அன்பு மடல் 5
கோடையில் ஒரு வசந்தம்!
பாசமிகு பேத்திகளே, பேரன்களே!
என்ன நலமா? விடுமுறை எல்லாம் முடிந்து, பள்ளிகள் திறக்கப்படவிருக்கும் நிலையில் எப்படி உங்கள் விடுமுறையைக் கழித்தீர்கள்?
அப்பா-, அம்மா உங்களை ஸ்பெஷல் கோச்சிங் கிளாஸ், அந்தப் பாடம் இந்தப் பாடம் புதிது, படி படி, அடுத்த ஆண்டுப் பாடத்தை இப்போது படித்தால்தான் மற்றவர்களை முந்திக்கொண்டு நிறைய மதிப்பெண்களை நீங்கள் வாங்கலாம் என்று துளைத்தெடுத்து, வறுத்தெடுத்து விட்டனரா?
இல்லை ஜாலியாக விளையாடி, ஊர்சுற்றிப் பார்த்து, நண்பர்கள், உறவினர்களோடு கலந்துரையாடி மகிழும் வாய்ப்பைப் பெற்றீர்களா?
எனக்கு இம்முறை எல்லையற்ற மகிழ்ச்சி ஓர் இரண்டு நாள்.
பேரன் பேத்திகள் எல்லோரையும் (சுமார் 120 பேர்கள்) தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் நடந்த குழந்தைகள் பழகுமுகாம் மூலம் சந்தித்தேன். உரையாடி மகிழ்ந்தேன்! புரட்சிக்கவிஞர் கூறிய கோட்டைப் பவுன்களில் உருக்கி வார்த்த குத்துவிளக்குப் போன்ற பிஞ்சுகளைப் பார்த்து வியந்தேன்!
சிட்டுக்களாக, தேனீக்களாக, நடமாடும் கணினிகளாக, முகாமில் கலந்துகொண்டு பேரன்களும் பேத்திகளுமான பெரியார் பிஞ்சுகளுடன் இருந்தபோது மகிழ்ச்சி. அந்தப் பிஞ்சுகள் கொஞ்சுமொழியும், கோணல் இல்லாத குமிழ்ச்சிரிப்பும், ஓடி ஓடி வந்து ஒட்டிக்கொண்ட பாங்கும், எல்லாம் குறித்த பணி, கடமைகள் குறித்த நேரத்தில் என்று செய்த நேர்த்தி கண்டு பெற்றோர்களே வியந்தனர்!
உங்களைக் கவனித்த ஒவ்வொருவரும் _ அண்ணன்களும், அக்காக்களும் எவ்வளவு அருமையாக கவனித்தார்கள் என்பதை நேரில் கண்டு பூரித்தேன்; புளகாங்கிதம் அடைந்தேன்.
ஏன் தாத்தா, இன்னும் எங்களுக்கு விடுமுறை உள்ளதே ஏன் முகாமை முடித்து ஊருக்குப் போகச் சொல்லுகிறீர்கள்? இன்னும் சில நாள்களுக்கு நீட்டுங்களேன் என்றல்லவா நீங்கள் கேட்டீர்கள்!
அன்பு அண்ணன் சொன்னாங்களே, என்ன செய்வது உங்களுக்கு விடுமுறை உள்ளது, எங்களுக்கு விடுமுறை முடிந்துவிட்டதே! அடுத்த வேலை செய்ய வேண்டுமே என்று!
நல்ல பகுத்தறிவுச் சிந்தனையாளர்களாக அய்ந்தில் வளைந்துள்ளீர்கள்; அருமையாக இந்த முகாமில் விளைந்துள்ளீர்கள்.
உங்கள் எதிர்காலம் நிச்சயம் ஒளிமயமாக இருக்கும்!
உங்கள் அப்பா, அம்மாவிடம் தொலைப்பேசியில் பேசியபோது நீங்கள் அல்லவா அவர்களுக்குப் பகுத்தறிவு வகுப்பு எடுத்து கோயிலில் உள்ளது கல்லுப்பா? ஏமாந்துக்கிட்டே இருக்காதீங்க. நான் -ஊரில் நேரில் வந்து சொல்கிறேன் என்று உபதேசித்து குமரகுருபரர்களாகி விட்டீர்கள் எனும்போது, பெரியார் தாத்தா நமக்குச் சொன்ன வாழ்க்கைப் பாடங்களெல்லாம் எவ்வளவு சிறப்பாக இருந்தது என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது!
வல்லம் குழந்தைகள் பழகுமுகாமுக்கு வந்த சில பிஞ்சுகள் கயிறு கையில் கட்டியிருந்தது பற்றி, அறிவியல் பூர்வமாக கயிற்றில் சேரும் அழுக்கு, கிருமிகளை ஆய்வு செய்தே கூறி, அதனால் மூடநம்பிக்கைக் கிருமிகள் மட்டும் மூளைக்குள்ளே செல்லவில்லை; உடலுக்குள் நோய்க் கிருமிகளும் தங்கி உடலுக்குக் கேடு செய்கின்றன என்பதைப் பரிசோதனை முறை மூலமே விளக்கியது, பிஞ்சுகளுக்கு மட்டுமல்ல; பிஞ்சுகளின் பெற்றோர்களுக்கும்கூட அறிவியல், துணிவு வகுப்பு எடுத்ததாக இருந்ததே!
கோடையில் ஒரு வசந்தம்! கொள்ளை இன்பம் தந்த சுகந்தம்! இதை எங்களுக்குத் தந்து எங்களின் இழந்த பிஞ்சுப் பருவத்தை மீட்டுத் தந்து எங்களையும் குழந்தைகளாக்கிய குதூகலத்தை எப்படி மறக்க முடியும்? படியுங்கள் -_ பாடங்களை _ பகுத்தறிவுடன் சேர்த்தே! பழகுமுகாமிற்கு வர வாய்ப்பில்லாதவர்கள் பெரியார் பிஞ்சு ஏட்டில் விரிவாகப் படித்து, அதனையே நீங்கள் பயிற்சியாக அன்றாடம் செய்து உயருங்கள்!
அனைவரும் உறவினர்
— புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் ஆத்திச்சூடி!
உங்கள்பால் என்றும் பிரியமுள்ள தாத்தா,
கி.வீரமணி