செல்லங்கள் கேக்கைத் துருத்துவிட்டதுபோல வேலையைத் திணித்துவிட்டார்கள்.
அந்தக் கடுமையிலிருந்து தப்பி நான் இளைப்பாற வேண்டாமா? எனவே உங்களது பாசம் பொங்கும் நட்பு நிழலை, நிழல் தரும் சுகத்தைத் தேடி உங்களிடம் மாதம் ஒருமுறையாவது எழுத்து மூலம் உரையாடி மகிழ முடிவு செய்துவிட்டேன்!
இளைப்பாறும்போதும் கதை சொல்லுங்கள் தாத்தா, பாட்டி என்று கேட்பதுதானே நம்முடைய பேராண்டிகளின் வழக்கம்!
அதுமாதிரி சில அறிவியல் அறிஞர்களை பெரியார் தாத்தா போலவே நாத்திக நன்னெறியாளர்களை உங்களுக்கு ஒவ்வொரு இதழிலும் எழுதிட விரும்புகிறேன்.
இதைப் படித்துவிட்டு, நீங்கள் மின்னஞ்சல் மூலமோ, அஞ்சல் அட்டை மூலமோ (அதிக காசு செலவழிக்காமல்) பதிலாக தெரிவித்தால் எனக்கு பெருமகிழ்ச்சி தரும் அல்லவா?
அறிவியல் (விஞ்ஞானம்) Science என்பதை நாம் பள்ளிக்கூடத்தில் படிக்கிறோம்; ஆசிரியர்களும் பாடப் புத்தகத்தில் உள்ளதை சொல்லிக் கொடுத்து தேர்வு எழுதச் செய்து, தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றால் தட்டிக் கொடுக்கிறார்கள்.
அதுவே நமக்கு அறிவியலை வாழ்க்கைக்குக் கொண்டுவந்து சேர்த்துவிடுமா? பாடம் வேறு; படிப்பினை வேறு. கற்றால் போதாது; உள்ளத்தில் அதனைப் பெற்று, பாதுகாத்து, நட்டுவைத்தச் செடிக்கு நீர் பாய்ச்சி, காப்பாற்றி வளர்ப்பதுபோல வளர்த்திட முன்வரவேண்டும்!
சூரிய, சந்திர கிரகணத்தின்போது சாப்பிட்டால் அது சாமி குத்தம் உயிருக்கு ஆபத்து என்று கப்சா விட்டார்கள்; அது பொய் என்று நிரூபிக்க நமது பெரியார் கல்விக்கூடங்கள் தஞ்சை, திருச்சி, சென்னை போன்ற எல்லா இடங்களிலும் அந்த நேரத்தில் சாப்பிட்டுக் காட்டினோம் ஊடகவியலாளர்களையும் (பத்திரிகை, டி.வி.காரர்கள்) உடன் வைத்து.
அறிவியலைப் படிப்பது எளிது; அறிவியல் மனப்பான்மையை ‘Scientific Temper’ என்பதை நம்முள் ஒவ்வொருவரும் பதித்துக்கொள்வது முக்கியம். அதிலும் பிஞ்சுப் பருவத்திலேயே உள்ளத்தில் விதைத்துக் கொள்வது மிக மிக அவசியம் அல்லவா?
அறிவியல்வாதிகளில்கூட பலர் மனக்குழப்பம் உடையவர்களாகவே இருந்துள்ளனர்!
சில விஞ்ஞான மேதைகள்தான் துணிந்து உண்மைகளைப் பரப்பிட முன்வந்து வெற்றியும் பெற்றுள்ளனர்!
அப்படிப்பட்ட பலரை உங்களுக்கு அறிமுகப்படுத்தவே உங்களுடன் இந்த இளைப்பாறுதலைப் பயன்படுத்த விரும்புகிறேன்.
இப்போதுகூட இந்த உலக மக்கள் தொகையில் 700 கோடியில், ஆண்டுதோறும் நோபல் பரிசு பெறும் விஞ்ஞானிகள் -_ அதற்குத் தகுதியானவர்கள் எண்ணிக்கை எவ்வளவு குறைவு பார்த்தீர்களா? மொத்தம் இரட்டைப்படை வரிசை எண்ணிக்கை அளவே!
அதனால் உண்மையைக் கூறுபவர்கள் எண்ணிக்கையில் மிக மிக மிகக் குறைவாக நாம் இருக்கிறோமே என்று சிறிதும் தயங்கக் கூடாது செல்லங்களே! (கோடிகளில்கூட அல்ல 10 கோடிக்கு ஒருவர் என்றுகூட இருக்க மாட்டார்கள் _ அவர்கள்தானே உலக அறிவு _ அறிவியலின் கலங்கரை வெளிச்சங்களாகத் திகழுகிறார்கள்!
மாதம் ஒரு தத்துவ அறிவியல் அறிஞரைப் பற்றி அறிவோமா?
முதலில் லுக்ரீஷியஸ் (LUCRETIUS) என்ற ரோம் நாட்டு தத்துவ விஞ்ஞானியைப்பற்றி அறிவோம்.
இதில் காலக்கணக்கீடு பற்றிச் சொல்லுகையில் கி.மு., கி.பி.க்குப் பதிலாக, மதச் சார்பற்றவர்கள் வரலாற்று ஆய்வாளர்கள் இப்போது கடைப்பிடிக்கும் புதுமையையே நாம் கடைப்பிடிப்போம். (Common Era – Before the Common Era) என்று பகுத்துச் சொல்வதே அது, ஆங்கிலத்தில் C.E., B.C.E. என்றே குறிப்பிடும் முறை இப்போது புழக்கத்தில் வந்துவிட்டது.
அதன்படி ரோம் நாட்டு இந்த லுக்ரீஷியஸ் என்ற அறிஞரின் முழுப்பெயர் டைட்டஸ் லுக்ரீஷியஸ் காரஸ் (Titus Lucretius Carus) – 95 – 55 கி.மு. ஆக இருக்கிறது.
அதாவது 40 ஆண்டுகள் வாழ்ந்துள்ளார். பொதுவாக அக்காலத்தில் நிலவிய மூடநம்பிக்கைகளை எதிர்த்து, அறிவியல் மனப்பாங்கை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று 2000 ஆண்டுகளுக்கு முன்பு சொல்வது என்பது எளிதான செயல் அல்லவே!
அவர்கள் வரலாறுகள்பற்றிய குறிப்புகளைக்கூட நமக்கு சரிவரக் கிடைக்காமல் செய்துவிட்டனர் அக்கால வைதீக புரியினர்!
இவர் எவ்வளவு நூல்கள் எழுதியிருந்தாலும் ஒரே ஒரு நூலைத் தவிர எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை. எபிக்கியூரஸ் என்ற ஒரு கிரேக்க அறிஞர் (அவர் 341-270 கி.மு.வில் வாழ்ந்த) தத்துவ ஞானி இவருக்கு முன் வாழ்ந்தவர். வாழ்க்கை அனுபவிக்கப்படவே; மகிழ்ச்சியோடு வாழுவது நம் கையில்தான். மற்ற கற்பனைகளை நம்பி மன உளைச்சல் அடையக்கூடாது எவரும் என்றார்.
அணுதான் எல்லா பொருள்களுக்கும் மூலாதாரம்; அணுக்களின் தொகுப்புதான் எந்தப் பொருளும் என்று அப்போது இவருடைய காலத்தில் மற்றொரு அறிஞர் டெமோகிரிட்டஸ் (Democritus) என்பவர் கூறினார்.
இந்த உலகத்தைப் போலவே வெவ்வேறு கோள்களாக (மற்ற உலகங்களாக) இருக்கக் கூடும். அது ஆராயப்படல் வேண்டும்; எதுவும் கடவுளால் படைக்கப்பட்டதல்ல என்ற அறிவியல் மனப்பான்மையை எடுத்துச் சொன்னார்!
மதவாதிகளின் கடுங்கோபத்திற்கு ஆளானார் இவர்; எனவேதான் இவரைப்பற்றிய இருட்டடிப்பு.
இந்த வாழ்வுக்குப்பின் இன்னொரு உலகம் அதாவது மோட்சம், நரகம் இவைகள் என்றெல்லாம் கிடையாது என்று அக்காலத்திலேயே, எபிக்கியூரஸ் என்ற அறிஞர் சொன்னார்.
ரோமானிய அறிஞரை தத்துவ ஞானியைப் போலவே, கிழக்கில் நம் நாட்டிலும் அக்கால கட்டத்தில் சார்வாகர் என்ற அறிஞர் கடவுள், வேத மறுப்பாளர்களாக இருந்ததால், அவர்கள் வரலாற்றையும் மறைத்து விட்டார்கள்!
மதவாதிகள் மூடநம்பிக்கை வியாபாரம் செய்தவர்கள் பாவ புண்ணியம் கற்பித்து, பணச் சுரண்டலை அப்போதே நடத்தியதன் விளைவே, இத்தகைய நல்ல அறிஞர்கள் அதனை எதிர்த்து, எதையும் ஏன் எதற்கு என்று கேட்டு ஆதாரம் கேட்டு அறிவு வழி நடக்கச் சொன்னவர்கள். இவர்களைப் போன்றவர்களையும் இனி வரும் பெரியார் பிஞ்சு இதழில் சந்திப்பீர்கள்.
உங்கள் பிரியமுள்ள தாத்தா,
கி.வீரமணி