முட்டையைக் காத்த காகம்
காகம் ஒன்று மரத்தில் கூடுகட்டி முட்டையிட்டது. இரை தேடிவிட்டு வந்து பார்த்தபோது முட்டை உடைந்து கூடு மட்டுமே இருந்தது. இதனைப் பார்த்த காகம் மிகவும் வருத்தமுற்றது. மறுநாளும் முட்டையிட்டு இரைதேடிவிட்டு வந்தபோதும் அதே காட்சியைப் பார்த்தது. முட்டையை உடைத்துக் குடித்துச் செல்வது யாராக இருக்கும் எனத் தேடியபோது மரத்தின் அருகிலிருந்த கரையான் புற்று கண்ணில்பட்டது.
உள்ளே இருக்கும் தாய்க் கரையானைச் சாப்பிட வந்த பாம்புதான் எனது முட்டைகளையும் உண்டிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தது. இந்தப் பாம்பிடம் என்னால் மோத முடியாதே, பாம்பிடமிருந்து முட்டைகளை எப்படிக் காப்பாற்றுவது என்று சிந்தித்துக் கொண்டிருந்தது.
அப்போது அந்தப் பக்கமாக வந்த நரி, காகத்தின் சோகத்திற்கான காரணம் கேட்டது. காகமும் காரணத்தினைக் கூறி, தான் பாம்பிடமிருந்து தனது முட்டைகளைக் காப்பதற்கான வழி ஏதேனும் இருந்தால் கூறும்படிக் கேட்டது.
உடனே தந்திரத்தில் வல்லமையான நரி, காகமே இதற்காகவா இவ்வளவு வருத்தப்படுகிறாய்? நான் கூறும்படிச் செய்வாயா? என்றது. சொன்னால்தானே தெரியும். சொல்லுங்கள் நரியாரே என்றது.
நம் மகாராணி குளத்தில் நீராட வரும்போது தனது வைரமாலையைக் கழற்றி கரையில் வைப்பார்கள். அவர்கள் குளித்துவிட்டு வரும்வரை வைரமாலை கரையில்தான் இருக்கும். பாதுகாவலர்களும், அதன் அருகில் இருப்பார்கள். நீ அப்போது அந்த வைரமாலையை எடுத்துக் கொண்டு வேகமாகப் பறந்து அந்தப் பாம்பு இருக்கும் புற்றினுள் போட வேண்டும். மகாராணியின் வைரமாலையை நீ எடுத்து வரும்போது அருகிலிருந்த பாதுகாவலர்களும் உன்னைப் பின்தொடர்ந்து ஓடிவருவார்கள்.
நீ வைரமாலையைப் புற்றினுள் போட்டதும் அதனை எடுக்க புற்றினைச் சிதைப்பார்கள். அப்போது பாம்பு உள்ளிருந்து சீறும். பாதுகாவலர்கள் பாம்பினை அடித்துக் கொன்றுவிட்டு வைரமாலையை எடுத்துச் செல்வர். எப்படி என் யோசனை? என்றது.
காகத்தின் அமைதியைக் கண்ட நரி, என் யோசனையைக் கேட்டுப் பிரமித்துவிட்டாயா? என்றது.
இல்லை நரியாரே, உங்கள் யோசனை நடைமுறைக்கு எந்த அளவுக்கு ஒத்து வரும் என நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்றது. ஏன் ஒத்து வராது? என நரி கேட்டதும், முதலில் நான் வைரமாலையைத் தூக்கிக் கொண்டு பறந்து வந்து புற்றினுள் போடும்வரை காவலர்கள் என்னை விட்டு வைப்பார்களா? இரண்டாவது, அப்படியே அவர்களிடமிருந்து தப்பித்து வந்து புற்றினுள் போட்டுவிடுகிறேன் என்று வைத்துக் கொள்வோம். அப்போது புற்றினுள் பாம்பு இருக்க வேண்டுமே. மூன்றாவது, ஓர் உயிரைக் கொலை செய்துதான் என் முட்டைகளைக் காப்பாற்ற வேண்டுமா?
அப்படியே அந்தப் பாம்பைக் கொன்றுவிட்டாலும் இன்னொரு பாம்பு, கரையான் புற்றைப் பார்த்து வர எவ்வளவு நாள்கள் ஆகும்? பிறகும் வைரமாலையைத் திருடிப் பறந்துவர வேண்டுமா? என்றெல்லாம் தோன்றுகிறது என்றது.
நீ இப்படியெல்லாம் சிந்தித்தால் உன் முட்டைகளைக் காப்பாற்ற முடியாது. நான் சொல்லும்படிச் செய். நிம்மதியாக வாழலாம் என்று கூறிச் சென்றது நரி.
இந்த நரி எப்போதும் குறுக்கு வழியில்தான் சிந்திக்கும். நாம்தான் நிதானமாகச் சிந்தித்து முடிவுகாண வேண்டும். யார் என்ன சொன்னாலும் அதனை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவசியமோ _ கட்டாயமோ இல்லையே. எனவே, எனது பிரச்சினைக்கு நானே தீர்வு காண்கிறேன் என நினைத்து மூளைக்கு வேலை கொடுத்தது காகம்.
அதிகாலையில் கரையான் புற்றுக்கு வந்த பாம்பைப் பார்த்து, நண்பரே என அழைத்தது. குரல் வந்த திசையை நோக்கி பாம்பு திரும்பியதும், நண்பரே தங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும் என்றது காகம். என்னிடம் பேச உனக்கு என்ன இருக்கிறது? நான் பசியுடன் வந்திருக்கிறேன். சொல்ல வந்ததைச் சீக்கிரம் சொல் என்றது பாம்பு.
நண்பரே, தங்களுக்கு இரையாக எவ்வளவோ உணவுகள் இருக்க தாங்கள் ஏன் என் கூட்டில் இருக்கும் முட்டைகளை உண்கிறீர்கள்? தாங்களும் முட்டையிட்டு அடைகாத்து இனத்தை விருத்தி செய்யும் பிரிவினைச் சார்ந்தவர்தானே? இதனால் நான் அடையும் துன்பம் தங்களுக்குப் புரியாதது அல்ல. எங்கள் இன விருத்தியே பாதிக்கப்படுவதை நினைத்து மிகுந்த வேதனையாக உள்ளது.
கருவிலேயே எங்கள் இனத்தைத் தாங்கள் அழிக்கும் செயல் எந்த விதத்தில் நியாயமானது? நாங்கள் தங்களுக்கு எந்த வகையிலும் துன்பம் கொடுப்பதில்லையே. அப்படி இருக்கும்போது ஏன் எங்கள் இன விருத்திக்குத் தடையாக இருக்க வேண்டும் என்பதை ஒரு முறைக்கு இரண்டு முறை சிந்தித்துப் பாருங்கள். நான் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயமில்லை. உங்கள் மனதுக்குச் சரி என்று தோன்றினால் கடைப்பிடியுங்கள் என்று சொல்லிய காகம் இரை தேடப் பறந்தது.
வயிறு நிறையச் சாப்பிட்டு விட்டுக் கூட்டினை அடைந்த காகம், கூட்டினுள் இருந்த முட்டைகளைப் பார்த்து மனநிறைவுடன் அமர்ந்தது.
– செல்வா