உழைப்பால் உயர்ந்த உன்னத நகரம் டோக்கியோ
– முனைவர் பேரா. ந. மங்களமுருகேசன்
உழைப்பினால் மனிதர்கள் உயருவர். நாடும் உயர முடியும் என்று காட்டிய உன்னத நகரம் டோக்கியோ. அது ஜப்பானின் தலைநகரம்.
ஹொன்ஷு,கொக்கைடோ, கியூஷு, ஷிக்கோக்கோ எனும் நான்கு பெருந்தீவு களின் சேர்க்கைதான் ஜப்பான். குட்டிநாடுதான் ஆனால், மின்னணுத் துறையில் உலகிற்கே வழிகாட்டிய நாடு அது இத்தனைக்கும் மன்னராட்சி உடைய நாடு.
டோக்கியோவில்தான் நாடாளுமன்றமும் இருக்கிறது, அரச குடும்பத்தினர் வாழும் மாளிகையும் மய்ய அரசும் இருக்கிறது.
உலகில் எந்த நகரத்திலும் இல்லாத அளவில் நான்கு கோடிக்கும் மேல் இங்கு வாழ்கிறார்கள். உலகிலேயே மக்களின் சராசரி வருவாய் அதிகம் உள்ள நாடு. இந்நாட்டில் உயர்வான வாழ்க்கை நிலை உள்ள நகரம் டோக்கியோ.
நாம்தான் டோக்கியோ என்கிறோம். ஆனால், ஜப்பானில் ட எழுத்தையெல்லாம் த என்றே உச்சரிப்பர். ஆகையால் தோக்கியோ என்பர்.
தலைநகராயிற்று
முன்னாட்களில் டோக்கியோ வை ஈத்தோ (ஈடோ) என்று அழைத்தனர். ஜப்பானின் அரசர் தொகுகாவா இயேசு என்பவர் 1600இல் ஈத்தோவைத் தலைநகரமாக்கினார். அப்போது ஈத்தோ உலகின் மாபெரும் நகர்களில் ஒன்றாகியது. மெய்ஜிங் புரட்சி என ஜப்பானைப் பழமையிலிருந்து புதுமைக்கு மாற்றிய காலத்தில் மெய்ஜி மன்னர் கியாத்தோ நகரிலிருந்து குடிபெயர்ந்து ஈத்தோவை இல்லமாக்கிட, ஈத்தோ, டோக்கியோ நகரமாய் உருவாகியது.
கோடையும், குளிரும்
மார்ச் முதல் நவம்பர் வரை கோடை காலம். டிசம்பர் முதல் பிப்ரவரி வரை குளிர் காலமும் நிலவுகின்றன.
ஜப்பான் நாட்டில் பவுத்த சமயம் புகுந்து உலவியபோதும் ஜப்பானியரின் பழமைச் சமயம் கூறும் ஆலயங்கள் சென்சோஜி ஆலயம், மெய்ஜி மன்னர் ஆலயம், யாக்கினி ஆலயம், செங்காகுஜி ஆலயம் ஆகியன காணத்தக்கவை.
சென்சோஜி ஆலயம்
சென்சோஜி ஆலயம்
அசகுசா கானோன் ஆலயம் எனப்படும் இது, கருணைத் தெய்வம் என அவர்கள் நம்பும் கானோன் எனும் பெண் தெய்வத்திற்காகக் கட்டப்பட்டது. அசகுசா ரயில் நிலையமருகில் உள்ளது. கி.பி.650இல் கட்டப்பட்ட இந்த ஆலயம்தான் டோக்கியோவின் மிகப் பழமையான ஆலயம். ஆலயத்தின் முதல் வாயில் இடிவாயில் எனப்படுகிறது. ஆலயம் முன் வழியில் அங்காடி உள்ளது. அதில் ஜப்பானிய கலைப்பொருளான மடிக்கும் விசிறி, ஜப்பானிய பாரம்பரிய உணவு வகைகள் கிட்டும். அங்காடியைக் கடந்து ஆலயத்தின் மய்யக் கட்டடம், அய்ந்து அடுக்கு பகோடா கோபுரம் காண்கிறோம். அறிவியல் வளர்ச்சி பெற்ற ஜப்பானியரிடம் காணப்படும் மூடநம்பிக்கை ஒன்று இது. ஆலயத்தில் ஏற்றி வைக்கப்படும் ஊதுபத்தியின் புகை எல்லா நோய்களையும் போக்கும் ஆற்றல் வாய்ந்தது என்பது ஒன்று.
மெய்ஜி மன்னர் ஆலயம்
1868இல் ஆட்சிக்கு வந்து ஜப்பானை அறிவியல், தொழில்நுட்பம், நவீன மயத்துக்கு இட்டுச்சென்ற மெய்ஜி மன்னர் 1912இல் இறந்தார். இந்த மனிதரையும், அவருடைய மனைவியையும் தெய்வமாக்கி வழிபடுகின்றனர்.
யாக்கினி ஆலயம்
ஜப்பான் நாட்டின் அமைதிக்காகப் போர்கள் பலவற்றில் பங்கேற்றுத் தங்கள் இன்னுயிரை ஈந்த வீரர்களுக்கான 1860ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இதில் தெய்வமாக வழிபடப்படுபவர் சுமார் 2 லட்சம் வீரர்கள். அவர்களின் பெயர், பிறந்த ஊர், பங்கேற்ற போர், மறைந்த இடம் ஆகியவை எழுதி வைக்கப்பட்டுள்ளன. யாக்கினி என்றால் அமைதியான நாடு என்று பொருள்.
செங்காகுஜி ஆலயம்
இது ஒரு கல்லறைக் கோயில். இங்கு 47 சாமுராய் வீரர்களின் சமாதி உள்ளது. மறைந்த சாமுராய் வீரர்களின் கதை டோக்கியோவில் மிகப் பிரபலம்.
மன்னர் அரண்மனை
மன்னர் அரண்மனை
சாமுராய் சிலை
அரச குடும்பத்தினரைக் கடவுள் என ஜப்பானியர் போற்றுகின்றனர். அதனால் அரண்மனையை அவர்கள் கடந்து செல்கையில் சாலையில் சென்றாலும் வணங்குவர். அரண்மனைக்கு நிஷுபாஷி என்னும் இரட்டைப் பாலம் வழியே செல்ல வேண்டும்.
டோக்கியோ கோபுரம்
பாரிஸ் நகரின் ஈஃபிள் கோபுரத்தை முன் மாதிரியாக வைத்து கட்டப்பட்ட டோக்கியோ கோபுரம் 333 மீட்டர் உயரத்தில் 4000 டன் எடையில் நகரின் மய்யத்தில் உள்ளது. இரவு பதினொரு மணி வரை விளக்குகளால் ஜொலிக்கிறது. தொலைக்காட்சி, வானொலி ஆகியவற்றின் தொடர்பு சாதனமாகவும் பயன்படுகிறது.
நாடாளுமன்றம்
நாய்க்குச் சிலை
நாய்ச் சிலை
ஹசிகோ என்பது ஒரு நாயின் பெயர். இந்நாய் தினமும் காலை முதல் மாலை வரை டோக்கியோ இரயில் நிலையங்களில் ஒன்றான ஷிடியா ரயில் நிலையத்தில் காத்திருக்குமாம். அந்த உரிமையாளர் இறந்த பிறகும் பல வருடங்கள் காத்திருந்ததாம். எனவே அந்நாயைப் போற்றும் வகையில் ஹசிகோவின் சிலை உள்ளது.
யூனோ பூங்கா
யூனோ பூங்கா
சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இந்தப் பூங்கா 1873ஆம் ஆண்டு முதல் இயங்குகிறது. ஜப்பானின் முதல் உயிரியல் பூங்கா இங்கு உள்ளது. பாண்டாக் கரடிகளைக் காணலாம். இது பூங்கா மட்டுமல்லாது, அருங்காட்சியகங்களும் உள்ளன.
மீன் சந்தை
எல்லாப் பக்கங்களிலும் கடல் சூழ்ந்த நாடு. ஆகையால் உலகின் மிகப் பெரிய மீன் சந்தை உள்ளது. அதிகாலை முதல் இரவு வரை இரண்டாயிரம் டன் மீன்கள் ஏலத்தில் விலை போகின்றன.
சோனி நிறுவனம்
ஜப்பான் என்றதும் ஒருவர் நினைவில் நிழலாடுவது சோனி எனும் மின்னணு கருவிகள் தயாரிக்கும் நிறுவனமே. இதன் தலைமையகம் மக்கள் கண்டு மகிழ நாள்தோறும் திறந்துள்ளது. இங்கு அமைந்துள்ள மாபெரும் திரைகளில் திரைப்படங்கள், விளையாட்டுப் போட்டிகள் என எதனையும் கண்டு மகிழலாம்.
டோக்கியோவைச் சுற்றிப் பார்த்திட மார்ச், ஏப்ரல், மே மாதங்களே சிறப்பானவை.
1920இல் பூகம்பத்தையும், 1945இல் இரண்டாம் உலகப் போரின் அழிவையும் சந்தித்துத் தரைமட்டமான நகரம் என்பதை இன்று பார்க்கும் எவரும் நம்பார். இன்று ஜப்பானிய மக்களின் உழைப்பின் பயனாய்ப் புத்தம் புதியதாய் எழில்மிக்க எவரும் கண்டுவியக்கும் நகராய் ஜப்பான் பூத்துக் குலுங்குகிறது. உலகம் உழைப்பின் பெருமையை உணர ஓர் எடுத்துக்காட்டு டோக்கியோ.