சீண்டினால் சினந்து நோக்கு
– சிகரம்
மனிதனின் உணர்வுகள் வயது வளர்ச்சிக்கு ஏற்ப இயல்பாய், புதிது புதிதாய் எழக்கூடியது. பிறந்தவுடன் பசியுணர்வு; பின் பாசவுணர்வு; சுவை உணர்வு; விளையாட்டு உணர்வு; தோழமை உணர்வு என்று பிள்ளைப் பருவத்தில் வரும்.
அதன்பின் புதிய இடங்கள் காண வேண்டும், உறவுகள் ஊருக்குச் செல்ல வேண்டும், தின்பண்டங்கள் விதம்விதமாய் உண்ணவேண்டும், ஆடைகள் புதிதாய் அணிய வேண்டும் என்ற ஆர்வங்கள் எழும்.
ஆணுக்கோ பெண்ணுக்கோ 13 வயது வரும்போது புதிதாய் ஒருவித உணர்வு எழும். அதுதான் பாலுணர்வு. பெண் பருவமடைவதும், ஆண் பருவமடைவதும் இவ்வயதில்தான். பெண் பருவமடைவதன் அடையாளம் மாதவிலக்கு. ஆண் பருவமடைவதன் அடையாளம் விந்து வெளிப்படுதல்.
மாதவிலக்குப் பெண்ணுக்குச் சுமை; விந்து வெளியேற்றம் ஆணுக்குச் சுகம். இயற்கையில் பெண்ணுக்குரிய பாதகநிலை. 14 வயது முதல் ஆணின்_பெண்ணின் உடல் வளர்ச்சி விரைவுபடுவது போல உணர்வும் வளரும்.
இந்தப் பருவத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் பாலியல் கல்வி கட்டாயம். ஆண், பெண் உறுப்புகளைத் தூய்மையாய் வைத்துக் கொள்வதிலிருந்து பிறருடன் நெருங்கிப் பழகுவது பற்றிய விழிப்பு வரை பலவற்றை அவர்களுக்குச் சொல்லித் தரவேண்டும்.
ஆனால், சமுதாய மரபின்படி இவை சொல்லக்கூடாதவையாய், நாணத்திற்குரியவையாய் ஆக்கப்பட்டதால் இந்த விடலைப் பருவத்தினர் விபரீத விளைவுகளுக்கு உள்ளாகின்றனர். பெண்கள் மரபின்வழியும், உடல் அமைப்பின் வழியும் தூய்மையைக் காப்பதில், தூய்மையாய் இருப்பதில் நிறைய சிக்கல்கள் உள்ளன. எனவே, அவர்களுக்குக் கூடுதலாய் கற்பிக்க வேண்டும். 13 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு இவை குறித்து மருத்துவர் அல்லது செவிலியர் மூலம் கற்பிப்பது கட்டாயம்.
உடல் தூய்மையைப் போல, பெண்கள் பிறருடன் பழகும்போது எவ்வளவு எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் என்பதைக் கற்பிக்க வேண்டும். இதை இரண்டு அல்லது மூன்று வயது முதலே கற்பிக்க வேண்டும்.
குறிப்பிட்ட உடல் உறுப்புகளை ஆண்கள் தொடக்கூடாது. தொட்டால், உடன் தாயிடம் சொல்ல வேண்டும் என்பதைச் சொல்லி வைக்க வேண்டும்.
தொலைக்காட்சி, திரைப்படங்கள், இணையதளங்கள் என்று பல ஊடகங்களும் பாலுணர்வைத் தூண்டுவதால், சிறுவயதிலேயே ஆணும் பெண்ணும் தவறான செயல் செய்யத் தூண்டப்படுகின்றனர். தாராளமாய்க் கிடைக்கும் மதுபானங்கள், போதைப் பொருட்கள் இதை மேலும் தூண்டுகின்றன.
இதனால் ஆண்கள், 2 வயது குழந்தை முதல் 70 வயது பெண் வரை யாரிடமும் வண்புணர்ச்சிக்கு அலையும் வக்கிரம் வந்துவிட்டது.
உடன்பிறந்த சகோதரன், பெற்ற தந்தைகூட இப்படிப்பட்ட கீழ்த்தரமான _ மிருகத்தனமான செயலில் ஈடுபடும் கொடுமையுள்ளது என்பது வெட்கப்படத்தக்கதாய், வேதனைப்படத்தக்கதாய் உள்ளது. பெற்ற தந்தையே மகளைப் பலாத்காரம் _ புணர்ச்சி செய்யும்போது பெண்ணுக்குப் பாதுகாப்பு எப்படிக் கிடைக்கும்?
பெண்களுக்கு நேரும் பாலியல் தொல்லைகள் பெரும்பாலும் நெருக்கமான _ பழக்கமானவர்களிடம் இருந்துதான் பெருமளவிற்கு வருகிறது. எனவே, பெண்கள் குழந்தையாயினும், பெரியவர்களாயினும் நெருக்கமான, உறவினர் நண்பர்களிடம் குறிப்பாக ஆண்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆபாசமாகப் பேசத் தொடங்கினால் அதை வெறுக்க வேண்டும். தொடக்கூடாத இடங்களைத் தொட்டால் திட்டிவிட வேண்டும்.
மறுப்புக்கூறாமல், எதிர்ப்புக்காட்டாமல் இருந்தால், அவர்கள் மேலும் முயற்சி செய்வார்கள்; நெருங்குவார்கள். எனவே, அத்துமீறும்போது உடனே எதிர்ப்பும் மறுப்பும் காட்ட வேண்டும். இதற்குப் பெண்கள் தயங்கக்கூடாது.
வக்கிர எண்ணத்துடன் எந்த ஆண் சீண்டினாலும் ஒருமுறை முறைத்து சினந்து நோக்க வேண்டும். பெண் அப்படிச் செய்தால் ஆண் நழுவி விடுவான். அப்படிப்பட்ட பெண்களிடம் ஆண்கள் நெருங்கமாட்டார்கள்; மீண்டும் சீண்டமாட்டார்கள். இதன்மூலம் நெருக்கமானவர்களிடம் வரும் தொல்லையைத் தவிர்க்கலாம்.
தனியிடங்களில், தனிமையில் வரும் தொல்லைகளைத் தவிர்க்க, பெண் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வீட்டில் தனியாக இருக்கும்போது உட்புறம் தாழிடல், புது ஆட்களை வீட்டிற்குள் விடாமல் இருத்தல் போன்ற எச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை. வெளியில் செல்லும்போது நேரத்தில் வீடு திரும்புதல், தனிமையில், நடமாட்டமில்லா இடங்களில் செல்வதைத் தவிர்த்தல் போன்றவற்றைப் பின்பற்ற வேண்டும்.
பயம்கொள்ளும் பெண்களிடம் வக்கிரம் செய்வோர் அதிகம் நெருங்குவர். எனவே, பெண்கள் அஞ்சாமல் துணிவுடன் நடந்துகொள்ள வேண்டும். வீட்டிலும், வெளியிலும், பள்ளியிலும், கல்லூரியிலும், அலுவலகங்களிலும், யாரிடமும் அளவோடு பழக வேண்டும். பிறர் நம்மைத் தவறாக அணுக வாய்ப்பளிக்கக்கூடாது.
நல்லவர்களாக நடிக்கும் பலரும் இந்தப் பாலுணர்வு காரியத்தில் மோசமானவர்களே! எனவே, இவர் நல்லவர், இவர் கெட்டவர் என்று நம்பாமல், எல்லோரிடமும் எச்சரிக்கையாய் இருப்பதே அறிவுடைமை.
வலிய அக்கறை காட்டுவோர், குழைந்து குழைந்து பேசுவோரிடம் கூடுதல் எச்சரிக்கை வேண்டும்.
பெண் பிள்ளைகளுக்குத் தாயும், மூத்த சகோதரிகளும், ஆண் பிள்ளைகளுக்குத் தந்தையும், மூத்தவர்களும் பண்பாட்டோடு இக்கருத்துகளைக் கூறி எச்சரிக்க வேண்டும். விழிப்புணர்வும், முன்னெச்சரிக்கையுமே பாதுகாப்பைத் தரும். சட்டமும் காவல்துறையும் இரண்டாம் நிலையில்தான் உதவ முடியும்!