குடும்ப சாமி, குலசாமி, கும்பிடாத சாமி
– ச.தமிழ்ச்செல்வன்
நாம் இதுவரை பார்த்த ஏழைச்சாமிகளின் கதைகள் நமக்குச் சொல்வதென்ன? இந்தச் சாமிகள் எல்லாமே மனிதர்கள் 40 வருடம் 50 வருடத்துக்கு முந்தி அல்லது அதற்கும் முந்தி வாழ்ந்து இறந்துபோன மனிதர்கள். ஊரார் கொடுமையால் இறந்தவர்கள். வீட்டார் கொடுமையால் இறந்தவர்கள், நாட்டு அரசர் கொடுமையால் கொல்லப்பட்டவர்கள். எல்லோருமே கொலையுண்ட அல்லது தற்கொலை செய்த மனிதர்கள். நம்மைப் போல் கை கால் உள்ள மனிதர்கள்.
இதுபோலவே குடும்ப தெய்வங்கள் குலதெய்வங்கள் எனவும் பல உண்டு. ஒரு குடும்பத்துப் பெரியவர் அல்லது இளம் பெண் அகாலமாக அதாவது சாகவேண்டிய முதுமைக் காலத்துக்கு முன்பாகவே இறந்துவிட்டால் அவர்களை தெய்வமாக வீட்டார் வழிபடுவார்கள். கிராமப்புறங்களில் போட்டோ பிடித்து வைக்கிற பழக்கமும் அவசியமும் இல்லாததால் இறந்தவர்களின் புகைப்படம் இருக்காது. எனவே காவி, மஞ்சள், நீலம் பொடிகளை கரைத்து வீட்டுச் சுவர்களில் ஒன்றில் பெரிதாகப் படமாக வரைந்து வைத்து வழிபடுவார்கள்.
அப்படம் வரையப்பட்ட சுவர் வீட்டின் புனிதச் சுவர் ஆகிவிடும். ஒரே அறைதான் கிராமத்து வீடாக இருக்கும். சமைப்பது அதில்தான் உண்பதும் அதில்தான் உறங்குவதும் அதில்தான். படுக்கும்போது அந்தப் படம் வரைந்த சுவர் பக்கம் கால் நீட்ட, மாட்டார்கள். வருடா வருடம் அந்த சுவர்ப்படத்தை மீண்டும் வரைந்து புதுப்பித்துக் கொள்வார்கள்.
பொதுவாக கல்யாணமாகாத இளம் பெண் ஒரு குடும்பத்தில் செத்துவிட்டால் ரொம்ப பயப்படுவார்கள். வருத்தப்படுவார்கள். சாமியாக்கி அவளைக் கும்பிடுவார்கள்.
குலதெய்வம் என்பது சொந்தபந்தமாக இருக்கும் பல குடும்பங்கள் சேர்ந்து கும்பிடும் தெய்வமாகும். பெரும்பாலும் ரத்தவழி உறவு கொண்ட குடும்பங்கள் வேறுவேறு ஊர்களில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அந்தக் கோயில் திருவிழா அன்று வந்து ஒன்றுகூடி விடுவார்கள்.
எங்களுடைய குடும்பத்தார் (அதாவது அப்பாவழியில்) குலதெய்வமாகக் கும்பிடுவது ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை ஒட்டி அமைந்துள்ள வழிவிட்ட அய்யனார் சாமி ஆகும். நான் இருப்பது நெல்லை மாவட்டம். என் உறவினர்கள் இருப்பது தூத்துக்குடி விருதுநகர் மாவட்டங்களில். அந்தக் குலதெய்வக் கோயிலுக்குப் போனபோது அங்கே பல ஊர்க்காரர்கள் கும்பிட வருவது தெரிந்தது.
எல்லோரும் ஒரு காலத்தில் அந்தக் கமுதிப் பக்கம் வாழ்ந்திருக்க வேண்டும். பிழைக்க வழி இல்லாமல் (ராமநாதபுரம் மாவட்டத்தில்தான் தண்ணீர் பஞ்சமாச்சே) வேறு வேறு திசைகளுக்குப் போயிருக்க வேண்டும். குலப் பெரியவர் ஒருவர் வழியில் இறந்திருக்க வேண்டும். அவர் இறந்து வழிவிட்டதால் வழிவிட்ட அய்யனார் ஆனாரா? அல்லது எங்கள் குலத்தாரால் ஏதோ காரணத்தால் கொல்லப்பட்டு வழிவிட்ட அய்யனார் ஆனாரா? அல்லது திசை தெரியாமல் அலைந்து வந்த எம்குல முன்னோர்களை சரியான வழிகாட்டி அனுப்பிய பெரியவர்தான் வழிவிட்ட அய்யனாரா? என்பது ஆய்வு செய்து கண்டுபிடிக்க வேண்டிய கதை. அரிவாளோடு அவர் அங்கே கண்மாய்க்கரை ஓரம் புளிய மரத்து நிழலில் நின்று கொண்டிருக்கிறார்.
இப்படிப் பல குலதெய்வங்கள் உண்டு. ஏப்ரல் மாதத்தில் குலதெய்வ வழிபாட்டுக்காக தென்மாவட்டங்களில் மக்கள் ஊர் ஊராக அலைவதைப் பார்க்கலாம். பிழைப்புக்காக பிறந்த ஊரைவிட்டு மக்கள் நகர்ந்து நகர்ந்து போய்க்கொண்டே இருந்த நம் பழைய வரலாற்றை இந்தக் குலதெய்வங்களின் கதை வேர்களைத் தேடுவதன் மூலம் கண்டுபிடித்துவிடலாம்.
ஒரு குடும்ப தெய்வமே ஒரு ஊரின் தெய்வமாக ஒரு வட்டாரத்தின் தெய்வமாக மாறிய கதைகளும் உண்டு. 1980 வாக்கில் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியில் சீனியம்மாள் என்றொரு கல்யாணமாகாத பெண் தற்கொலை செய்து கொண்டாள். அவள் வீட்டில் தனியாக இருந்தபோது வீட்டுக்கு வெளியே தூரத்தில் சில ஆண்கள் நின்று சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்களாம். அப்போது அவளுடைய அண்ணன் வேலை முடிந்து வீடு திரும்பியிருக்கிறான்.
ஒரு நல்ல பொம்பளைப்பிள்ளை குடியிருக்கிற வீடு மாதிரி தெரியலே. கண்ட கண்ட ஊர்ப்பயக எல்லாம் சிரிக்கிறாப்பிலே இருக்கு… என்று கோபமாகவும் ஜாடையாகவும் அண்ணன் உள்ளே நுழையும்போதே சத்தமாகப் பேசியபடி வந்தான். வீட்டில் வேறு யாரும் இல்லை நான் மட்டும்தான் இருக்கிறேன். அப்படியானால் அண்ணன் தன்னைத்தான் இப்படிக் கேவலமாகப் பேசுகிறான் என்பது சீனியம்மாளுக்குப் புரிந்தது. யாரோ நாலுபேர் தெருவில் நின்று எதையோ பேசி எதற்கோ சிரித்தால் அதற்கு நானா பொறுப்பு? கூடப்பிறந்த அண்ணனே இப்படிக் கேட்டுட்டானே என்று அன்றே அவள் தற்கொலை செய்துகொண்டாள்.
காட்டு வேலைக்குப் போன குடும்பத்தார் வந்து பார்க்கிறார்கள். செல்ல மகள் செத்துக்கிடக்கிறாள். பிறகென்ன? அவளை அடக்கம் செய்துவிட்டு அவளைச் சாமியாக வீட்டில் அவள் இறந்த இடத்தில் படம் வரைந்து கும்பிட ஆரம்பித்தார்கள். சீனியம்மாள் காப்பிகுடிக்கும் போது நிறைய சீனி போட்டுக்குடிப்பாளாம். அதனால் ஒரு கிண்ணத்தில் சீனியை வைத்துக் கும்பிட்டார்கள். சீனியம்மாளை நினைத்துச் செய்யும் காரியமெல்லாம் நல்லா நடக்கும் என்கிற நம்பிக்கை பரவியது அதனால் பக்கத்து ஊராரும் கும்பிட்டார்கள். குடும்ப சாமியாக மலர்ந்த சீனியம்மா இப்போது அந்த வட்டார சாமியாகிவிட்டாள்.
இதெல்லாம் போக, கும்பிடாத சாமி என்றும் ஒரு வகை உண்டு. திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவில் வட்டத்தில் இப்படிச் சாமிகள் உண்டு. அது என்னவெனில் காட்டுக்குப் போகும்போது இடி விழுந்து (அதாவது மின்னல்வெட்டி) செத்தவர்களுக்கு அவர் செத்த இடத்திலேயே கல்நட்டு சாமி என்று வைத்துவிடுவது. ஆனால் அதை யாரும் கும்பிடுவது கிடையாது. கேட்டால் அது கும்பிடாத சாமி அல்லவா? என்கிறார்கள்.
கொலை, தற்கொலையால் செத்தால் கும்பிட்ட மக்கள் இடி விழுந்து செத்ததை ஏன் கும்பிடவில்லை? மண்டையை அரிக்கும் கேள்விதானே? ஆய்வுக்குரிய கேள்வி.