சிம்பொனியின் தந்தை ஜோசப் ஹேடன் (JOSEPH HAYDN (1732-1809))
– சாரதாமணி ஆசான்
என்னுடைய மொழி உலகில் உள்ள எல்லோருக்கும் புரியும் என்று தன் இசையின் தன்மையைப் பற்றிக் கூறிச் சென்ற ஜோசப் ஹேடன் வாக்கு இன்றும் உயிர்ப்புடன் வாழ்கிறது. அவர் வாழ்ந்த வியன்னா இசை நகரம்(City of Music) என்று புகழப்படுகிறது.
இவரது மாணவர் பீத்தோவன்(Ludwig Van Beethovan) உலகம் புகழும் செவ்வியல்(Classical) இசை அறிஞர். மேலும் இவருடன் இணைந்து வியன்னா நகரில் இசையை அரங்கேற்றியவர் உலகப் புகழ் இசை மேதை மொசார்ட் (Wolf gang Amadeus Mozart) ஆவார். இத்தனைப் பெருமைக்குரியவர்தான் ஜோசப் ஹேடன். இவரையே இசை உலகம் சிம்பொனியின் தந்தை “Father of Symphony” என்று அழைக்கிறது.
குழந்தைப் பருவமும் இசை அறிவும்:
ஆஸ்திரியா நாட்டின் மிகச் சிறிய கிராமமான ரோரவ்(Rohrau) என்ற ஊரில் 1732ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் நாள் ஜோசப் ஹேடன் பிறந்தார். இவரது தந்தை மாத்தியாஸ் ஹேடன்(Matthias Haydn) கைவண்டி, மாட்டுவண்டி மற்றும் குதிரை வண்டிகளை வடிவமைக்கும் தச்சர். இவரது தாயார் மரியா கோலர்(Maria Koller) வீட்டு வேலை செய்யும் பணிப்பெண்.
பெற்றோர்கள் கடின உழைப்பாளிகள். அவர்கள் தங்களை களைப்பைப் போக்க மாலை நேரங்களில் தங்கள் ஊர் மக்களுடன் இணைந்து பாடுவது வழக்கம். தந்தை யாழ்(Harp) இசைப்பார்; அதற்குத் தக இவரது தாயார் பாடுவார். சில சமயங்களில் குழந்தையான ஹேடனும் தன் அன்னையுடன் சேர்ந்து பாடுவார். கிராம மக்கள் அனைவரும் இவர்கள் இசையை விரும்பிக் கேட்டு மகிழ்ந்தனர். இவர்களது பாடல் பெரும்பாலும் நாட்டுப்புற(FOLK) இசையாகவே இருக்கும்.
ஹேடன் அய்ந்து வயது சிறுவனாக இருந்தபொழுது இவரது உறவினரான பிரேங்க் (Franck) தன்னுடைய இசைப் பள்ளியில் மாணவராகச் சேர்த்துக் கொண்டார். அங்கு யாழ் மற்றும் வயலின் வாசிப்பதில் நன்கு பயிற்சி பெற்றார் ஹேடன். பயிற்சியின் பொழுது இவருக்கு மிகவும் அரிதாகத்தான் உணவளிக்கப்படும். ஆயினும் பயிற்சி மிகவும் கடுமையானதாக இருக்கும். இவரது இசைப்பள்ளியில் பயின்றவர்கள் சில முக்கிய தேவாலய நிகழ்வுகளில் பங்கு கொண்டு பாடுவது வழக்கம்.
அப்படி இவருக்குக் கிடைத்த வாய்ப்பில் மக்கள் இவரது இன்னிசைத் திறனைக் கேட்டு மகிழ்ந்தனர். இவரது இசையில் ஈடுபாடு கொண்டனர்.
முதல் வாய்ப்பு:
இவர் பயிலும் இசைப் பள்ளிக்கு வியன்னா நகரில் உள்ள புனித ஸ்டீபன் தேவாலய இசை இயக்குநர் ராய்டர்(Reutter) வருகை புரிந்தார். இவரது இசைப் புலமையைக் கண்டு பாராட்டிய அவர் வியன்னாவில் உள்ள தேவாலயத்தில் இசை அமைப்பாளராக பணி அமர்த்தி ஹேடனின் தகுதியை மேலும் உயர்த்தினார்.
ஹேடன் சிறு வயதிலிருந்தே நகைச்சுவை உணர்வு மிகுந்தவர். வியன்னா தேவாலய இசை நிகழ்ச்சிகளில் ,அரச குடும்பத்தினரே மதிக்கும் வகையில் இவரது இசை அமைப்பு அமைந்திருக்கும். வாலிப வயதில் ஹேடனின் குரல் வளம் சற்று மாறுபட்டதைக் காரணம் காட்டி இவர் பணியாற்றிய தேவாலயத்திலிருந்து இவர் வெறுங்கையுடன் வெளியேற்றப்பட்டார்.
தெருப்பாடகர்:
பணி விலகியதும் – தங்க இடமின்றி வியன்னா நகரப் பூங்காவில் இரவைக் கழித்தார். இவரது நிலை அறிந்த இவரது நண்பர்களில் சிலர் தங்கள் அறையில் தங்க வாய்ப்பளித்தனர்.தானாக இசை அமைத்து வியன்னா நகரின் தெருக்களில் பாடி தன் அன்றாட வாழ்விற்கான ஆதாரங்களை உருவாக்கிக் கொண்டார்.
உடுத்த இரண்டு ஜோடித் துணிகள் மட்டுமே இருந்தன. இவ்வாறு தொடர்ந்து பத்து ஆண்டுகள் சுதந்திரப் பாடகராக(Freelance Musician) வியன்னா நகர் முழுவதும் பாடி வந்தார். இவரது இனிய எளிய இசை அமைப்பும், பாடும் முறையும் மக்களைப் பெரிதும் கவர்ந்தது. அரசவைகள், இசை மன்றங்கள்,தேவாலயங்கள் என்று பல அமைப்புகளிலிருந்து தேடிவந்த பல வாய்ப்புகளைப் பயனுள்ள வகையில் பயன்படுத்தி பெருமை அடைந்தார்.
அரண்மனை அழைப்பு:
இவரது இசையில் பல்வேறு புதுமைகள் இருப்பதை உணர்ந்த அரச குடும்பத்தினர் இவரைத் தங்கள் அரசவை இசை அறிஞராக நியமிக்க விரும்பினர். அதன்படி 1761ஆம் ஆண்டு இளவரசர் எஸ்டர்ரசி(Eszterhazy) குடும்பத்தார் எஸ்டராசா(Eszterhaza) அரண்மனையில் இவரை அரசவை இசைக் கலைஞர் ஆக நியமித்தனர். புது வெள்ளம்போல் புது வேகத்துடனும் புதுப் பொலிவுடனும் இவரது இசைத் தொகுப்புகள் வெளிவரலாயின. இசைக் கலை இவர் உழைப்பால் உன்னத நிலைக்கு உயர்ந்தது. இசையின் அனைத்துப் பரிமாணங்களையும் _ நுட்பங்களையும் உள்ளடக்கிய இவர்தம் படைப்புக்கள் இசை உலகில் தனி வரலாறு படைத்தது.
சிம்பொனி அமைப்பு
ஹேடன் முப்பது ஆண்டுகள் தொடர்ந்து அரசவை இசைக் கலைஞர் ஆக இருந்தபொழுது பல சிம்பொனி இசைகளை வெளியிட்டார். அதில் பதினொன்று ஓபராவும்(Operas),அறுபது சிம்பொனியும்(Symphonics), அய்ந்து மாசஸ்(Masses), முப்பது சொனடாவும் (Sonatas), ஒரு கான்செர்டோவும்(Concerto), மற்றும் நூற்றுக்கணக்கான குறு இசைத் தொகுப்புகளும்(Shorter pieces) அடங்கும். இவரது உள்ளத்தைக் கொள்ளை கொண்ட, மயங்கச் செய்யும் இசை வெளியீடுகள் அய்ரோப்பாவில் உள்ள அனைத்து நாடுகளிலும் விரும்பிக் கேட்கப்பட்டன.
நகைச்சுவை உணர்வு:
அரண்மனையில் இவருடைய இசை நிகழ்ச்சியின்போது இசையால் அனைவரும் மெய்மறந்து இருக்கும் தருணத்தில் இளவரசர் இசையில் மயங்கி உறங்கலானார். இதை அறிந்த ஹேடன் தனது இசையில் எதிர்பாராவிதத்தில் மாற்றத்தைக் கொணர்ந்து உறங்கிய இளவரசர் மீண்டும் இசையைத் தொடர்ந்து ரசிக்க வகைசெய்தார். இந்த இசைக்கு எதிர்பாரா சிம்பொனி(Surprise Symphony) என்று பெயரிட்டு அழைத்தார்.
இசையின் இசை
1790ஆம் ஆண்டு இளவரசர் எஸ்டர்ரசி மறைந்தார்; அரண்மனையில் ஹேடனுக்கிருந்த பணி வாய்ப்புகள் குறைந்தன. இந்தச் சூழலில் இலண்டன் மாநகரில் இருந்து சிம்பொனி இசைஅமைக்க சாலமன்(J.P. Solomon) என்பவர் அழைப்பு விடுத்தார். அங்கு அவர் இலண்டன் சிம்பொனி(London Symponies) என்ற இசைத் தொகுப்பை வெளியிட்டார். அத்தொகுப்பு பெரும் வரவேற்பைப் பெற்றதுடன் ஆக்ஸ்போர்டு (Oxford) பல்கலைக் கழகத்தின் மதிப்புறு இசை முனைவர் (Honorary Doctorate) பட்டமும் பெற்றார்.
இங்ஙனம் அடுக்கடுக்காக புகழ் ஏணியின் உச்சியைத் தொட்ட இவர் 1795ஆம் ஆண்டு மீண்டும் வியன்னா திரும்பினார். அங்கு அவர் விண்வெளியை மையமாகக் கொண்டு தி கிரியேசன்(The Creation) என்ற இசைத் தொகுப்பை வெளியிட்டார். அவருடைய எல்லையில்லா இயற்கையின் மீதுள்ள அளவில்லா ஆர்வம் காரணமாக தி சீசன்(The Season) என்ற தொகுப்பை வெளியிட்டார்.
இத்தொகுப்புகள் யாவும் இவரது இசைக் கலையின் உன்னதத் தன்மையை உலகுக்கு உணர்த்தின. இயல்பாக அமைந்த இயற்கையுடன் ஒன்றிய கிராமிய நாட்டுப்புறப் பாடல்களை அடித்தளமாகக் கொண்டு இவர் இசையை அமைத்தமையால் அவ்வினிய எளிய இசை உலகில் உள்ளோர் அனைவர் உள்ளங்களைக் கொள்ளை கொண்டது. இசை உலகில் எல்லையில்லா உயரத்தை அடைந்த இவர் தனது 77ஆம் வயதில் 1809ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் நாள் இயற்கை எய்தினார்.