சூழல் காப்போம்-12
– பிஞ்சண்ணா
பொது வாகனங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றதும் நமக்கு முதலில் தோன்றுவது இதுதான்!
அட… ஏன்ப்பா.. கசகச… நசநச-ன்னு இருக்கும். ஜெராக்ஸ்-க்குப் போற வெள்ளைப் பேப்பர் மாதிரி போனா, கசக்கிப் போடுற குப்பைப் பேப்பர் மாதிரிதான் வெளியே வருவோம் உண்மைதான். அப்படித்தான் பல சமயங்களில் ஆகிவிடுகிறது. இந்தியா போன்ற மக்கள்தொகை மிகுந்த நாட்டில், வெப்பம் மிகுந்த நாட்டில், வெக்கையும், வியர்வையும் தவிர்க்க முடியாதவை.
எளிய மக்கள் பயணம் செய்யும் வகையில் பேருந்துகள் குறைந்த கட்டணத்தில் இயக்கப்பட வேண்டும் என்பதால், வசதி குறைந்த பேருந்துகளே நிறைந்து இருந்தன. ஆனால், முன்பைவிட இன்று அதிகரித்துள்ள தனிநபர் வருமானமும், ஒயிட் காலர் ஜாப் என்று சொல்லப்படும் அலுவலகப் பணிகளும் கசங்கிப் போய் அலுவலகத்துக்குப் போவதை அவமானமாக நினைக்க வைக்கிறது.
அதையும் நாம் குறை சொல்ல முடியாது. நம்முடைய வாய்ப்புக்கேற்ப வசதிகளும் பெருக வேண்டியது தான். அதையும் நாம் நுகரத்தான் வேண்டும். உலகின் வல்லமை பொருந்திய மிகப்பெரிய நாடுகள்கூட இப்போது சுற்றுச் சூழலைக் கணக்கில் கொண்டுதான் போக்குவரத்து வசதிகளை அமைத்து வருகின்றன. முன்னேறிய மேற்கத்திய நாடுகள் பலவற்றிலும் இன்னும் பொது வாகனப் போக்குவரத்துக்கு முக்கியத்துவம் இருக்கிறது. அங்கெல்லாம் எல்லா வசதிகளுடனும் கூடிய வகையில் போக்குவரத்து வசதிகள் அமைக்கப்படுகின்றன.
பொது வாகனப் போக்குவரத்தை அதிக அளவில் மக்கள் பயன்படுத்தச் செய்வது அரசின் கைகளில்தான் இருக்கிறது. விலை குறைந்த _ வசதி குறைந்த பேருந்துகள் இயக்கப்படும் அதே நேரம், கட்டணம் அதிகம் என்றாலும் அதிக வசதிகளுடன் கூடிய போக்குவரத்து வசதிகளை மக்கள் விரும்பவே செய்வார்கள்.
எடுத்துக்காட்டாக, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் உள்ள குளிர்பதன வசதியுடன் கூடிய பேருந்துகளை எடுத்துக் கொள்வோம். கட்டணம் அதிகம் என்றாலும் பலரும் விரும்பியே பயணிக்கிறார்கள். தானி (ஆட்டோ) அல்லது மகிழுந்து (கால் டாக்சி) எடுத்துச் செல்வதைவிட குறைந்த செலவில் வசதியுடன் இதில் செல்லவும் முடிகிறது.
இது ஒரு புறம்! இன்னொரு புறம் நடப்பது மிதிவண்டிப் புரட்சி! ஆம், உடலுக்குப் பயிற்சியும், வளமும் சேர்க்கும்; தொப்பை வளர்க்காது; சுற்றுச்சூழலுக்கு முற்றிலும் உகந்தது; பெரிய விபத்துகளுக்கு வழிவகுக்காதது -_- சைக்கிள் எனப்படும் மிதிவண்டிதானே!
இன்னும்கூட பல கிழக்கு நாடுகளில் மிதிவண்டி முக்கிய வாகனமாக இருக்கிறது. அவர்கள் அரசு _- பொருளாதார நலன்களுக்காக இரு சக்கர இயந்திர வாகனங்களை (பைக், மொப்பெட்) விளம்பரப்படுத்தவில்லை. ஆனால், சீனா போன்ற நாடுகளில் இப்போது சைக்கிளுக்கு விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார்கள். பெட்ரோல் செலவு கிடையாது; அது ஏறுமா, இறங்குமா என்ற கவலை கிடையாது. உழைப்புக்கேற்ற பலன் -_ அதுதான் சைக்கிளின் சிறப்பு!
அதிகம் தூரமில்லாத, மிக அவசரமில்லாத அத்தனை விசயங்களுக்கும் மிதிவண்டியைப் பயன்படுத்தலாம். சுற்றுச் சூழலையும் பாதுகாக்கலாம். நான் ஒருவன் அப்படி மிதிவண்டியைப் பயன்படுத்துவதால் மட்டும் ஏதாவது பலன் வந்துவிடுமா? என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். ஒரு நாளைக்கு நீங்கள் 3 மணிநேரம் பெட்ரோல் அல்லது டீசல் வாகனத்தைப் பயன்படுத்துகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.
அதில் ஒரு மணி நேரத்தை மிதிவண்டிக்கு மாற்றினால், ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் வெளியாகக்கூடிய, சூழல் கெடுக்கும் பசுமைக் குடில் வாயுக்களை (Green house Gas Emission) நீங்கள் தடுக்கிறீர்கள். இதன் மூலமாக ஓராண்டுக்கு 365 மணிநேரத்திற்கு இவ்வாயுக்கள் தடுக்கப்படுகின்றன. இந்த அளவு ஒரு சிறுதொழில் நிறுவனம் வெளியிடும் பசுமைக் குடில் வாயு அளவில் 10% ஆகும்.
இப்போது சொல்லுங்கள். இந்த சிறிய முயற்சியால் பலன் உண்டா? இல்லையா? நமக்கும் அதனால் பலன் உண்டே! உடல் உறுதிப்படுகிறது. மருத்துவச் செலவு குறைகிறது. எரிபொருள் செலவு குறைகிறது. வளரும் நாடுகளில் வளர்ந்து வரும் மத்திய வர்க்கத்தின் காரணமாக இந்த நூற்றாண்டின் மத்தியில் இப்போது இருப்பதைவிட 4 மடங்கு மகிழுந்துகள் பெருகக்கூடும்.
அதை எப்படி எதிர்கொள்வது என்று இப்போது யோசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அதை எப்படி சரியானபடி சமாளிப்பது என்பதை நாமும் யோசிக்க வேண்டாமா? நமது பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில்கூட மிதிவண்டி குறித்த பரப்புரை செய்யப்படுகிறதே! மிதிவண்டிகளால் இன்னும் எவ்வளவு பலன்கள் இருக்கின்றன? பார்ப்போம் அடுத்த இதழில்…
(காப்போம்)