2050 ல் சுற்றுலா
– களங்காணி வி.மீனாட்சி
கயல் சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்தாள். அன்பு ஓடி வந்து அவன் அம்மாவைக் கட்டிப்பிடித்தான்.
உனக்கு டிபன் என்ன வேண்டும்? என்றாள் கயல் .
அடை என்றான்.
டிபன் தயாரிக்கும் தானியங்கி இயந்திரத்தில் உள்ள அடை என்னும் பட்டனை தட்டினாள்.
பிறகு அவளுடைய கணவன் அருளிடம் உங்களுக்கு என்னத் தேவை? என்றாள்.
அவர், புட்டு என்று கூற அதற்கான பட்டனைத் தட்டினாள். அப்பொழுதுதான் படுக்கையைவிட்டு எழுந்த அறிவு, எனக்கு இட்லி என்றான். அதற்கான பட்டனைத் தட்டிவிட்டு தனக்கும் இட்லியே போதும் என்பதால் அவளுக்குமாக சேர்த்து எத்தனை வேண்டும் என்பதற்கான பட்டனைத் தட்டிவிட்டு, அதற்கான நேரத்தை செட் செய்து வைத்தாள்.
இவையெல்லாம் தயாராகி விடுவதற்குள் குளியலை முடித்துவிட்டு வந்து விடலாம் என்று குளியலறையை நோக்கி நடந்தாள் கயல். அவள் வருவதற்குள் இயந்திரத்தில் பச்சை பட்டன் ஒளிர்ந்தது.
அனைவரையும் அழைத்து டிபன் சாப்பிட வாங்க என்றாள்.
டிபனுக்கான சட்னியைப் பல்வேறு பொடிகளைச் சேர்த்து கலக்கி வைத்திருந்தாள்.
சாப்பிடும்போது அன்பு, அப்பா… அத்தை வீட்டிற்குப் போயிட்டு வரலாமா? என்றான்.
ஆமா உங்க அத்தை மீனாவுக்கு என்னைக் கண்டாலே பிடிக்காது. அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் என்றாள் கயல்..
உங்க சண்டை என்னைக்குத்தான் தீரப்போகிறதோ தெரியலே, இதெல்லாம் காலங்காலமாய் நடந்து வருவது. இதை விட்டுத் தள்ளு என்றார் அருள்.
அம்மா… போயிட்டு வரலாம்மா… அத்தை வீடு எப்படித்தான் இருக்குன்னுப் பார்த்துட்டு வர்லாம் எனக் கேட்டான் அன்பு.
அருள், அவள்தான் எத்தனை நாட்களாக அழைத்துக் கொண்டிருக்கிறாள்.
கயல், ம்.. போயிட்டு வர்லாம்.
அருள் அன்புவையும் அறிவையும் பார்த்து, நீங்க உங்க வேலைகளை செய்து முடிக்க வேண்டியதை முடித்துவிடுங்கள். ஒரு மாதம் கழித்துப் புறப்பட்டால் சரியாக இருக்கும். அதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொள்ளலாம்.
அன்பு, ஏ!… அண்ணா ஜாலி ஜாலி என்றான்.
கயல், அங்கப் போறதுன்னா நிறைய செலவாகுமே என்றாள் அருளிடம்.
பிள்ளைகள் ஆசைப்படுகிறார்கள். அங்கப் போயிட்டு வந்தாத்தான் இவர்களுக்கும் நாமும் அப்படி வாழ வேணும்கிற எண்ணம் வளரும். அதனால நானும் சரின்னு சொல்லிவிட்டேன் என்றார்.
ம்… அதுவும் சரிதான் என்றாள்.
அன்புவும் அறிவும் அத்தை வீட்டிற்குச் செல்லும் மகிழ்ச்சியுடன் இருந்தனர்.
கயல் அருளிடம் விண்கலத்திற்குப் பதிவு செய்துவிடுங்கள் என்றாள்.
இதோ இப்பொழுதே ஆன்லைனில் செய்துவிடுகிறேன் என்றார்.
நம்ம நாலு பேரோட பெயர். பிறந்த நாள், படிப்பு, மருத்துவச் சான்றிதழ்கள், வங்கி கணக்கு, அங்குள்ள வங்கிக்கு தொகை மாற்றம் செய்து கொள்ள வசதி… இதையெல்லாம் ரெடி செஞ்சுட்டு, அதற்கப்புறம்தான் விண்விசா வாங்க வேண்டும்.
ஆமாம் அதைச் செய்யுங்கள் முதலில் என்றாள் கயல்.
மீனாவிற்கு என்ன என்ன தேவைப்படும் என்று எழுதி வை. நான் என் ரூமில் ஆபீஸ் வேலையைக் கவனிக்கிறேன் என்றார் அருள்.
அன்பு தன் அறைக்குச் சென்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் பாடங்களை அறிந்து கொண்டிருக்கும்போது தன் ஆசிரியரிடம் ஒரு மாதத்திற்குப் பிறகு ஜூலை மாதம் பதினைந்து நாள்கள் விடுமுறை வேண்டுமெனவும், தனக்குரியத் தேர்வை இந்த மாதத்திலேயே எழுதவும் அனுமதி கேட்டபோது இமெயில் அனுப்பி தலைமை ஆசிரியரிடம் முன் அனுமதி பெற்றுக் கொள் என்றார். பின் பாடத்தை கவனிக்க ஆரம்பித்தான்.
அறிவு வலைதளத்தின்மூலம் கல்வி கற்பதால் ஜூலை மாதம் பதினைந்து நாள்கள் தனக்கு விடுமுறை வேண்டும் என்பதைத் தெரிவித்தான். ஏனென்றால் எந்த எந்த நாட்களில் கல்வி கற்கிறோமோ அந்த நாட்களுக்கான கல்விக் கட்டணத்தைக் கட்டினால் போதுமானது. அப்பொழுதே அவனுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதேபோல் அருளும் தன் அலுவலகத்தில் விடுமுறைக்கான முன்அனுமதி பெற்றார். அவர் முன்அனுமதி பெறவில்லையெனில் தொழிலாளருக்கான ஊக்கத்தொகை புள்ளிகள் குறைந்துவிடும். அலுவலர்கள் தங்களுக்கானத் தேவைகளை மதிய உணவு நேர இடைவேளையில்தான் கேட்டுக்கொள்ள வேண்டும்.
விண்கலத்தில் செல்லவிருப்பதால் அதற்கான மருத்துவ சோதனை மற்றும் பயிற்சிகளை மேற்கொள்ள தயாராயினர். ஆம்… அவர்கள் நிலவில் குடியிருக்கும் அருளின் தங்கை வீட்டிற்குத்தான் விருந்தாளிகளாகப் போக முடிவு செய்துள்ளனர்.
இரவு உணவு உண்டபின் நால்வரும் நிலவிற்குச் சென்றுவர என்ன என்ன தேவை என்பதைப் பற்றி விவாதித்தனர்.
அருள், நாம அங்க தங்கறது ஆறு நாட்கள் மட்டுமே.
அன்பு, அப்பா அங்க செல்ல எத்தனை நாட்கள் ஆகும்?
போக மூன்று நாள்கள் வர மூன்று நாள்கள்
மூன்று நாள்களாகுமா!
ஆமா… இங்கிருந்து தோராயமா சொல்லனும்னா 3,54,410 கிலோ மீட்டர்.
சோமு, அவ்ளோ தூரமா?
ம்… என்ன அன்பு விண்பஸ்ஸில் போகலாமா? எனக் கேட்டார் அருள்.
அய்…. ஜாலி ஜாலி ரொம்ப ஆசையா இருக்கு.
கயல், விண்பஸ் பயணத் தொகை ரொம்ப அதிகமா இருக்குமே, இதை யோசிக்காமல் பயணப்பட்டுவிட்டோமே….
அருள், அங்கு மீனாவின் கணவன் நிலவிலிருந்து வேறு கிரகத்திற்குச் செல்ல ஆராய்ச்சி மேற்கொள்ளும் விண்நிலையத்தின் தலைமைப் பொறுப்பாளராக இருப்பதால் நமக்கு இந்தக் கட்டணம் மிகக் குறைவு. சமாளித்துக் கொள்ளலாம்.
அருள் தொடர்ந்தார்… அங்கு செல்ல நமக்கு மிகத் தேவையானவைகள் ரெண்டு. ஒன்னு…
நமக்கு ஒவ்வொருவருக்கும் பன்னிரெண்டு ஆக்சிஜன் சிலிண்டர்கள் தேவை
எதுக்கு… இது அன்பு.
உனக்கு தெரிந்திருக்குமே. அங்க நாம சுவாசிக்கத் தேவையான ஆக்சிஜன் குறைவு…
அறிவு, குறைவுன்னா!…. அங்க கொஞ்சம் இருக்குமா?…
அங்க கிடைக்கிற சிலிக்கன்_டை_ஆக்ஸைடு, அலுமினியம் ஆக்ஸைடு, கால்சியம்_டை_ஆக்ஸைடு போன்றவற்றிலிருந்து ஆக்சிஜனைப் பிரித்து எடுக்கிறார்கள்.
கயல், அப்புறம் எதற்கு இந்த சிலிண்டரெல்லாம்?
அருள், அது அவுங்கத் தேவைக்குப் போதுமானதாக இல்லை. நம்ம அரசாங்கமும் அனுப்பி வைக்கின்றது. அதனாலதான் அவர்களுக்கும் சேர்த்து இன்னும் இருபது சிலிண்டர்கள் எடுத்துச் செல்லனும்.
அன்பு சிலிண்டர்னா பெரியதாக இருக்குமே. எப்படி தூக்கறது?
அருள் சிரித்துக் கொண்டே சொன்னார், நீ நினைப்பதுபோல அடுப்பு சிலிண்டரல்ல… சிறியது. நம் விண்ணுடையில் வைத்துக் கொள்ளலாம். விண்ணுடை போடணும்னு சொல்றீங்க. இதில் என்ன சிறப்பு?
அதுவா… சந்திரன் நமக்கு பார்க்கிறதுக்கு அழகாகவும், குளிர்ச்சியா இருக்கிறமாதிரி இருக்குது. ஆனால் அங்க என்ன நடக்குது தெரியுமா?…. சூரியனுடைய புறஊதா கதிர்கள் நிலவின்மீது விழுகிறது. அங்க சுமார் +130 டிகிரி செல்சியசு வெப்பமும் சுமார் – 170 டிகிரி செல்சியசு குளிரும் இருக்கும்.
நமக்கு இங்கிருக்கும் 37 டிகிரி செல்சியசையேத் தாங்க முடியவில்லை. அதனால அவர்களுக்கான வெப்பத்தையும் குளிரையும் தாங்கற மாதிரி விண்ணுடை இங்குதான் தயாரிக்கிறார்கள். நமக்கு மூனு உடை, உங்க அத்தைக்கு மாமாவுக்கு அப்புறம்… அவர்களின் குழந்தைகளான கவின், எழில் ஆகியோருக்கும் ஆக மொத்தம் ஒரு பத்தாவது வாங்க வேண்டும்.
அம்மாடியோவ் என்றான் அன்பு.
அறிவு, சும்மா வாயப் பிளக்காதே.
கயல், ஏங்க!… தண்ணிக்கு என்ன செய்யறது?.
தண்ணிக்கு அங்க பனிப்பாறைகள் இருக்கின்றன. அதிலிருந்து எடுத்துக்கிறாங்க.
இருந்தாலும்.. நாம போகும்போது தண்ணீர் மாத்திரைகள் வாங்கிட்டுப் போலாம் என்றார் அருள்.
அன்பு அங்க நிறைய பள்ளங்களும் மேடுகளும் இருக்குதாமே!… எங்க போய் விளையாடுவது? பள்ளங்களையெல்லாம் மூடிவிட்டார்கள். உன்னோட விளையாட கவின், எழில் இருக்கிறார்கள். இதைவிட ரோபோக்கள் நிறைய அங்கு விற்குறாங்க. நீ என்ன விளையாட்டு விளையாட நினைக்கிறாயோ அதற்கு ஏற்ப வாங்கிக் கொள்ளலாம் அல்லது வாடகைக்கும் கிடைக்கும்.
இரவு கரண்டுக்கு என்ன செய்வார்கள் கேட்டது அறிவு.
நிலவின் மேல்புறம் சந்திர தூசி உள்ளது. அதிலுள்ள ஹீலியம்_3யைப் பிரித்தெடுக்கின்றனர். சந்திரக் களிமண்ணிலிருந்து மிகைமின் கடத்தும் அருமண் பொருட்கள் தயாரிக்கப்பட்டு அதிலிருந்து நாடா, பட்டை, கம்பி என்று உருவாக்குகின்றனர்.
கயல், அங்க நிற்க முடியாதாமே! பறந்துகிட்டுத்தான் இருப்போமா?
இங்க இருப்பதைவிட ஈர்ப்பு விசை ஆறு மடங்கு குறைவு. இருந்தாலும் சில மாத்திரைகள் சாப்பிட்டால் நன்றாக நடக்கலாம் என்றார் அருள். சாப்பாடு… என்று தயங்கித்தயங்கிக் கேட்டான் அன்பு..
அருள் , பசியே ஏற்படாமலிருக்க மாத்திரைகள் உள்ளன. மூன்று நாட்களுக்கு சாப்பிட வேண்டியதில்லை. இட்லி, சாம்பார், சட்னி வேண்டுமென்றால் அதற்கென்ற வெவ்வேறு வகையிலும் நிறத்திலுமுள்ளனஎன்றார்
அறிவு, அங்கிருந்து செவ்வாய் கிரகத்துக்கு போகலாமா?
அதற்கான முயற்சிகள் செய்துட்டு வர்றாங்க. சந்திர தூசியிலிருந்து கிடைக்கும் ஹீலியம்_3, நிலாத்தளத்தைத் தோண்டினா… மேலே எழுபத்தஞ்சு டிகிரி செல்சியஸ்ஸில் இருக்கிற நிலம்… ஒரு மூனு மீட்டர் ஆழத்திற்குக் கீழ் பனிகட்டியாக இருக்குதாம். இந்த நீரை மின்னாற்பகுத்தால் கிடைக்கும் நைட்ரஜன் இந்த இரண்டையும் எரிபொருட்களா பயன்படுத்தி செவ்வாய் கிரகத்தில் கால் வைச்சுட்டாங்க. இனிமே தொடர்ந்து ஆராய்ச்சி செய்வாங்கன்னு நினைக்கிறேன்..
அங்க மலையெல்லாம் ஏறலாம், பள்ளத்தில் விழலாம்… என்ன அன்பு சரிதானே என்றான் அறிவு.
சரி சரி… போதும் போய் படுங்க. மீதியை நாளைக்குப் பேசிக்கலாம் என்றாள் கயல்.
லட்சுமி என்ன கண்ணா… 2050 ல் சுற்றுலா என்கிறத் தலைப்பில் ஒரு சிறுகதை எழுதனும்.
அப்பாகிட்டே இதைப் பற்றி கேட்கணும்னு சொன்னியே!… என வினாவினாள்.
கண்ணன் ஓ… ரெடியாய்யிருச்சு!… அப்பா கடந்த ஒரு மணி நேரமா இதைப் பத்தித்தான் சொன்னார். நானும் எழுதிவிட்டேன்.
என் செல்லம்.. போய் விளையாடு… என்று எட்டாம் வகுப்பு படிக்கும் தன் மகனின் தலையை வருடியவாறு கூறினாள் கண்ணனின் தாய்.
வெள்ளத்து அனைய மலர்நீட்டர் மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு.
திருக்குறள்-595