படிப்பைப் பாதியில விட்டாங்க… ஆனா…!
இனிய பிஞ்சுகளே…
படித்தவனுக்கு படித்த அறிவு மட்டும்தான் இருக்கும்;படிக்காதவனுக்குத்தான் சொந்த அறிவு இருக்கும் என்று பெரியார் சொல்லுவார்.அய்யா சொல்வதை சரிதான் என்கிறது இந்தச் செய்தி.பள்ளியிலும்,கல்லூரியிலும் கற்பது மட்டும்தான் வாழ்க்கைக்கு கை கொடுக்கும் என்பது தவறு.அடிப்படைக் கல்வியும், ஓரளவு மேநிலைக் கல்வியும் இருந்தாலே ஒரு மனிதன் வாழ்வில் உயர முடியும் என்கிறது இந்தப் பிரபலங்களின் கதை.கல்லூரியில் படிக்கும் காலத்தில் தமக்கு ஆர்வமுள்ள துறைகளில் நாட்டம் செலுத்தி முன்னேறியவர்கள் சிலரைப் பார்ப்போமா!
கோல்ப் வீர்ர் டைகர் வுட்ஸ்
அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்தவர் டைகர் வுட்ஸ் என்று அழைக்கப்படும் எல்ட்ரிக் டாண்ட் வுட்ஸ் (Eldrick Tont Woods). உலகின் முதலிடத்தில் உள்ள கோல்ப் (GOLF) விளையாட்டு வீர்ரான இவர்தான், அதிகம் வருவாய் ஈட்டும் தொழில்முறை கோல்ப் வீர்ர். ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தில் பொருளாதாரம் பயில சேர்ந்த இவர் இரண்டு ஆண்டுகளிலேயே கல்வி கசந்துவிட கல்லூரிக்கு முழுக்குப் போட்டுவிட்டு முழு நேரமும் கோல்ப் விளையாட்டிலேயே கவனம் செலுத்தினார்.இன்று இவரது ஆண்டு வருவாய் எவ்வளவு தெரியுமா? 10 கோடி அமெரிக்க டாலர்கள்.அதாவது நம்ம இந்திய ரூபாய்க்கு 537.30 கோடி.
ஹாலிவுட் நடிகர் ஹாரிசன் போர்ட்
அமெரிக்க ஹாலிவுட் நடிகர் ஹாரிசன் போர்ட்,விஸ்கான்சினில் உள்ள ரிப்பன் கல்லூரியில் தத்துவவியல் பாடத்தில் சேர்ந்தார்.ஓராண்டுக்குள்ளாகவே படிப்பை நிறுத்திவிட்டு நடிப்புத்துறைக்கு வந்துவிட்டார்.இன்று உலகப் புகழ்பெற்ற நடிகர்,தயாரிப்பாளர் என உயர்ந்துள்ளார்.இவர்நடித்த ஸ்டார் வார்ஸ்,இண்டியானா ஜோன்ஸ் உள்ளிட்ட படங்கள் உலகம் முழுதும் வெற்றிகரமான ஓடியவை.
பல்கலைவித்தகர் டாம் ஹான்க்ஸ்
டாம் ஹான்க்சும் ஹாலிவுட் நடிப்புத்துறையைச் சேர்ந்தவர்தான்.ஆனால்,நடிப்பு மட்டுமல்ல,திரைக்கதை எழுத்தாளர்,திரைப்பட இயக்குநர்,தயாரிப்பாளர்,நல்ல பேச்சாளர் எனப் பன்முகம் கொண்டவர்.கலிபோர்னியா பல்கலையில் கலைப்படிப்பைப் படித்தாலும் அதனைப் பாதியிலேயே விட்டுவிட்டு நேரடியாக நாடக அரங்கிற்கு வந்துவிட்டார்.அதன் தொடர்ச்சியாக ஹாலிவுட்டில் கால்பதித்து THE DAVIN CI CODE உள்ளிட்ட பல படங்களில் நடித்து பல்வேறு விருதுகளைப் பெற்றார்.இன்றும் நடித்துக்கொண்டிருக்கிறார்.
முகநூல் முகம் மார்க் சூக்கர்பெர்க்
இன்று இணைய உலகை ஆட்டிப்படைக்கும் முகநூல் (FACE BOOK) இணையதளத்தை உருவாக்கிய சூக்கர் பெர்க் கல்லூரிப் படிப்பை பாதியில்விட்டவர்தான்.ஹாவர்ட் பல்கலைக்க்கழகத்தில் கணினிக் கல்வியைப் பயிலும்போதே கவனம் முகநூல் உருவாக்கத்தில் செல்ல,படிப்பை விட்டு நேரடியாக பயிற்சிக்கு சென்றுவிட்டார்.முகநூலை உருவாக்கினார்.தனது 23 ஆவது வயதிலேயே பல கோடிகளுக்குச் சொந்தக்காரர் ஆனார்.இன்றைய இவரது சொத்துமதிப்பு 100 கோடி ரூபாய்.
திரை மன்னன் ஜேம்ஸ் கேமரூன்
டைட்டானிக், அவதார், த டெர்மினேட்டர், ஜட்ஜ்மெண்ட் டே உள்ளிட்ட மிகப் புகழ்பெற்ற ஹாலிவுட் படங்களை எழுதி இயக்கிய ஜேம்ஸ் கேமரூன் புலட்ரான் கல்லூரியில் இயற்பியல் பாடத்தில் சேர்ந்தார்.அறிவியல் புனைவுக்கதைகளை உருவாக்குவதிலும்,திரைப்படத் தொழிநுட்பத்தில் ஆர்வம் மேலிட அப்படியே கல்லூரியை விட்டார்.ஹாலிவுட் பக்கம் வந்தார்.இன்று திரை உலகின் தவிர்க்க முடியாத பல படங்களின் இயக்குநராக உலகம் முழுதும் அறியப்பட்டவராகிவிட்டார்.இவரது ஒவ்வொரு படமும் பல நூறு கோடி ரூபாய்களை வாரிச்சுருட்டியவை.
ஆப்பிள் கணினிக்காரர் ஸ்டீவ் ஜாப்ஸ்
இன்று உலகமே தன் கைகளில் வைத்திருக்கும் ஆப்பிள் கணினிகளை உருவாக்கிய ஸ்டீவ் ஜாப்ஸ் கல்லூரியிலிருந்து பாதியிலேயே வந்தவர்தான்.அமெரிக்காவின் ரீட் கல்லூரியில் சேர்ந்து ஆறே மாதத்தில் அந்தக் கல்லூரியை விட்டு வந்து கணினித்துறையில் ஆர்வத்துடன் உழைத்தார்.ஆப்பிள் கணினிகளை உருவாக்கி தான் மறைந்தபோது (2011 ஆம் ஆண்டில்)புகழில் உச்சியிலும்,பொருளாதாரத்தில் சிறந்தும் விளங்கினார்.
மைக்ரோ சாப்ட் பில் கேட்ஸ்
பில் கேட்ஸ் என்ற இந்தக் கணினிக்காரர்தான் உலகம் முழுதுமுள்ள எளிய,நடுத்தர,சாமானிய மக்களுக்கும் கணினியைக் கொண்டு சேர்த்தவர். குறைந்த விலைகளில் கணினிகள் கிடைக்கக் காரணமானவர்.இவரது மைக்ரோ சாப்ட் கணினி மென்பொருள்தான் இன்று உலகின் மிகப் பெரும்பாலானவர்களின் கணினியில் பயன்பட்டுக் கொண்டிருக்கிறது.ஹாவர்ட் பல்கலையில் படிப்பைப் பாதியில் விட்ட பில்கேட்ஸ் 2000 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் தொடர்ந்து சில ஆண்டுகள் உலகின் பணக்காரர்களில் முதலிடத்தில் இருந்தவர்.
பள்ளிக்கூட வாடை இல்லாமலேயே உழைப்பை மட்டுமே மூலதனமாய் வைத்து பொருளீட்டுவதில் வல்லவர்கள் உண்டு;படித்துவிட்டு அதனை அடிப்படையாகக் கொண்டு வருவாய் ஈட்டுவோரும் அதிகம் உண்டு.ஆனால்,இவர்களோ அடிப்படைக் கல்வியைப் படித்துவிட்டு,பின்னர் தமக்குப் பிடித்த,ஆர்வமுள்ள துறையைத் தேர்ந்தெடுத்து வாழ்வில் உயர்ந்தவர்கள்.மற்ற இரு சாராரைவிட இந்த முறையில் வந்தவர்கள்தான் புகழிலும்,வருவாய் ஈட்டுவதிலும் சாதனை படைத்து உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார்கள்.எப்போதுமே தமக்குப் பிடித்த வேலையைச் செய்வதில் உள்ள மகிழ்ச்சி வேறு எதிலும் இருப்பதில்லை அல்லவா! அடிப்படைக் கல்வியும் ஆர்வமும் இணைந்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு இந்த மனிதர்களே சாட்சி.
– பிஞ்சுமாமா