ஆஸ்திரேலியாவின் அழகு நகரம் சிட்னி
– முனைவர் பேரா.ந.க. மங்களமுருகேசன்
பசிபிக் மாக்கடலின் கரையில் அமைந்துள்ள மிகப்பெரிய நகரம் சிட்னி. ஆஸ்திரேலியாவின் தலைநகரம் கான்பெரா, சிட்னி இல்லை. எனினும் ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்சின் தலைநகர் இது.
அகதிகள் நகரம்
1788இல், 11 கப்பல்களில் அகதிகளாக வந்து இறங்கிய ஆயிரம் பேர்களுடன் (ஆங்கிலேயர்களால்) அமைக்கப்பட்ட நகரம் இது. இன்று உலகம் வியக்கும் மாபெரும் நகரம். ஆங்கிலேயச் செயலாளர் சிட்னி பிரபு என்பவரின் பெயரை இந்நகருக்கு இட்டனர். சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பே பழங்குடியினர் இங்கு வாழ்ந்துள்ளனர்.
பன்னாட்டு நகர்
ஆஸ்திரேலியாவின் பொருளாதார, வர்த்தக, தொழில், தகவல் தொடர்பு, மருத்துவ மய்யமாக சிட்னி இன்று விளங்குகிறது. அயல்நாட்டு மக்கள் பலர் சிட்னியைத் தங்கள் இல்லமாக்கியதால் பல பண்பாடு, மொழி, இனம் ஆகியவற்றுடன் பன்னாட்டு நகராக விளங்கும் இதன் மக்கள்தொகை 42 லட்சம்.
காலநிலை
சிட்னியில் மிதமான கோடையும், மிதமான குளிர்காலமும் இருப்பதால் எப்போதும் சென்று காணலாம்.
உலக அதிசயங்களில் ஒன்று
டார்லிங் துறைமுகம்
ஒபரா அவுஸ்
தாமரை இதழ்களைப் போன்ற அமைப்புடைய கூரையுடன் சிட்னி துறைமுகம் அருகே 1973இல் கட்டப்பட்ட உலகத்தரம் வாய்ந்த அரங்கு உலக அதிசயங்களில் ஒன்றான சிட்னி ஒபரா அவுஸ் ஆகும். இது சிட்னி நகருக்கும், ஆஸ்திரேலியாவிற்கும் அடையாளமாய் விளங்குகிறது. கட்டடம் கட்டத் தேவைப்பட்ட நிதியைக் குலுக்கல் முறையில் பொதுமக்களிடமிருந்து பெற்றனர். ஆண்டுக்கு இருபது இலட்சம் பார்வையாளர்கள் வந்து செல்லும் சுற்றுலாத் தலம் இது.
இரும்புப் பாலம்
சிட்னியில் இரும்பினால் கட்டப்பட்ட துறைமுகப் பாலம் உலகப் புகழ் பெற்று விளங்குகிறது. 1924இல் 1400 தொழிலாளர்களின் உழைப்பில் தொடங்கி 1932இல் முடிவடைந்தது. 503 மீட்டர் நீளமுள்ள பாலம் இது. பாலத்தின் வளைவின் உச்சியை அடைய இரண்டு மணி நேரம் ஆகும். பாலத்தின் மேல் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்கின்றனர்.
சிட்னி கோபுரம்
சென்டர் பாயிண்ட் கோபுரம்
சிட்னி சென்டர் பாயிண்ட் கோபுரம் 1981இல் ஆயிரம் அடி உயரத்தில் தகவல் தொடர்புக்கு எனக் கட்டப்பட்டது. சிட்னியின் மிக உயரமான கட்டடம் இது. ஆண்டுதோறும் பத்து லட்சம் பயணியர் வந்து செல்கின்றனர். கோபுரத்தின் எட்டாவது மாடியில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடித் தளத்திலிருந்து சிட்னி நகரின் அழகைக் கண்டு மகிழலாம்.
ராக்ஸ்
வரலாற்று முதன்மை வாய்ந்த குடியிருப்புப் பகுதியாகிய இதனைத்தான் ஆஸ்திரேலியா வந்த ஆங்கிலேயர் முதன்முதலில் அமைத்தனர். இந்தப் பகுதியில் பழமை வாய்ந்த கட்டடங்கள் பல இருந்தன. காலப்போக்கில் இடிந்து போன அவற்றைப் பழைய வடிவில் புதுப்பித்தனர். இன்று அருங்காட்சியகங்கள், ஓவியக் காட்சியகங்கள், வணிக நிறுவனங்களுடன் சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. எனவே இது பழமையும், புதுமையும் சேர்ந்து அய்ரோப்பிய நகர் ஒன்றுபோல் தோன்றுகிறது.
டார்லிங் துறைமுகம்
டார்லிங் துறைமுகம்
இப்பகுதியில் ஆஸ்திரேலியாவின் புகழ்மிக்க மீன் காட்சியகம், கடல், கடல்சார்ந்த பொருட்கள் ஆகியவற்றிற்கான அருங்காட்சியகம், அறிவியல் தொழில்நுட்பம் ஆகியவற்றிற்கான பவர் அவுஸ் அருங்காட்சியகம் ஆகியவையும் அமைந்துள்ளன.
ஹைடே பூங்கா
ஹைடே பூங்கா
ஆர்ச்சிபால்ட் நீரூற்று
லண்டனின் ஹைடே பூங்காவை நினைவுப்படுத்தும் வகையில் அமைக்கப் பெற்றுள்ள சிட்னி ஹைடே பூங்கா காண வேண்டியவை பட்டியலில் இடம் பெற்றுள்ளது. பூங்காவின் மய்யத்தில் கிரேக்கச் சிலைகள் வடிக்கப் பெற்ற ஆர்ச்சிபால்ட் நீரூற்று மக்களைப் பெரிதும் கவருவதாக உள்ளது. இங்கு உலக முதல் பெரும் போரில் உயிர் துறந்த வீரர்களுக்கென அன்சாக் போர் நினைவகம் ஒன்றும் உள்ளது.
விக்டோரியா அரசி மாளிகை
விக்டோரியா அரசி மாளிகை
ரோம் நாட்டுக் கட்டடக் கலைப் பாணியில் கட்டப் பெற்றுள்ள கண்ணைக் கவரும் மிகப்பெரிய வணிக வளாகம். இதில் வண்ணக் கண்ணாடி ஜன்னல்கள், அழகுச் சிலைகள் ஆகியன கலை எழில் காட்டுகின்றன. தரைக்கற்கள் அழகுமிக்க கலைநயம் கொண்டவை. இதன் கூரை உட்புறம் உள்ளே இருபது மீட்டர் வட்டக் கண்ணாடிக் கூண்டினாலும், வெளியே தாமிரக் கூண்டாலும் மூடப்பெற்றுள்ளது. மக்கள் பெருமளவில் வருகை செய்யும் வணிக வளாகம் இது.
அரசு தாவரவியல் பூங்கா
முப்பது எக்டேர் பரப்பில் சிட்னியின் மய்யப்பகுதியில் இப்பூங்கா உள்ளது. பசிபிக் கடலின் அருகே உள்ள இந்தப் பசுமையான கடல் போல் விரிந்த பூங்காவில் லட்சக்கணக்கான செடி, கொடி, மரங்கள் உலகின் பல பகுதியிலிருந்தும் கொண்டு வரப்பட்டு வளர்த்திருக்கிறார்கள். 1816இல் உருவான இது விரிவுபடுத்தப் பெற்றே வந்துள்ளது.
சிட்னி பல்கலைக்கழகம்
சிட்னி பல்கலைக்கழகம்
1850லிருந்து இயங்கும் சிட்னி பல்கலைக்கழகம் உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். பன்னாட்டு மாணவர்களும் இங்கு வந்து கல்விக்கண் பெறும் பெருமைமிக்கக் கல்வி நிறுவனங்களும் உள்ளன.
குற்றவாளிகளுக்கு என உருவான சிறிய குடியிருப்பு இந்த சிட்னி, இருநூறு ஆண்டுகளில் இத்தகைய மாபெரும் வளர்ச்சியை எட்டிப் பிடித்துள்ளது. இந்த நூற்றாண்டின் மாபெரும் நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது.