சாமிகளின் பிறப்பும் இறப்பும் (7)
பிடிமண் சாமிகள்
– ச.தமிழ்ச்செல்வன்
திருநெல்வேலி மாவட்டம் சேரன் மகாதேவி பக்கம் பொழிக்கரை என்ற ஊர் இருக்கிறது. அங்கே சுடலைமாடன் கோவில் ஒன்று உள்ளது. ஒரு 100 வருசத்துக்கு முந்தி அங்கே சுடலை கோவில் கிடையாது. இப்போ எப்படி வந்தது என்பதற்கு ஒரு கதை இருக்கிறது. பொழிக்கரையைச் சேர்ந்த நாடார் வீட்டுப் பையன் ஒருவனுக்குப் பக்கத்து ஊரான கரிசல் கிராமத்தில் பெண் கேட்டுப் போனார்கள்.
அவர்களும் சந்தோசமாகப் பெண் கொடுத்தார்கள். அவள் பெயர் ரஞ்சிதம். கல்யாணமும் தடபுடலாக நடந்தது. (கொட்டு மேளம் எல்லாம் வைத்து ஏகப்பட்ட பேருக்கு இலைபோட்டுச் சாப்பாடு போட்டு பொண்ணு அழைப்பு மாப்பிள்ளை அழைப்பு எல்லாம் இருந்தால் தடபுடல் கல்யாணம் என்பார்கள்.) அதெல்லாம் இல்லாமல் ரொம்ப நெருங்கின சொந்தக்காரர்களை மட்டும் அழைத்து கோவிலில் தாலிகட்டினால் சுருக்கமாக முடிச்சிக்கிட்டோம் என்பார்கள்.
தடபுடல் கல்யாணத்துக்குப் பிறகு கரிசல் பொண்ணு, மாப்பிள்ளை ஊரான பொழிக்கரைக்கு போய்விட்டாள். கரிசல் கிராமத்தில் சுடலைமாடன் கோவில் திருவிழா நடக்கும் பத்துநாளும் புருசன் பெஞ்சாதி ரெண்டு பேரும் தவறாமல் கரிசலுக்குப் போய்விடுவார்கள். கிடா வெட்டிப் பொங்கல் வைத்துச் சாமி கும்பிட்டு வருவார்கள். எல்லாம் நல்லபடியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால் நாட்டில் பல மாற்றங்கள் நடந்து கொண்டிருந்தன.
நாடார் ஜாதியைச் சேர்ந்தவர்கள் அப்போதெல்லாம் மற்ற மேல்ஜாதிக்காரர்களால் மோசமாக நடத்தப்பட்டனர். சிவன் கோவில், பெருமாள் கோவில் போன்ற பெரிய பணக்காரச் சாமிகளின் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்ட ஜாதிகளைச் சேர்ந்த மக்களை அனுமதிக்க மாட்டார்கள். நாடார் ஜாதி மக்களையும் உள்ளே விட மாட்டார்கள். அந்த சமயத்தில்தான் வெள்ளைக்காரர்கள் இந்தியாவுக்கு வரும்போது அவர்களுடைய சாமியையும் இங்கே கூட்டிவந்தார்கள்.
வெள்ளைக்காரனுக்கு ஜாதி கிடையாது. ஜாதி என்னும் ஏற்பாடு இந்து மதத்தில் மட்டும்தான் உண்டு. ஆகவேதான் இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டிலும் ஜாதி இல்லாமல் இருக்கிறது. நாடார் ஜாதியைச் சேர்ந்த மக்கள் பார்த்தார்கள். உள்ளே வராதே என்று சொல்கிற நம்ம ஊர்ப் பணக்காரச் சாமிகளின் கோவிலுக்குப் போவதைவிடச் ஜாதி வித்தியாசம் பார்க்காமல் ரெண்டு கைகளையும் விரித்து வா வா என்று அழைக்கும் வெள்ளைக்காரச் சாமியான ஏசுவைக் கும்பிடலாமே என்று முடிவு
செய்தார்கள். அதைப் பற்றிச் சொல்ல ஊர்ஊராகப் பாதிரியார்களும் தினசரி வந்து போய்க்கொண்டிருந்தார்கள். தமிழ்நாடு முழுவதும் பல ஊர்களில் தாழ்த்தப்பட்ட ஜாதிகளைச் சேர்ந்த மக்களும் நாடார் ஜாதி மக்களும் காலம் காலமாகக் கும்பிட்டு வந்த சாமிகளை விட்டுவிட்டுக் கிறிஸ்தவர்களாக மாறி சர்ச்சுக்குப் போக ஆரம்பித்தார்கள்.
நம்ம கதையில் வரும் கரிசல் ஊரில் இருந்த மக்களும் கிறிஸ்தவர்களாக மாறினார்கள். ஊரில் பெரிய சர்ச் ஒன்றைக் கட்டி எழுப்பினார்கள். வெள்ளைக்காரப் பாதிரிமார் வந்து எல்லோருக்கும் ஞானஸ்நானம் வழங்கி இம்மானுவேல், பீட்டர், சார்லஸ், மேரி, ரோசலின் என்று எல்லோருக்கும் பேரு மாற்றித்தந்தார்கள்.
கரிசல் மக்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆளுக்கு ஒரு பைபிளைத் தூக்கிக்கொண்டு சர்ச்சுக்குப் போனார்கள். ஆனால் அந்த ஊரில் பிறந்த ரஞ்சிதம் பொழிக்கரைக்குப் போய் விட்டபடியால் அவள் இன்னும் ரஞ்சிதமாகவே இருந்தாள். கரிசலில் நின்ற சுடலைமாட சாமி இப்போது கும்பிட ஆளில்லாமல் அனாதையாக நின்றார். மழையில் கரைந்து வெயிலில் காய்ந்து ஏனென்று கேட்க நாதியற்றுப்போனார்.
கொஞ்ச நாளில் பொழிக்கரையில் வாழ்ந்து வந்த நாடார் ஜாதி மக்களில் பலருக்கும் அம்மை நோய் கண்டது. இன்னும் பலருக்கு வாந்தி பேதி வந்து சீரழிந்தார்கள். சிலருக்கு உடம்பெல்லாம் புண்ணாக அக்கி என்ற நோய் தாக்கியது. மருத்துவமனை வசதியோ அறிவியல் பார்வையோ இல்லாத அந்த மக்கள் ஏதோ சாமி குத்தம் ஆகிவிட்டது என்று பயந்தார்கள். குறி கேட்கப் போனார்கள். குறி சொன்னவர் கரிசலில் சுடலைமாடன் அனாதையாகிவிட்டான். அவன் கோபத்தில் நோய்களை ஏவ ஆரம்பித்துவிட்டான்.
கரிசல் மக்கள் எல்லாம் வேற சாமிகிட்டப் போய்விட்டார்கள். அவர்களை மாடனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. நம்மைப் போட்டுத் தாக்குகிறான் என்று சொன்னார். சரி, சாமி கோபத்தைத் தணிக்க நாம என்ன செய்யிறது? என்று மக்கள் கேட்டார்கள். நம்ம ஊரான பொழிக்கரையில் அவனுக்குக் கோவில் வைத்துப் பீடம் எழுப்பிக் கும்பிட்டால் கோபம் தணிந்துவிடும் என்றார். சரி அவ்விதமே ஆகட்டும் என்று ஊர் முடிவு செய்துவிட்டது. கரிசலில் உள்ள சாமியை இங்கே அப்படியே தூக்கிவந்து நடுவது தப்பு.
அப்போது என்ன செய்வார்கள் என்றால்…
கொஞ்சம் பேர் 21 நாள் விரதம் இருந்தார்கள். அந்த 21 நாளும் கறி, மீன், கருவாடு போன்ற அசைவச் சாப்பாட்டைச் சமைக்கவும் மாட்டார்கள். சாப்பிடவும் மாட்டார்கள். கடைசி நாளில் குளித்து ஈர வேட்டி ஈரச் சேலையோடு செருப்புப் போடாமல் கொட்டும் மேளத்தோடு கரிசலுக்கு நடந்தே போனார்கள். அங்கே சிதைந்து கிடந்த சுடலைமாடன் பீடத்துக்கு முன்னால் நின்று பக்தியோடு கும்பிட்டார்கள். சரி உன்னைக் கவனிக்காமல் விட்டது எங்க குத்தம்தான். உங்க பிள்ளைக நாங்க தப்புப் பண்ணிட்டோம்.
எங்களை மன்னிச்சுப் பெரிய மனசோட எங்களோட கிளம்பிவா சாமி என்று சத்தமாகச் சொல்லிக் கும்பிட்டார்கள். சிலருக்கு அருள் வந்து சாமி ஆடினார்கள். பெரியாட்கள் சுடலைமாடனுக்கு முன்னால் கிடந்த மண்ணில் ஒரு பிடி எடுத்துக் கொண்டு வந்திருந்த ஒரு புது மண்கலயத்துக்குள் போட்டார்கள். அதை மஞ்சள் துணியால் வண்டுகட்டி மூடி, விரதம் இருந்த ஆட்களில் ஒருவர் தலையில் வைத்து சரி புறப்படுங்க போகலாம் என்று அதே மேளத்தோடு பொழிக்கரைக்குப் போனார்கள். வழியில் எங்கும் நிற்கமாட்டார்கள்.
வழியில் நின்றால் ஏதாவது வேண்டாத ஆவிகள் அந்தக் கலயத்துக்குள் புகுந்துவிடும். அப்புறம் அதுவும் கூடவே ஊருக்கு வந்துவிடும் என்று பயப்படுவார்கள். கலயத்துக்குள் கொண்டுவரும் அந்த மண்ணுக்குப் பிடி மண் என்று பெயர் சொல்லுவார்கள்.
அந்த மண்ணைக் கொண்டுவந்து பொழிக்கரையில் ஒரு நல்ல இடம் பார்த்து அந்த ஊர் மண்ணோடு இந்தப் பிடிமண்ணையும் கலந்து புதிதாக ஒரு மண்பீடம் கட்டி எழுப்பினார்கள். ஏழைச்சாமிகளுக்கு கற்சிலை ஏது? மண் பீடம்தானே சாமி. இப்படியாக கரிசலில் அனாதையாக நின்ற சுடலைமாடன் புத்துயிர்பெற்று பொழிக்கரைக்கு வந்து சேர்ந்தார். அப்பாடா என்று நிம்மதியாகப் பெருமூச்சுவிட்டார். இன்னும் கொஞ்சநாளில் செத்துப்போயிருக்கக்கூடிய அந்தச் சாமியை பொழிக்கரை மக்கள் மீண்டும் உயிர் கொடுத்துக் காப்பாற்றினார்கள்.
உண்மையில் இந்த ஊர் மக்களுக்கு நோய்களை ஏவிவிட்டது இந்த மாடன் சாமியா? அது அந்தக் குறி சொன்னவர் கட்டிய கதைதானே? குறி சொல்பவர் கரிசல் பக்கம் போயிருப்பார். சாமி சாகக் கிடப்பதைப் பார்த்திருப்பார். அவருக்கு மனம் ரொம்ப வேதனைப்பட்டிருக்கும். சரியான சந்தர்ப்பமாக மக்கள் குறிகேட்க வந்ததும் மாடன் கோபமாக இருக்கிறான் என்று கதையைக் கட்டிவிட்டார்.
இப்படிப் பிடிமண் எடுத்துக் கொண்டுபோய் பல ஊர்களில் பல சாமிகளை மக்கள் படைத்தார்கள். பரப்பினார்கள். இன்றும் பரப்பி வருகிறார்கள். அதுசரி, மேல்ஜாதிக்காரர்களின் கொடுமை தாங்காமல்தானே தாழ்த்தப்பட்ட ஜாதிமக்களும் நாடார் ஜாதி மக்களும் கிறிஸ்தவர்களாக மாறினார்கள்? அங்கே போய் உடனே அவர்களுக்கு மரியாதை கிடைத்துவிட்டதா? வடக்கன் குளம் சர்ச்சின் கதையைக் கேட்டால் நமக்கு அதுபுரியும்.
சர்ச்சுக்குப் போன மக்கள் எல்லோருக்கும் வெள்ளைக்காரனும் பாதிரிமார்களும் சேர்ந்து பள்ளிக்கூடம் கட்டிப் பாடம் சொல்லிக் கொடுத்தார்கள். படித்து முடித்ததும் கவர்மெண்ட் உத்தியோகம் போட்டுக் கொடுத்தார்கள். கால்காசு உத்தியோகமானாலும் கவர்மெண்ட் உத்தியோகம் அல்லவா? அரைக்காசு உத்தியோகம் ஆனாலும் அது அரசாங்க உத்தியோகம் அல்லவா? என்று மக்களுக்கு எப்போதும் அரசு வேலை மீது ஒரு மரியாதை இருக்கும்.
ஆகவே, தாழ்த்தப்பட்ட மக்களும் நாடார் ஜாதி மக்களும் கிறிஸ்தவத்துக்குப் போய் வெள்ளைக்காரனின் செல்லப்பிள்ளைகள் ஆகிச் சலுகைகள் அனுபவிக்கிறார்களே என்று மேல்ஜாதிக்காரர்கள்கொஞ்சப் பேருக்கு வயிறு எரிந்தது; மேல் ஜாதிகளில் ஒன்றான பிள்ளைமார் ஜாதிக்காரர்களும் கொஞ்சப் பேர் கிறிஸ்தவத்தில் சேர்ந்தார்கள்.
நெல்லை மாவட்டம் வடக்கன் குளத்தில் இப்படிப் பல ஜாதிக்காரர்களும் கிறிஸ்துவத்தில் சேர்ந்தார்கள். எல்லோருக்கும் ஒரே சர்ச்தானே. இதுவரை சிவன், பெருமாள் போன்ற பெரிய கோவிலுக்கு உள்ளேயே வரக்கூடாது என்று வெளியே நிறுத்தப்பட்டிருந்த பள்ளர், பறையர் போன்ற ஜாதிக்காரர்களும் பிள்ளைமார்களும் ஒரே சர்ச்சில் ஒரே ஏசுவைக் கும்பிட வேண்டும். இதை எங்களால் ஏற்றுக் கொள்ளமுடியாது என்று மேல்ஜாதிக் கிறிஸ்துவர்கள் பாதிரியாரிடம் சண்டைக்குப் போனார்கள்.
எல்லோரும் சமம் என்பதால் தான் நாங்கள் மதம் மாறி உங்களிடம் வந்தோம். இங்கேயும் அதே ஜாதி என்பதை ஏற்றுக் கொள்ள முடியாதென தாழ்த்தப்பட்ட மக்கள் நியாயமான குரல் எழுப்பினர்.
பாதிரியாருக்கு ஒண்ணும் விளங்கவில்லை. போப்பாண்டவர் இருக்கும் ரோமாபுரியிலிருந்து உலகின் எந்த நாட்டிலும் கிறிஸ்தவத்தில் ஜாதி கிடையாதப்பா என்று சொல்லிப் பார்த்தார். அவர்கள் விடவில்லை. வேற எங்க வேணாலும் ஜாதி இல்லாமல் இருக்கலாம். ஆனா இங்க ஜாதி இருக்கும் என்று பாதிரியாருக்கு பாடம் நடத்தினார்கள். பாதிரியார் வெள்ளைக்காரன். அவருக்கு இது பெரிய தலைவலியாக இருந்தது. இரண்டு தரப்பாரும் ஏற்றுக் கொள்ளும் விதமாக ஒரு விடையை அவர் கண்டுபிடித்தாக வேண்டுமே.
கண்டுபிடித்தாரா?