வடதுருவம், தென்துருவம் ஆகியன எப்போதும் பனியால் மூடப்பட்டுள்ளன – ஏன்?
பூமி உருண்டையாக இருப்பதும், பூமி தனது அச்சில் சாய்வாக இருந்தபடி சுற்றுகிறது என்பதும் இதற்குக் காரணம்.
சூரியக் கதிர்கள் சாய்வாக வந்து படும்போது சூடு உறைக்காது. அதுவே செங்குத்தாக வந்து விழும்போது வெயில் வாட்டும். காலையில் சூரியக் கதிர்கள் சாய்வாக வந்து விழுவதாலும், காற்று மண்டலத்தின் வழியே அதிகத் தொலைவு கடக்க வேண்டியிருப்பதாலும் காலையில் வெயிலின் கடுமை தெரியாது. மதிய வேளையில் சூரியக் கதிர்கள் செங்குத்தாக வந்து விழுவதால் வெயில் உறைக்கிறது.
பூமி கோள வடிவில் உள்ளதால் தெற்கு, வடக்குத் துருவங்களில் சூரியக் கதிர்கள் சாய்வாக வந்து விழுகின்றன. இரு துருவப் பகுதிகளிலும் சூரியன் ஒரு போதும் உச்சிக்கு வருவதில்லை.
மேலும் தென்துருவத்திலும், வடதுருவத்திலும் மாறி மாறி 6 மாதம் பகலாகவும், 6 மாதம் இரவாகவும் உள்ளதால் வடதுருவப் பகுதிகளில் கடுங்குளிர் எப்போதும் நிலவுகிறது. இவை எப்போதும் உறைபனி படிந்தே விளங்குகின்றன.
– க.ம.ரா.கந்தன்