அன்பு மடல் 2
அளவான சுதந்திரமே வளமான வாழ்வை அளிக்கும்!
பாசமிகு பேரன், பேத்திகளே!
மாணவப் பருவத்தில் உள்ள நீங்கள் இன்னமும் குழந்தைப் பருவத்தினைத் தாண்டாதவர்களே. எனவே நமக்கு நல்லது எது? கெட்டது எது? என்று முழுவதுமாக எடை போட்டு சீர்தூக்கிப் பார்க்கும் அளவுக்கு முதிர்ச்சி ஏற்பட்டு விடவில்லை. மறந்துவிடாதீர்!
இந்த நிலையில், உங்கள் பெற்றோர்கள்தான் உங்களது பாதுகாவலர்கள்; சிறந்த வழிகாட்டிகள். அவர்கள் இந்த வளர் பிராயத்தில் இப்போது உங்களுக்குக் கொடுத்துள்ள சுதந்திரம் என்பது, தாய்ப்பறவை கோழிக்குஞ்சுகளுக்கு அளித்துள்ள சுதந்திரம் போன்றதுதான் என்றபோதிலும், அதுவே இப்போது போதுமானது.
குஞ்சு வளர்ந்து, போதுமான அளவு வளர்ந்தால்தான், நமக்கு ஆபத்து எங்கிருந்து வருகிறது? எப்படி வருகிறது? என்பது புரியக்கூடும். அதுவரையில் அவர்கள் தரும் அளவான சுதந்திரம்தான் உங்களுக்கு வளமான வாழ்வை உறுதி செய்யும்.
சுதந்திரம் என்பது எப்போது பயனுள்ளதாக, அல்லது மகிழத்தக்கதாக இருக்கும் என்றால், அது அளவுடனே இருக்கும்போதுதான்.
அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் விஷம் (நஞ்சு) என்பது நமது பெரியோர்களின் மூதுரை / அறிவுரை அல்லவா?
பருந்து வந்து கொத்திக் கொண்டு செல்லுவது பற்றித் தாய்க் கோழிதான் அறியுமே தவிர, கவலையற்றுத் திரியும் அதன் குஞ்சுகளுக்குத் தெரியாதே! அவர்கள் தாய்க் கோழியின் பாதுகாப்பு எல்லையைத் தாண்டினால் வரும் ஆபத்துபற்றி அறியாதவர்கள் ஆயிற்றே!
நாம் காரில், அல்லது பேருந்து – (பஸ்ஸில்) – பயணம் செய்யும்போது, போக்குவரத்தில் – சாலைகளில் – (ரோடுகளில்), டிராபிக் விளக்குகள் பச்சை, சிவப்பு, மஞ்சள் என்று வைத்து அதில் பச்சை எரிந்தால் போகலாம். சிவப்பு விளக்கு எரிந்தால் நின்று ஆகவேண்டும் என்பது கட்டுப்பாடுதானே. அதைக் கடைப்பிடிக்கத் தவறி மீறினால் விபத்து நடந்து நமது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமே, இல்லையா?
எனக்கு சுதந்திரம் மேலும் வேண்டும் என்று சிவப்பு விளக்கு எரியும்போதுகூட நான் நிற்க மாட்டேன்; எனது கார் நிற்காது; நிற்கக்கூடாது என்று கூறி, நிறுத்தாமல் ஓட்டினால் விளைவு என்ன வரும்? உயிர் போய்விடும் விபத்து உறுதி அல்லவா?
வகுப்பில்கூட நமது ஆசிரியர்களுக்குக் கீழ்ப்படிந்து நீங்கள் நடப்பது அடிமைத்தனம் அல்ல. அது ஒருவகை ஒழுங்கு.
ஒழுங்கை, கட்டுப்பாட்டைக் காக்கும் நல்ல பயிற்சியை நாளும் கற்று நாளைய நல்ல குடிமக்களாக நாம் மலருவதற்குத்தான்!
பயிர்கள் விளையும் தோட்டத்தில் வேலி இருப்பது பயிர்ப் பாதுகாப்புக்குத் தானே!
வெண்ணெயும், சுண்ணாம்பும் இரண்டும் வெள்ளைதான் என்றாலும், அதைப் பிரித்து எது வெண்ணெய், எது சுண்ணாம்பு என்று தெரியாத பருவம் – வயதுதானே உங்களுக்கு இப்போது?
இந்த நிலையில் அதனைக் கூற உங்கள் பெற்றோர்கள் உங்களுக்கு அளவான சுதந்திரம் தருவதுதானே நியாயம்?
எனவே, அளவான சுதந்திரமே நமக்கு வளமான வாழ்வை, தேக்கமில்லாத தெளிவான வாழ்க்கையை, அளித்து, பிஞ்சுகளாகிய நீங்கள், முறையாக காய்த்து, கனிந்த பழங்களாக முதிர – பக்குவப்பட தேவை அளவுள்ள சுதந்திரம். அதுவே நமக்கு ஔஷதம் (மருந்து) ஆகும்.
நுனிக்கொம்பிற்குச் செல்ல அவசரப்பட்டு ஒருவன் மேலே மேலே ஏறிக்கொண்டே சென்றால், அது அவனின் உயிர்க்கு உலைவைத்து (இறுதியாகி) விடும் என்று திருவள்ளுவர் திருக்குறளில் கூறியது நம் எல்லோருக்குமே நல்ல அறிவுரை, அறவுரை அல்லவா?
கைத்தொலைபேசிகூட ஏதோ ஒரு அவசரத்திற்கு உங்களுக்குத் தேவை. ஆனால், எப்போதும் அதை வைத்து காலவிரயத்தைச் செய்யாதீர். குறிப்பிட்ட பிராண்ட் விலை உயர்ந்ததே வேண்டுமென அடம்பிடித்து, பெற்றோர்களைக் கடனாளி ஆக்காதீர். படிப்பில் அக்கறை செலுத்துவீர்களா?
பிரியமுள்ள தாத்தா,
கி.வீரமணி