சுவைமிகு செய்திகள்
காலத்தின் மதிப்பு
ரயில் பெட்டியை உருவாக்கி உலகப் புகழ்பெற்றவர் புரூனல். அவரது அலுவலக அறையில் ஒரே ஒரு நாற்காலி மட்டும்தான் இருக்கும். புரூனலைப் பார்க்க வருபவர்கள் நின்று கொண்டுதான் பேச வேண்டும்.
முக்கியமானவர்கள் வந்தால், தமது நாற்காலியைக் கொடுத்து அமரச் சொல்லிவிட்டு நின்று கொண்டே பேசுவார் புரூனல். தேவையில்லாமல் அரட்டையடித்து நேரத்தை வீணடிப்பவர்களைத் தவிர்க்கவே ஒரே ஒரு நாற்காலி மட்டும் போட்டிருந்தாராம் புரூனல்.
வேறுபாடு
தொலைபேசி, செல்பேசியில் அழைப்பு வந்ததும் நாம் எடுத்துப் பேசும் முதல் வார்த்தை ஹலோ என்பதாகும். மக்களிடமிருந்து பிரிக்க முடியாத சாதனமாகத் திகழும் இந்தத் தொலைத்தொடர்பு சாதனத்தை எடுத்ததும் அமெரிக்கர்களும் ஹலோ என்றுதான் சொல்கிறார்கள்.
ஜெர்மானியர்கள், தன் பெயரின் ஒரு பகுதியைச் சொல்லிவிட்டுப் பேசுவர். ரஷ்யர்கள், -நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்பர். பிரெஞ்சு மக்கள் -ஹலோ பேசுவது யார் என ஆரம்பிப்பர்.
இத்தாலியர் -நான் தயார் என்றும், பிரிட்டிஷ்காரர்கள் தங்களது தொலைபேசி எண்ணைச் சொல்லியும், சீனர்கள் -யார் நீங்கள் என்ற கேள்விக்கணையுடனும் பேசத் தொடங்குவர்.