உலகப் புகழ் பெற்றவர்கள் ஜோகன்னஸ் குட்டன்பர்க் [Johannes Gutenberg] 1394 – 1468
– சாரதாமணி ஆசான்
அய்ரோப்பாவில் எழுத்தறிவின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்களில் முதன்மையாகத் திகழ்ந்தவர்தான் ஜோகன்னஸ் குட்டன்பர்க். பல அரிய கருத்துக் கருவூலங்கள், கையெழுத்துப் பிரதிகள் வாயிலாக மக்களிடம் பரப்பப்பட்ட காலத்தில் இவர் முதன்முதலில் அச்சு இயந்திரம் கண்டுபிடித்து ஓர் எழுச்சியை உருவாக்கினார். இவரது கண்டுபிடிப்பால் பல அச்சகங்கள் உருவாயின.
அதன் வாயிலாக பல அரிய நூல்கள் மிக விரைவில் வெளிவந்து மக்களிடையே அறிவுச் செல்வம் பரவ துணை நின்றது. எட்டாக்கனியாக இருந்த அறிவுலகப் படைப்புகள் அனைவருக்கும் எளிதாகவும், விரைவாகவும் கிடைக்க இவரது கண்டுபிடிப்பு அடித்தளம் அமைத்தது. பிற்காலத்தில் இதுவே பெரும் அறிவு மறுமலர்ச்சிக்கு வித்திட்டது.
குட்டன்பர்க் இளமைக்காலம்
1394 ஆம் ஆண்டு ஜெர்மன் நாட்டின் ரைன் நதிக்கரையில் அமைந்திருந்த மெய்ன்ஸ் (Mainz) என்னும் ஊரில் இவர் பிறந்தார். இவரது தந்தை ஃபெரில் ஜென்ஸ்பிலிஸ் (Friele Gensfleisch) ஒரு பொற்கொல்லர். இவரது தாயார் எல்சி வில்ரிச் (Else Wilrich) வணிகர் குலப் பெண்மணி. இவர்கள் குடும்பம் செல்வச் செழிப்புடன் – சிறந்து விளங்கியதால் இளம் வயதிலேயே இவர் இலத்தீன் இலக்கணம் பயிலும் வாய்ப்பைப் பெற்றார். இந்த வாய்ப்பு இவரது அறிவு வளர்ச்சிக்கும் இலத்தீன் மொழித்திறனைச் செவ்வனே உணர்ந்து கொள்வதற்கும் பெரிதும் துணை நின்றது.
சோதனைக்காலம்
இவர் வாழ்ந்த மெய்ன்ஸ் (Mainz) நகரில் உள்நாட்டுக் கலவரம் மூண்டது;- அதனால் சில குடும்பங்கள் வெளிமாநிலங்களுக்குப் புலம்பெயர்ந்து வாழும் சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில் சிறந்த தொழில் நகரமாகவும் — வாணிப மய்யமாகவும் விளங்கிய ஸ்ட்ராஸ்பர்க் (Strasburg) நகரில் சென்று இவரது குடும்பம் குடியேறியது. இந்நகரில் இவர், வைரங்களுக்குப் பட்டை தீட்டும் தொழில்நுட்பத்தில் பல புதிய முறைகளைக் கையாண்டு தன் வாழ்வை வெற்றிப் பாதையை நோக்கி வழிநடத்தினார்.
அத்துடன் புதியவகையில் தேவவாக்குகளை (Holy Mirror) அச்சுவில்லைகளாக வடிவமைத்து தேவாலயங்களுக்கு வரும் பக்தர்களுக்கு விற்பனை செய்யலானார். விற்பனை சூடுபிடிக்க ஆரம்பிக்கும் கட்டத்தில் அந்நகரில் பிளேக் என்ற கொள்ளை நோய் பரவியது – அங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்தது; மீண்டும் இவரது வளமான வாழ்வில் இருள் சூழ்ந்தது – குடும்பம் இதனால் வறுமையில் வாடியது.
புதிய கண்டுபிடிப்பு
குட்டன்பர்க் அச்சு இயந்திரத்தின் மாதிரி வடிவம்
இவரது தாயார் 1433 ஆம் ஆண்டு மறைந்தார்; அவரது சேமிப்பில் இருந்த கணிசமான தொகை இவருக்கு வந்து சேர்ந்தது. அச்சுத்தொழிலில் புதுமையைப் புகுத்த அத்தொகையை அவர் செலவிட்டார். Holy Mirror என்ற தேவ வாக்குகளை ஒரே சட்டமாக – அச்சாக இவர் வெளியிட்டு வந்த நிலையை மாற்றி அச்சு எழுத்துகளைத் தனித்தனியாக மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் வகையில் வடிவமைத்தார்.
இந்தத் திட்டம், அதாவது அவரது இந்தக் கண்டுபிடிப்புதான் உலகில் இன்று பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் வெளிவருவதற்கும் – அதன் வாயிலாக மனித சமுதாயம் மகத்தான அறிவுத் தேடலைப் பெறுவதற்கும் வழிவகுத்தது. அறிவின் பாதையில் செல்லும் உலகுதான் வலிமையும் – இனிமையும் – பெருமையும் பெற்ற உலகமாகத் திகழ முடியும் என்பதை உணர்ந்த குட்டன்பர்க் அச்சுக் கோர்ப்பதில் புதிய உத்திகளைச் செயல்படுத்த தன்னுடன் ஜோகன் பஸ்ட் (Johann Fust) என்பவரைப் பண முதலீடு செய்யும் பங்குதாரராக இணைத்துக் கொண்டார்.
இந்தப் புதிய முறையைப் பயன்படுத்தி முதன்முதலில் இலத்தீன் மொழியின் அடிப்படை இலக்கணக் குறிப்பு நூல் ஒன்றை அச்சாக்கினார். கையெழுத்துப் பிரதிகளையே படித்து வந்த மக்களிடையே இவரது நூலுக்கு மாபெரும் வரவேற்புக் கிடைத்தது. இதைத் தொடர்ந்து தேவாலயத்தில் இருந்த போப் அரசர் கிறித்துவர்களின் வேதமாகிய பைபிள் (Bible) அச்சடிக்கும் வாய்ப்பை முதன்முதலில் இவருக்கு அளித்தார். பக்கத்திற்கு 42 வரிகள் என்ற அடிப்படையில் நூல் அச்சாக்கப்பட்டது. 200 படிகள் மட்டும் அச்சிடப்பட்ட இந்நூல் இருவண்ணங்களில் – வண்ண வேலைப்பாட்டுடன் உருவாக்கப்பட்டு மக்கள் மன்றங்களில் சரியாகப் பதிவு செய்யப்பட்டது.
இன்று உலகில் மிக அதிகமாக வெளியிடப்படுவதும் – மிக அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பல மில்லியன் பிரதிகளை அச்சிட்டு உலக நாடுகள் அனைத்திலும் பரப்பப்படுவதுமான இந்த விவிலிய(Bible) நூலை அன்று வெளியிட்ட சாதனையாளர் குட்டன்பர்க் ஆவார். இவர் முதன்முதலில் வெளியிட்ட விவிலிய(Bible) நூல் இன்றும் இலண்டன் மாநகர அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. மக்கள் இவ்விதமாகத் தம் மரியாதையை இம்மாமேதைக்குச் செலுத்திய வண்ணம் உள்ளனர்.
அச்சக உரிமை இழப்பு
இவரது முயற்சிக்குப் பெருமளவில் ஆதரவும் – இவரது தொழிலுக்கு அதிக அளவில் வெற்றி வாய்ப்பும் வந்து கொண்டிருந்த நேரத்தில் இவரது பங்குதாரர் பஸ்ட் (Fust) தான் முதலீடாகச் செய்த தொகையைத் திரும்பச் செலுத்துமாறு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்-. இதில் பணபலம் பெற்ற ஜோகன் பஸ்ட் (Johann Fust) சார்பாகத் தீர்ப்புக் கூறப்பட்டது. இதனால் குட்டன்பர்க், தமது தொடர் உழைப்பாலும், தொழில்நுட்பத்தாலும், நுண்மாண்நுழைபுலத்தாலும் ஆய்ந்து ஆய்ந்து கண்டுபிடித்த அச்சு இயந்திரத்தையும், அச்சு எழுத்துகளையும், அச்சகத்தையும் விட்டுவிட்டு வெளியேறும் கட்டாயம் ஏற்பட்டது. இவை அனைத்தும் ஜோகன் பஸ்ட் என்ற பங்குதாரரின் உரிமையாயிற்று.
இறுதிக் காலம்
தொடர்ந்து பல இழப்புகளைச் சந்தித்த இவர் தன் பிறப்பிடமான மெய்ன்ஸ் நகரம் திரும்பினார். அங்கு இவர் தம் இறுதிக்காலம் வரை அச்சக ஆலோசகராகவும், அச்சகத் தொழில் முனைவோரின் வழிகாட்டியாகவும் – பல அச்சுக்கூடங்கள் தோன்றுவதற்கு உந்துசக்தியாகவும் விளங்கினார். இத்தனை தகுதிகள் இருந்தும் இவர் தம் வாழ்நாள் இறுதிவரை வறுமையின் பிடியில் சிக்குண்டார். தன்னலம் மிக்க சிலரால் இவரது தன்னலமற்ற சேவைகள் மறைக்கப்பட்ட போதும் 1468ஆம் ஆண்டு இவர் மறைவுக்குப் பின்னர் இவர் புகழ் உலகெங்கும் பரவியது.
இன்று உலகிலேயே மிகப் பெரிய மின் நூலகமாகத் திகழ்வது குட்டன்பர்க் திட்டம் ஆகும். (www.gutenberg.org) இம்மின் நூலகத்தில் இன்று அய்ம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மின்நூல்கள் (e-text) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்.
என்ற குறளுக்கு எடுத்துக்காட்டாய் விளங்கியவர்தான் ஜோகன்னஸ் குட்டன்பர்க் என்ற தொழில் வல்லுநர்.