காலை உணவைத் தவிர்ககாதீர்!
பாசத்திற்குரிய பேரன், பேத்திகளே!
நலந்தானா? உடலும் உள்ளமும் நலந்தானா? நன்றாகப் படிப்பது, நன்றாக விளையாடுவது, அளவான நேரத்திற்கு நண்பர் – நண்பிகளுடன் இருப்பது – உரையாடுவது, பிறகு நன்றாகத் தூங்கி எழுந்து, அன்றன்றாடக் கடமைகளைச் செய்வீர்கள் என்பது எனக்குத் தெரியும்.
பெரியார் பிஞ்சுகளான, உங்களுக்கா சொல்ல வேண்டும்? எள் என்பதற்குள் எண்ணையாக இருக்கும் சுறுசுறுப்புக்குச் சொந்தக்காரர்களான தேனீக்கள் அல்லவா எம் தங்கங்கள்!
ஒரு முக்கியமான செய்தியை உங்களுக்கு வேண்டுகோளாக சொல்லப் போகிறேன்.
ஏனென்றால் உங்கள மாதிரிப் பிள்ளைகள் அறிவுரை, ஆலோசனை என்றாலே முகம் சுளிக்கிறீர்கள் அல்லவா? அதனால்தான் வேண்டுகோள் என்றேன்.
சரி தாத்தா விஷயத்திற்கு வாங்க; எங்களுக்குப் பொறுமை இல்லே – உடனே சொல்லுங்க….. அப்படின்னுதானே சொல்றீங்க.
ம் சரி இதோ சொல்றேன் – கேளுங்க பிள்ளைகளே!
உங்கள்ல பலரும் பள்ளிக்குப் புறப்படும்முன் காலை உணவை – சிற்றுண்டியை – (Break fast) சரியாகச் சாப்பிடாமல் உரிய நேரத்தில் அதிகாலையிலே எழாமல், தாமதித்து எழுந்து, உங்கள் அம்மாவைப் போட்டு வதைக்கிறீங்க – சாப்பிடாமலேயே – பஸ் வந்ததும் வகுப்புக்கு நேரமாகிவிட்டது என்று நெருக்கிக் கூறி, பட்டினியாகவோ, அல்லது அரை வயிற்றுக்குச் சாப்பிட்டு, மீதியை அப்படியே போட்டுவிட்டு அரக்கப்பறக்க ஓடுகிறீர்கள்!
அது சரியில்லே. சரியேயில்லை…..! ஏன்னா அது உங்க வளர்ச்சியை ரொம்ப ரொம்பப் பாதிக்கும்.
உடல் வளர்ச்சியை மட்டுமல்ல; அறிவு வளர்ச்சி, வகுப்பில் அமர்ந்து பாடங்களைக் கேட்டு உள்வாங்கி மனதில் பதியவைப்பதற்கு – காலை உணவைத் தவிர்த்தல் உதவவே உதவாது – மாறாக, வகுப்பில் சொல்லிக் கொடுப்பதை மூளை ஏற்பதில் சுறுசுறுப்பு காட்ட இயலாது. ஏன் தெரியுமா? நமது உணவு – உங்களுக்குத் தெரியுமா? செரிமானமாகும்போது, அதனைச் சர்க்கரையாக மாற்றித்தானே நமது மூளையை இரத்த ஓட்டத்தின் மூலம் மிகவும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்கிறது.
காலை உணவை – முதல்நாள் இரவோ, மாலையோ சாப்பிட்டு பொழுது விடிந்து எழுந்தவுடன், வயிறு மிகவும் காலியாகி இருக்கும். அதனை நன்கு உண்டு நிரப்புவது அவசியமோ அவசியம்! தெரிகிறதா தம்பிகளே, தங்கைகளே?
ஒழுங்காக காலைச் சிற்றுண்டி உணவை, சரியாகச் சாப்பிட்ட பல பள்ளிக் குழந்தைகள் நல்ல நினைவு வன்மை – Memory – ஏற்படுவதால் பாடங்களை ஆசிரியர்கள் சொல்லிக் கொடுக்கும்போது நல்ல முறையில் உள்வாங்கி, மனதில் நிலைநிறுத்த முடிகிறது.
எனவே, நீங்கள் நல்ல மதிப்பெண் பெறுவதற்கு காலை உணவை ஒழுங்காக நல்ல முறையில் சாப்பிட்டுப் பள்ளிக்கூடத்திற்குச் செல்லுங்கள்; நன்றாகப் படிக்கவும், தேர்வில் ஏராளமான மதிப்பெண் பெறவும், வீட்டில் தாய், தந்தை மகிழும் நிலை உங்களுக்கு ஏற்படும் – செய்வீர்களா செல்லங்களே,,,,,,,!
அன்புள்ள தாத்தா,
கி.வீரமணி