பிஞ்சு மடல்
அன்புள்ள தாத்தாவுக்கு வணக்கம். பெரியார் பிஞ்சு பிப்ரவரி இதழில் உங்கள் கடிதம் படித்தேன். பெற்றோர் கடமை, குழந்தை எல்லை எதுவரை என்பதை உணர்ந்தேன். தாத்தா அதுபோல் நானும் நடந்து கொள்வேன். மேலும், என் போன்ற குழந்தைகளுக்கு அறிவுரை கூறுங்கள் தாத்தா.
தங்கள் அன்புப் பேத்தி பெ.இனமுரசு, ஏழாம் வகுப்பு
அரசு உயர்நிலைப் பள்ளி, தெற்கு நத்தம்.
மானமிகு தாத்தாவிற்கு, வணக்கம். நாகர்கோவில் தந்தை பெரியார் தாத்தாவின் சிலை திறப்பு விழாவில் எனது தாத்தா திரு.இ. கேசவ வீரபாண்டியன் அவர்களோடு நீங்களும், பெரியவர் கான்சிராம் அவர்களும் மேடையில் அமர்ந்திருக்கும் காட்சியை வீடியோவில் பார்த்தேன். வீரத்தோடு மணி ஓசை போன்ற தங்கள் பேச்சையும் கேட்டேன். தாடி இல்லா தந்தை பெரியார் தாத்தாவாக தங்களை எண்ணி மகிழ்கிறேன். பெரியார் பிஞ்சில் நீங்கள் எழுதும் அன்பு மடல் என் போன்ற பேரன், பேத்திகளுக்குப் பகுத்தறிவையும், பண்பாட்டையும் ஊட்டி, ஈரோட்டுப் பாதையில் அயராது நடக்க எங்கள் பிஞ்சுக் கால்களுக்குப் பயிற்சி அளிக்கிறது. தங்கள் கருத்தால், எழுத்தால் இந்தப் பிஞ்சுகள் காயாகி, கனியாகும் என்பதில் அய்யமில்லை.
பகுத்தறிவுப் பேத்தி
ஏ.பி.ஓவியா, திருவள்ளூர்
அன்பு வணக்கம். நான் எட்டாம் வகுப்பு படித்து வருகிறேன். எங்கள் பள்ளியிலிருந்து 5 பேர் விநாடிவினாவில் கலந்து கொண்டோம். எனக்கு மட்டும் பெரியார் பிஞ்சு இதழ் கிடைத்ததில் பெருமிதம் கொள்கிறேன். தமிழ்நாட்டில் வருகிற சிறுவர் இதழ்கள் எல்லாம் மூடநம்பிக்கையைப் பரப்பும்போது இந்த இதழ் அறிவு சார்ந்து இருப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். இதழில் வெளிவந்த ஓவியங்கள், துணுக்குகள் கடல் கவிதை அனைத்தும் அருமை. மிக்க நன்றி அய்யா!
பே.அருளரசி, எட்டாம் வகுப்பு,
அரசு மேல்நிலைப் பள்ளி, குளிக்கரை