பரிசுத் தொகை யாருக்கு?
சிறுவர்களுக்கான சிறுகதைப் போட்டியில் ராமுவுக்கு முதல்பரிசாக ஆயிரம் ரூபாய் என்று குயில் மாத இதழிலிருந்து வந்த கடிதத்தைக் கண்டவுடன், அவன் வீட்டில் எல்லோருக்கும் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் ஏற்பட்டன.
அவன் தங்கை கௌரி, அண்ணா, எனக்கு ஒரு புது ஜாமெட்ரி பாக்ஸ் வாங்கித் தரணும் என்று தன் ஆசையை வெளியிட்டாள்.
ராமு பள்ளிவிட்டதும், வருகிற வழியில் உள்ள நூலகத்திற்குச் சென்று பத்திரிகைகளையும், சிறுவர்களுக்கான நல்ல நூல்களையும் படித்துவிட்டு, வீட்டுக்கு ஒரு மணி நேரம் தாமதமாக வருவதை அம்மாவிடம் கோள்மூட்டி, அவனை அம்மா திட்டும்படிச் செய்தவள் இந்த கௌரிதான். இவளுக்கு இப்போ மட்டும் ஜாமெட்ரிபாக்ஸ் வேணுமாம் என்று ராமு மனதில் நினைத்தான்.
மிக்ஸியிலே சின்ன ஜார் கெட்டுப்போய் ரொம்ப நாளாச்சு. ஒரு சின்ன ஜாரை இந்தப் பரிசு நினைவா வாங்கி வச்சுக்கலாம் என்றார் அம்மா.
இந்த அம்மாதான் கௌரி கோள்மூட்டிய உடனே, லைப்ரரி அது இதுன்னு கண்ட இடத்திலே போய் கண்டகண்ட புத்தகத்தைப் படிச்சு, கெட்டுப் போகாதே. உருப்படுற வழியைப் பாரு என்று திட்டியவர். இவருக்கு இப்போ மிக்ஸி சின்னஜார் வேணுமாம் – ராமுவுக்குக் கோபம் வந்தது.
எழுதிக் கிடைத்த பரிசுங்கிறதாலே ஒரு நல்ல பார்க்கர் பேனா செட் வாங்கலாம். எனக்கும் உபயோகமா இருக்கும் _ இது அப்பா.
இவர்தான் அன்றைக்கு, அங்க இங்க ஊர்சுத்தாம, ஸ்கூல் விட்ட உடனே வீட்டிலே வந்து நல்லாப் படிச்சு மேலே வர்ற வழியைப் பாரு. இல்லைன்னா, தோலை உரிச்சிடுவேன் என்று கூச்சலிட்டவர். இப்போ பார்க்கர் பேனா செட் வேணுமாக்கும் _ ராமு நினைத்துக் கொண்டான்.
தினமும் ஒருமணி நேரம் நூலகத்துக்குப் போய்வந்ததை ஒரு பெரிய குற்றமாகக் கண்டவர்கள், இப்போது தான் பரிசு பெற்றதை அறிந்தவுடன், எப்படி மாறிப் போனார்களென்று அவன் வியப்படைந்தான். பணம் என்றாலே இப்படித்தான் எல்லோரும் மனம் மாறுவார்களா?
தன்னை ஊக்குவிக்காதது மட்டுமல்ல, தன்னைக் குற்றமும் கூறிய இவர்கள் யாருக்கும் அந்தப் பரிசுத் தொகை உரியதல்ல என்பதை அவர்கள் உணரும்படி செய்யவேண்டுமென்று அவன் முடிவு செய்தான்.
பரிசுத்தொகை கைக்குக் கிடைத்தவுடன், அப்படியே அந்த நூலகரிடம் கொடுத்து, அய்யா, உங்கள் நூலகத்தில் குயில் இதழில் கண்ட விளம்பரத்தின் மூலம் நான் எழுதிய கதைக்குப் பரிசாகத்தான் இது எனக்குக் கிடைத்தது. எனவே, இந்தப் பரிசுத்தொகை இந்த நூலகத்துக்குத்தான் உரியது. மேலும் பல நல்ல நூல்களை இதன்மூலம் வாங்கி, இன்னும் பலபேர் பயனடைய இதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு, மன அமைதியுடனும் பெருமிதத்துடனும் வீடு திரும்பினான்.
– கே.பி. பத்மநாபன், கோவை