சூழல் காப்போம்-11
போ.வா.போ!
60 பேர் பயணம் செய்ய சூழுலுக்கேற்ற போக்குவரத்து எது?
– பிஞ்சண்ணா
சே..ச்சே..சே… இந்த ஊருக்குள்ள போய்ட்டு வர்றதுக்குள்ள எவ்வளவு கஷ்டம்.. எவ்ளோ வண்டிங்க…. வண்டி பெருத்துப் போச்சு… ஊர் சிறுத்துப் போச்சு என்று பெரியவர்கள் நிறையப் பேர் புலம்புவதைக் கேட்டிருக்கலாம். உண்மை தான்… ஊரெங்கும் வாகனங்கள் பெருத்துப் போய்விட்டன.
வீட்டுக்கு ரெண்டு இரு சக்கர வாகனங்கள் -குறைந்தது ஒன்று! சென்னை போன்ற நகரங்களில் ஒரு வீட்டில் நான்கு அல்லது அய்ந்து வாகனங்கள். அதே போல தான் மகிழுந்துகளின் எண்ணிக்கையும். முன்பெல்லாம் ஊருக்கு 4 கார் இருக்கும். இப்போது தெருவுக்கு 8 கார் இருக்கிறது.
காரை நிறுத்த இடம் இல்லாமல், தெருவில் நிறுத்தி போகும், வரும் வழியையும் பாதி அடைத்துவிடுகிறார்கள். என்ன காரணம்? ஒரு பைசா கூட கட்டாமல் உங்களுக்கென ஒரு புது இரு சக்கர வாகனத்தை எடுத்துச் செல்லுங்கள் என்றும், ரூ.1000 மட்டும் செலுத்தி ஒரு புது காரை ஓட்டிச் செல்லுங்கள் என்றும் விளம்பரங்கள் வருவதைப் பார்க்கலாம்.
தேவையானவற்றை வாங்குவதற்குக் காசில்லாவிட்டாலும், இந்த விளம்பரங்களில் மயங்கி, பெருமைக்காக என்று பலர் இந்த வாகனங்களை வாங்கி வைத்துவிடுகிறார்கள். இதனால் கடன் பட்டு, பணம் திரும்பக் கட்டமுடியாமல் வாங்கிய பொருளைத் தூக்கிச் செல்லும்போது அசிங்கம் வேறு! அப்போது அது மகிழுந்தாகவா இருக்க முடியும்?
சரி, சம்பாதிக்கிறாங்க… வச்சுக்கிறாங்க. உனக்கு ஏன்யா வயித்தெரிச்சல்! என்று பலர் கேட்பார்கள். போக்குவரத்து வசதிகள் வளர்ந்திருப்பது மகிழ்ச்சி தான். ஒவ்வொரு தனி மனிதனும், தனக்கென எல்லா வசதிகளையும் பெற வேண்டும் என்பதிலும் நமக்கு மாற்றுக் கருத்து இருக்க முடியுமா என்ன?
ஆனால், அவற்றை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம். சாலையில் செல்லும் போது பாருங்கள். 4 அல்லது 5 பேர் செல்ல வசதியுள்ள ஒரு மகிழுந்தில் ஒரே ஒருவர் மட்டும் செல்வதைப் பார்க்கிறோம். ஆனால் அது அடைத்துக் கொள்ளும் அளவு சாலையில் எவ்வளவு இருக்கும்? இப்படி ஒவ்வொருவரும் ஆளுக்கொரு நான்கு சக்கர வாகனம் எடுத்துச் சென்றால், இட நெருக்கடி ஏற்படாதா? எவ்வளவு பெரிய சாலை ஆனாலும், தாங்குமா?
அது மட்டுமா? அதனால் எவ்வளவு விரயம்? பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை என்ன? நாம் அழிக்கும் இயற்கை வளம் எவ்வளவு? அவை உருவாக்கும் புகையும், வெப்பமும் உலகின் சுற்றுச்சூழலை எவ்வளவு பாதிக்கிறது என்பதைச் சிந்திக்க வேண்டாமா?
அப்படியென்றால், மகிழுந்துகளையே பயன்படுத்தக் கூடாதா? என்றால் பயன்படுத்த வேண்டும் என்பதே நாம் சொல்ல வருவது. பயன்படுத்த வேண்டும். பயனில்லாமல் சுற்றக் கூடாது.
ஒரு சிறிய கணக்கு போடுங்கள். ஒரு சொகுசான பேருந்தில் குறைந்தது 40 பேர் படுத்துக் கொண்டே பயணம் செய்யலாம். ஒரு சாதாரணப் பேருந்தில் 60 முதல் 80 பேர் வரை அமர்ந்தபடி பயணம் செய்யலாம். இந்த 60 பேரும் ஆளுக்கொரு கார் எடுத்துக் கொண்டு போனால் அது அடைக்கும் இடம்? அதனால் ஏற்படும் நெருக்கடி? அது உருவாக்கும் சூழல் சீர்கேடு? இதையெல்லாம் கணக்கிட வேண்டாமா?
எல்லா ஊர்களிலும் நகரப் பேருந்துகள் இருக்கின்றன. சென்னை போன்ற பெரு நகரங்களில் மின்சார ரயில்கள் இருக்கின்றன. இன்று பல ஊர்களிலும், கிராமங்களிலும் கூட சிறிய வகைப் பேருந்துகளும், சீருந்து எனப்படும் வேன்களும், எதுவுமே இல்லாவிட்டால் பங்கு தானி எனப்படும் ஷேர் ஆட்டோக்களும் இருக்கின்றன.
மிகக் குறைந்த பட்சமாக ஒரு பங்கு தானியில் 8 பேர் அமரலாம். அதையே 8 பேர் தனித் தனியாக 8 தானி(ஆட்டோக்கள்) பயன்படுத்தினால் எவ்வளவு நட்டம்?
இதற்குப் பேர் தான் பொ.வா.போ, அதாவது பொது வாகனப் போக்குவரத்து! ரயில்களில் குறைந்தது 1000 பேர் பயணிக்கிறோம். இவர்கள் அவ்வளவு பேரையும் கூடுமானவரை பாதுகாப்பாக, சகல வசதிகளோடு கொண்டு போய் சேர்க்கிறது ரயில். ஆனால் தனி வாகனங்களில் இவ்வளவு பேர் சென்றால் என்னாவது?
அப்படியென்றால், தனி வாகனங்களையே பயன்படுத்தக் கூடாதா?
பயன்படுத்தலாம். பயன்படுத்த வேண்டும். முக்கியமான தருணங்களில், தேவைப்படும்போது, அவசரப் பணிகளுக்கு என்று வரையறுத்துக் கொள்ள வேண்டும். இருக்கிறது என்பதற்காக எல்லோரும் கார் ஓட்டினால், எந்த வாகனத்தால் வேகமாகப் போக முடியும் என்று நாம் கருதி வாங்குகிறோமோ – அந்த வாகனத்தால் ஊர்ந்து தான் போக முடியும்.
சென்னையைப் பொறுத்தவரை, சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் சென்றடைய சாலை வழியாகச் சென்றால் 2 முதல் 2.30 மணி வரை ஆகும். அதுவும் காலை அல்லது இரவு நேரங்களில் கேட்கவே வேண்டியதில்லை. ஆனால் அதே தாம்பரத்தை 45 முதல் 50 நிமிடங்களில் ரயிலில் சென்று சேர்ந்துவிட முடியும்.
இது தானே பலன். பொது வாகனப் போக்குவரத்தைப் பயன்படுத்த நாங்கள் தயார்! ஆனால், அதுல போனா, ஒரே நச நச, கசகசன்னு வியர்வை, எரிச்சல் இதெல்லாம் தேவையா என்று ஒரு கேள்வி எழும்.
அந்தக் கேள்விக்கும் விடை உண்டு. அடுத்த இதழில் பார்ப்போம்.
(காப்போம்)