பூமிக்குள் ஒரு பயணம்
நீங்கள் பேலம் குகைகளுக்குப் போயிருக்கிறீர்களா? (Belum caves) அது, நமது அண்டை மாநிலமான ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்தியக் குகைகளிலேயே இது இரண்டாவது நீண்ட பெரிய குகையாகும்.
இந்தக் குகைக்குப் போனால், நீங்களாகத் தனித்துத் திரிய ஆரம்பித்து விடாதீர்கள். ஏனென்றால், நீங்கள் காணாமல் போகக் கூடும். தொண்டை கிழிய நீங்கள் கத்தினாலும், உங்கள் உதவிக்கு வர யாரும் அருகே இருக்கமாட்டார்கள்.
இந்தக் குகைகள், விவசாய நிலங்களுக்குக் கீழே உள்ளன. 3.5 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்தக் குகையில், வெறும் 2 கிலோ மீட்டர் தூரம்தான் பொதுமக்களுக்குத் திறந்துவிடப்பட்டுள்ளது.
வழிகாட்டியின் உதவியோடுதான் உங்கள் பயணத்தைத் தொடரமுடியும். உண்மையிலேயே அது உங்கள் மூச்சை நிறுத்தக்கூடிய இடம்தான்; உள்ளே அவ்வளவு இறுக்கமாக இருக்கிறது. நல்வாய்ப்பாக, ஆந்திரப்பிரதேச சுற்றுலாக் கழகம், காற்று போய்வர, ஆங்காங்கே சில அமைப்புகளை நிறுவியுள்ளது. அதனால் அது ஓரளவுக்குச் சிரமமில்லாமல் இருக்கிறது.
குகைக்குள் நுழைவதற்கு ஒரு சிறு ஓட்டை வழியாக நீங்கள் இறங்க வேண்டும். அந்தக் குகை, ஒன்றுக்கொன்று தொடர்புடைய அறைகளாக இருப்பதைக் காணலாம்.
நிலத்துக்கடியில் உள்ள ஆறு, மெதுவான சுண்ணாம்புக் கற்களை ஊடுருவி அறுத்துக் கொண்டு போனதால், இந்தக் குகை உண்டாகியிருக்கிறது. குகையின் சில இடங்களில் பாறையிலிருந்து நீர்வடிவதைப் பார்க்கலாம். இந்தக் குகையில் நீங்கள் அதிகம் நடக்க வேண்டியிருக்கும். சில இடங்களில் தவழ்ந்தும் போக நேரலாம். ஆகவே, விரைவில் களைப்படைந்து விடுவீர்கள். அதற்குத்தக்க ஆடைகளும், காலணிகளும் நீங்கள் கொண்டு செல்ல வேண்டும்.
பேலம் குகைகள்
இந்தக் குகைக்கு, தரை மட்டத்திலிருந்து மூன்று இடங்களிலிருந்து பாதைகள் உள்ளன. ஆனால், அவற்றில் இரண்டை மூடிவிட்டார்கள். பல இடங்களில் நீங்கள் தவழ்ந்து, நகர்ந்து செல்ல வேண்டியிருக்கிறது.
குகையின் ஆழமான பகுதி, தரைமட்டத்திலிருந்து 150 அடிக்குக் கீழே இருக்கிறது. அதை பாதாள கங்கா என்று அழைக்கின்றனர். அங்கே, ஒரு வற்றாத நீரூற்று காணப்படுகிறது. மற்றொரு அறைக்கு கோடி வீங்காயலு என்று பெயரிட்டுள்ளனர். அங்கு, கொம்பு போன்ற வடிவத்தில் சுண்ணாம்புக்கல் அமைப்பு இருக்கிறது. வேறொரு அறையை சப்தஸ்வரலகுகர் என்று அழைக்கின்றனர். அதாவது, ஏழு சுவரங்கள் (ராக இயல்புகள்) கொண்ட குகை.
அங்கு அமைந்துள்ள சுண்ணாம்புப் படிவங்களிலிருந்து உலோக ஒலிகள் கேட்கின்றன.
திரும்பி வரும்போது, ஊர்ந்து செல்லும் ஒரு வழியில் சென்றால் இருட்டான ஒரு பகுதி வருகிறது. அது மிகவும் அச்சமூட்டக்கூடியதாகவும், வியப்பூட்டக்கூடியதாகவும் உள்ளது.
வீர சாகசம் செய்த ஓர் உணர்வை, அந்த இடத்திற்குச் சென்று வருவதன் மூலம் நாம் பெற முடியும். அந்தக் குகையில், மக்கள் சென்றறியாத சில இடங்களும், குகை வெடிப்புகளும் உள்ளன. இந்தக் குகைகளுக்கு முடிவே இல்லாதது போலத் தொடராக உள்ளன.
1,000 ஆண்டுகளுக்கு முன்னதாகவே உள்ளூர்வாசிகளுக்கு இந்தக் குகை பற்றித் தெரியும் என்று வழிகாட்டி சொன்னார். இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 4,500 ஆண்டுகளுக்கு முன்பாகவே, மனிதர்கள் அங்கு வாழ்ந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது.
1884இல் தான் முதன்முதலாக, ஆங்கிலேய நிலவியல் வல்லுனரும், தொல்பொருள்இயல் வல்லுனருமான ராபர்ட் புரூஸ் என்பவர்தான் இந்தக் குகைகளைப் பற்றி முதன்முதலில் பதிவு செய்துள்ளார்.
ஆனால், சில சுற்றுப்பயண ஆர்வலர்கள், பூமிக்கடியில் உள்ள இந்தப் பல நூற்றாண்டுகளுக்கு மேலான அமைப்பினை நினைவிருத்திக் கொள்வதற்காக சுண்ணாம்புப் படிமங்களைச் சுரண்டிச் செல்வதுதான் வருத்தமளிக்கிறது என்கிறார் ஓர் இயற்கை ஆர்வலர்.
(நன்றி: தி ஹிந்து – 1.3.2013)