பால் வேற்றுமை பாதிப்பா?
– சிகரம்
ஆண் பெண் பால் வேறுபாடு இயற்கையாய் அமைந்தது. இயற்கையை மாற்ற முடியாது. ஆனால், இயற்கையை எண்ணித் தளராமல், உறுதியுடன் முயன்றால் சாதனை என்பது உறுதி.
நடைமுறையில் இந்த பால் வேறுபாட்டை பச்சிளங் குழந்தையாய் இருக்கும்போது பதியச் செய்வது தவறு. பெற்றோரும் மற்றோருமே இத்தவற்றைச் செய்கின்றனர்.
பிறந்தவுடனே ஆண் என்றதும் சிறப்புக் கொஞ்சலும், சிறப்பு வசதியும், சிறப்புக் கவனிப்பும் காட்டப்படுகின்றன.
பெண் பிறந்தால் பிதுக்குகிறார்கள் உதட்டை!
பெண் பிறந்த செய்தி கேட்டால் பார்க்கக்கூட வராத தந்தை உண்டு. கள்ளிப்பால் மூலம் கதையை முடிக்கவும் சிலர் தயங்குவதில்லை. அதிலும் கொஞ்சம் இரக்கங்கொண்ட தாய், தந்தையர் குப்பையோடு சேர்த்துக் கொட்டி விடுகின்றனர். ஆக, பெண்ணைக் குப்பையாகக் கருதும் மனநிலை இன்னும் இருக்கவே செய்கிறது. இது அங்கொன்று இங்கொன்றுதானே தவிர, பொதுவாக இப்படியில்லை.
என்றாலும், உணவு கொடுக்கும்போதும், உடை கொடுக்கும்போதும், படுக்க படுக்கை தரும்போதும் ஆணுக்கு உயர்வு, பெண்ணுக்குத் தாழ்வு. இது பெரும்பாலும் நடக்கிறது.
படிப்பு என்றால் பாரபட்சம். சொத்துக் கொடுப்பதில் தயக்கம்; பலர் கொடுப்பதேயில்லை!
ஆடிப்பாடி, ஓடிப்பதுங்கி வெளியிடங்களுக்குச் சென்று விளையாட பெண்ணுக்கு அனுமதியில்லை. வீட்டுக்குள் முடக்கப்படுவதோடு, வீட்டு வேலைகளிலும் முடக்கப்படுகிறாள்.
பருவ வயது வந்து பருவம் அடைந்துவிட்டால், பெண்ணுக்கு எல்லாமே பறிக்கப்படுகிறது. அடுத்த ஆணுடன் பேசக் கூடாது, பழகக் கூடாது. வெளியிடங்களுக்கு செல்லக் கூடாது. பெண்ணின் கல்வி பருவம் அடையும் வரை மட்டுமே என்ற கொடுமையான காலம் தற்போது கடந்துவிட்டது. இப்போது பெண்களின் படிப்பு தொடரப்படுகிறது. சற்றேறக்குறைய ஆண்களைப் போலவே கற்கின்றனர். வெளியிடங்களுக்குச் செல்கின்றனர்.
பெண் கற்றால், வேலைக்குச் சென்றால் அவளின் திருமணச் சுமையும், தடையும் குறைகிறது என்பது இந்த மாற்றத்திற்கான பெருங்காரணம். என்றாலும் கிராமப்புறங்களில் இம்மாற்றம் குறைவே!
பெண்களும் சரி, பெற்றோரும் சரி, மற்றவர்களும் சரி கீழ்க்கண்டவற்றை ஆழமாக உள்ளத்தில் பதிக்க வேண்டும்; செயல்படுத்த வேண்டும்.
1. பால் வேறுபாடு என்பது இயற்கையானது. இதனால் ஆணுக்குப் பெண் -எந்த வகையினும் இளைப்பு அல்ல.
2. பெண் பலம் குறைந்தவள் என்பது மூடநம்பிக்கை. பயிற்சி மேற்கொள்ளும் பெண் ஆணைவிட பலசாலி என்பதே அனுபவ உண்மை.
3. பெற்ற நம் பிள்ளைகளில் ஆண் பெண் என்று பாகுபடுத்தி நடத்துவது மிகப் பெரும் தவறு. நம் பிள்ளை எதுவானாலும் சமமாக நடத்த வேண்டும். பெற்ற பிள்ளைகளிடம் வேறுபாடு காட்டுவது மனிதத் தன்மையில்லை! ஏன், விலங்குகள்கூட வேறுபாடு காட்டுவதில்லை!
4. ஆணைப்போலவே பெண்ணுக்கும் கல்வியளிக்க வேண்டும்; உணவு உடை அளிக்கவேண்டும்.
5. பருவம் அடைதல் என்பது ஓர் இயற்கை நிகழ்வு. அதன்பின் பெண்ணை முடக்குதல் மூடச் செயல். மாதம் மூன்று நாள்கள். அதற்கான பஞ்சுப் பட்டைகள் வந்துவிட்டன. அணிந்து கொண்டு ஆணைப் போலவே சாதிக்கலாம்.
6. பருவத்திற்குப் பின் ஒழுக்கம் தவறினால், ஆண் பாதிக்கப்படுவதில்லை; பெண் கருச்சுமந்து பழியும் சுமக்கிறாள். இதுவே, பெண்ணுக்கு இயற்கையில் அமைந்த மாபெரும் பாதகநிலை. இதைக் கண்டே பெண்ணும் அஞ்சுகிறாள்; பெற்றோரும் அஞ்சுகின்றனர்.
இந்தப் பாதிப்பு இயற்கையாய் பெண்ணுக்கு இருப்பதால், பெண்கள்தான் கூடுதல் எச்சரிக்கையாய் இருந்து, ஆணின் மோசடிக்கு ஆளாகாமல் காத்துக் கொள்ள வேண்டும்.
தப்பான நோக்கத்தில் உறவுக்கார ஆண் பழகினாலும், வெளி ஆண் பழகினாலும் செருப்பைக் கையில் எடுத்துப் பாருங்கள். மிரண்டு ஓடுவார்கள். செருப்பைவிட சிறந்த பாதுகாப்பு பெண்ணுக்கு வேறு இல்லை.
தப்பாக தொடும்போதே வெறுத்துத் தள்ளினால் விலகிச் செல்வர். அனுமதித்தால் அடுத்தடுத்து முயன்று கெடுத்து ஒழிப்பர். இந்த நுட்பம் புரிந்து நடந்தால் பெண்கள் பெரும்பாலும் பாதிக்கப்படமாட்டார்கள்.
பலாத்காரமாய் சிதைக்கப்படுவதற்கு பெண் பொறுப்பாளியல்ல. என்றாலும் அச்சூழலை பெண் முடிந்த அளவு தவிர்க்க வேண்டும். பெற்றோர்கள் இளமை முதலே பெண்களைத் தற்காத்துக் கொள்ள பழக்க வேண்டும்.
விபத்துகளுக்கு அஞ்சி வாகனம் ஓட்டாமல் இருக்க முடியாது, மின்சாரத்தைப் பயன்படுத்தாமல் இருக்க முடியாது. அதேபோல், அயோக்கியர்களின் பாலுறவு வன்முறையும் ஒரு விபத்தே! அதை தவிர்க்கவும், தற்காக்கவும் முயல வேண்டுமேயன்றி, அஞ்சி அடங்கி ஒடுங்கிவிடக்கூடாது.
7. ஆண்களுக்கு இந்த வேலை பெண்களுக்கு இந்த வேலை என்று பிரிக்காமல் பெண்களையும் அவர்கள் விருப்பப்படி எந்த வேலையும் செய்யவும், சாதிக்கவும் பழக்கவும் அனுமதிக்கவும் வேண்டும்.
8. பெண்ணின் விருப்பம் இன்றியும், விருப்பம் அறியாமலும் மணம் முடிக்கக் கூடாது. வாழ விரும்புகின்றவள் விருப்பம் முக்கியம். காரணம், வாழ்க்கை அவருடையது. பிள்ளைகள் வாழ்வை பெற்றோர்கள் வாழ்வதோ, தீர்மானிப்பதோ கூடாது. பெற்றோர் சிறந்த ஆலோசகர்களாய் மட்டுமே இருக்க வேண்டும்; ஆதிக்கவாதிகளாய் இருக்கக் கூடாது.
பெண்ணே! பெண்ணே!
துணிந்துநில்! தடைகளை தகர்!
துணிவை துணை கொள்!
துணிவே துணை
என்பார் தமிழ்வாணன். பெண்களுக்கு அதுவே துணை! கணவன்கூட துணிவுக்கு அடுத்தத் துணைதான்! துணிந்தால் துக்கமில்லை. அஞ்சுதல் அடிமைப்படுத்தும்; துணிவு தூக்கி நிறுத்தும்! இயற்கை இடர்களை ஏற்றித்தள்ளு! துணிவை துணையாக்கு! பிஞ்சுப் பிள்ளைகள் இவற்றை நெஞ்சில் நிறுத்த வேண்டும்! அஞ்சாது அனைத்தையும் சந்திக்க வேண்டும்! ஆயுள் முழுக்கச் சாதிக்க வேண்டும்!