தோல்வியா? துவளாதீர்!
-சிகரம்
ஓர் உண்மையைச்- சொன்னால் உங்களுக்கெல்லாம் வியப்பாக இருக்கும். நாம் தோல்வி என்று நினைப்பது, சொல்வது எல்லாம் முழுக்க முழுக்கத் தப்பு.
ஒரு மாமரத்தில் தொங்கும் மாங்காயை அடிக்க ஒருவன் கல் விடுகிறான். மாங்காய் விழவில்லை. கல் குறி தவறிச் சென்றுவிட்டது. இது தோல்வியா?
அடுத்தமுறை ஒரு கல் விடுகிறான், மாங்காய் விழுந்துவிட்டது. இது வெற்றி என்போம். மாங்காய் அடித்ததில் வெற்றி, தோல்வி என்று இரு முடிவுகள் எப்படி வரமுடியும்? ஆக, நாம் நினைப்பதில் தப்பு உள்ளது என்பது புரிகிறதா? ஆம். உண்மையில் தப்புதான்.
முதல் கல்லில் மாங்காய் விழாதது தோல்வி அல்ல. -நிறைவேறாமை என்பதே உண்மை. முதல் முயற்சியில் இலக்கு நிறைவேறவில்லை.
இரண்டாவது முயற்சியில் இலக்கு நிறைவேறியது என்பதே உண்மை. மாறாக வெற்றி, தோல்வி என்பதெல்லாம் இல்லை. நாம் முதல் முயற்சியில், இரண்டாம் முயற்சியில் அல்லது சில முயற்சிகளில் ஒரு செயல் நிறைவேறவில்லையென்றால் அதைத் தோல்வி என்கிறோம்.
தோல்வி என்றால் வெற்றிபெறவே முடியாது என்பது மட்டுமே-! வெற்றிபெற வாய்ப்புள்ள எதற்கும் தோல்வியில்லை-! விண்வெளிக்கு ராக்கெட் ஏவியதும் வெடித்துச் சிதறியது. அது தோல்வியா? அடுத்தடுத்து ஏவி செவ்வாய்க் கிரகம் வரை சென்றுவிட்டோமா! தோல்வியென்றால் விண்வெளிப் பயணமே முற்றுப் பெற்றுப் போயிருக்கும். அடுத்தடுத்த முயற்சி வந்திருக்காது.
எனவே, முயற்சிக்கு வாய்ப்பு உள்ள எச்செயலுக்கும் தோல்வியில்லை. முடியவே முடியாது என்ற முடிவு மட்டுமே தோல்வி-! முயற்சியின் முனைப்பில் தோல்வி முடிவாவதில்லை; முயற்சிகளின் முடிவிலேதான் தோல்வி உறுதியாகிறது. எனவே, முதல் முயற்சி நிறைவேறாதது தோல்வியென்று எண்ணித் துவளுவது அறியாமையாகும்.
மாணவச் செல்வங்கள் வாழ்வில் பலவற்றைச் சாதிக்க வேண்டியவர்கள். எதிர்காலத்தை வடிவமைத்து, நாளைய உலகை நடத்திச் செல்ல வேண்டியவர்கள். எனவே, இதை நன்றாக மனதிற்கொண்டு, முயன்றால் முடியாதது இல்லை; இயலாது என்பது முட்டாள்களின் முடிவு என்பதைப் புரிந்து செயல்பட வேண்டும்.
அதேபோல் வெற்றியென்பது நிரந்தரமானது அல்ல. ஓட்டப்பந்தயத்தில், கிரிக்கெட் விளையாட்டில், அம்பு எய்வதில் என்று எந்தப் போட்டியை எடுத்துக்கொண்டாலும், ஒரு போட்டியில் வெற்றி பெறுகிறவர்கள் அடுத்த போட்டியில் தோற்கிறார்கள். ஒருமுறை 100 ஓட்டங்கள் பெறும் வீரர், அடுத்தமுறை 2 ஓட்டங்களில் வெளியேறுகிறார். இவர்களெல்லாம் வெற்றிவாய்ப்புக் கிட்டாதபோது (கிடைக்காதபோது) துவண்டால் சாதிக்க முடியுமா-?
தாமஸ் ஆல்வா எடிசன்
மின்சார பல்பைக் கண்டுபிடித்த விஞ்ஞானி முதல் பலரும் பலமுறை முயன்றே வெற்றி பெற்றுள்ளனர். ஆயிரம் வழிகளில் முயன்றே இறுதியில் மின்சார பல்பு ஒளிர வழிகிடைத்தது என்பதை உணர்ந்து பிஞ்சுகள் நெஞ்சு நீதியுடன் நிமிர்ந்து நின்றால், வாழ்வில் ஒளிரலாம், உயரலாம்-!
அதேபோல் மாணவர்கள் இன்னொரு கருத்தையும் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு மாணவன் ஒரு செயலில் சாதிக்க முடியவில்லையென்றால், வேறொன்றில் சாதிக்க முடியாது என்பது இல்லை. படிப்பில் உயர்நிலை எட்ட முடியவில்லையென்றால், வேறொன்றில் சாதிக்கலாம்.
இராபர்ட் கிளைவ்
இராபர்ட் கிளைவ் சிறுவயதில் படிக்கமாட்டார். அளவற்ற குறும்பு செய்வார். அவரது செயல்களைப் பொறுக்கமுடியாத அவரது பெற்றோர், இராணுவத்தில் சேர்த்தனர். அப்படி உருப்படாதவன் என்று துரத்தப்பட்ட இராபர்ட் கிளைவ்தான், ஆங்கிலப் பேரரசு இந்தியாவில் வேரூன்ற — நிலைக்க வழிசெய்தார்.
கலைஞர்
தி.மு.க. தலைவர் கலைஞர் மூன்று முறை பள்ளி இறுதித் தேர்வு எழுதித் தோல்வியுற்றார் (அப்போது மூன்று முறைக்கு மேல் எழுத முடியாது). அவர்தான் இலக்கிய மேதையாக, எத்தனையோ திரைப்படங்களுக்கு எழுத்தாளராய், அரசியல் விற்பன்னராய், தலைசிறந்த நிர்வாகியாய், பேச்சாளராய், கவிஞராய் பன்முகத்திறன் பெற்று, அய்ந்து முறை தமிழக முதல்வராயும் ஆனார்.
முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் சாதிப்பதைவிட, சராசரியாய் மதிப்பெண் பெற்ற மாணவர்கள்தான், எதிர்காலத்தில் உயர்நிலையை எட்டி பல்திறன் பெற்று பளிச்சிடுவதை நடைமுறை நமக்கு உணர்த்துகிறது. எனவே, தோல்வியில் துவளாமல், தொடர்ந்து முயன்று சாதிக்க வேண்டும்! சரித்திரம் படைக்க வேண்டும்-!