பனியில் வாழும் பாண்டாக்கள்
கரடிகளை சர்க்கஸில் பார்த்திருப்பீர்கள். கரடியைப் போன்ற தோற்றத்துடன் பனிப்பகுதிகளில் வாழும் கரடிகள் பாண்டா கரடிகள் என அழைக்கப்படுகின்றன. ஆனால், கரடிகளுக்கும், பாண்டாக் கரடிகளுக்கும் எந்தவிதமான தொடர்போ, உறவோ கிடையாது. தரைமட்டத்தில் இருந்து சுமார் 5,000 அடி உயரத்திற்கு மேலே குளுகுளு வாழ்க்கை வாழ்பவை இந்த பாண்டா கரடிகள். பூனைக் கரடி, சிகப்பு பாண்டா என்ற செல்லப் பெயர்களையுடைய இவை, இமயமலையில் தொடங்கி நேபாளம், பர்மா மற்றும் தென்சீனா வரையிலான பகுதிகளில் வாழுகின்றன.
பார்ப்பதற்கு அழகான தோற்றமளிக்கும் பாண்டாக்களின் முகத்தை மறைத்துவிட்டுப் பார்த்தால் அதிக எடையுள்ள பூனைபோலத் தோன்றும். முகத்தில் மட்டும் சிறிதளவு கரடியின் சாயல் இருக்கும். ஆனால், கரடியைப்போல ஒரே நிறத்தில் இதன் முகம் இருப்பதில்லை. வெள்ளை மற்றும் சிவப்புக் கோடுகள் போட்ட வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும். இதன் தோற்றத்தால் ஈர்க்கப்பட்ட மேலைநாட்டினர் பலர் வீட்டிலேயே (Pet animal) வளர்த்து வருகின்றனர்.
சாதாரண கரடிகளுக்குச் சிறிய வால்தான் இருக்கும். பாண்டாக்களுக்கு ஒன்றரை அடி நீளத்தில் சிவப்பு வளைய வடிவங்களுடன் மொசு மொசுவென்ற வால் காணப்படுகிறது. பாண்டா கரடிகள் அய்லுரோ ப்போடிடே (Ailuropodidae) என்ற தனிக்குடும்பத்தைச் சேர்ந்தவை.
இதில் இரண்டு இனங்கள் உள்ளன. இரண்டுமே ஆசிய வகையைச் சேர்ந்தவை. இதில், சுமார் 150 கிலோ எடையுள்ள ஜாய்ண்ட் பாண்டாக்கள் அழியும் நிலையில் உள்ளன. இந்த இனத்தைக் காப்பாற்ற இதுவரை மேற்கொள்ளப்பட்ட மனித முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன. சிறிய வகையான லெஸ்ஸர் பாண்டா என்ற இனம் 4 கிலோ எடை கொண்டவையாகும்.
பகலில் பசியை மறந்து உயரமான மரக்கிளைகளில் தலையை வாலினால் போர்த்தியபடி அமைதியாக அமர்ந்திருக்கும். மாலை நேரத்தில் இரைதேட தரைக்கு வந்துவிடும். பாண்டா கரடிகளின் முக்கியமான உணவு மூங்கில் இலை. திரண்ட வேர்கள், ஈரப்பதம் மிக்க புல்வகைகள், புழு பூச்சிகள், அதன் முட்டைகள் ஆகியவற்றையும் உட்கொள்ளும். ஜாய்ண்ட் பாண்டாக்கள் தாவர உணவை மட்டுமே சாப்பிடும். மனிதர்களின் பராமரிப்பில் இருக்கும் இந்தப் பாண்டா கரடிகள் தயிர்ச் சோறைக்கூட சாப்பிடுகின்றதாம்.
இவற்றின் மணிக்கட்டு எலும்பு, கைகளை நன்கு இயக்கும் வகையில் வசதியாக வளர்ந்துள்ளது. தமது புத்திசாலித்தனத்தினால் பெரும்பாலான நேரங்களில் மனிதனைப் போலவே கைகளைப் பயன்படுத்துகின்றன. இவற்றின் கைகளை ஒப்பிடும்போது கண், காது, மூக்கு இவற்றின் செயல்பாடு சிறிது குறைவு என்றே சொல்லலாம்.
பெண் பாண்டாக்கள் 4 அல்லது 5 மாதக் கர்ப்பத்திற்குப் பின் ஒன்று அல்லது இரண்டு குட்டிகளைப் போடும். மரப்பொந்து அல்லது பாறை இடுக்கில் வைத்து ஓர் ஆண்டு வரை குட்டிகளைப் பாதுகாக்கும்.
பாண்டா கரடிகளை முக்கியப் பாத்திரமாக்கி எடுக்கப்பட்ட குங்க் பூ பாண்டா என்ற ஹாலிவுட் திரைப்படம் உலகம் முழுதும் பிரபலம். நீங்களும் தொலைக்காட்சிகளில் பார்த்திருக்கலாமே!.