சாமிகளின் பிறப்பும் இறப்பும் 10
என்றும் எங்கும் ஏழைசாமிகள்
– ச. தமிழ்ச்செல்வன்
இதுவரை நாம் பார்த்த சாமிகளை எல்லாம் மக்கள்தான் உண்டாக்கினார்கள்; படைத்தார்கள். ஆனால், இதெல்லாம் பழைய கதைகள். இப்போதெல்லாம் மக்கள் சாமிகளை உண்டாக்குவதில்லை என்று சொல்ல முடியுமா?
இன்றைக்கும் மக்கள் சாகிறார்கள். இன்றைக்கும் மக்கள் கொல்லப்படுகிறார்கள். அதைக் கண்ணாரக் காணும் மக்கள் இறந்தவர்களைத் தெய்வமாக்கி வணங்கத்தான் செய்கிறார்கள். 1969ஆம் வருடம் தேனி மாவட்டம் கம்பம் என்கிற ஊரில் சாலை விபத்தில் தனம் என்கிற 11 வயது சிறுமி பலியானாள். அய்ந்தாம் வகுப்புப் படிக்கிற வயசு. அவ்வளவு சின்னப் பெண்.
குழந்தை நடுரோட்டில் அடிபட்டு அந்த இடத்திலேயே செத்துப் போனாள். அதைக் கண்டு மக்கள் மனம் பதைத்தார்கள். பார்த்தவர்கள் எல்லாம் அழுதார்கள். அக்குழந்தை அடிபட்ட அந்த இடத்தைக் கடக்கும் போதெல்லாம் மக்களுக்கு மனம் கலங்கியது. அந்த இடத்திலேயே _ ஓரமாக, அவள் நினைவாக ஒரு கல்லை நட்டார்கள். அதுதான் இன்றைக்கும் அங்கே சாலை ஓரத்தில் தனகாளியம்மனாக வழிபடப்படுகிறது.
1988இல் உருவான ஒரு சாமியின் கதையை நாம் ஏற்கெனவே பார்த்தோம். நினைவிருக்கிறதா? கூனம்பட்டி என்று ஒரு கிராமம். அது விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே அமைந்துள்ளது. அந்த ஊரில் சர்க்கரையம்மாள் என்றொரு பெண் வாழ்ந்து வந்தாள்.
அவளுடைய கணவன் மகாலிங்கம் ஒரு மகா குடிகாரன். அவர்களுக்கு அய்ந்து பிள்ளைகள். குடித்துவிட்டு வந்து தினசரி சர்க்கரையம்மாளை அடிப்பான். மனம்வெறுத்துப் போனாள் சர்க்கரையம்மாள். கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டு சாக முடிவு செய்தாள். தான் செத்தபிறகு தன்னுடைய அய்ந்து பிள்ளைகளும் என்ன செய்வார்கள்? தெருவில் பிச்சை எடுத்துக் கொண்டு அனாதைகளாகத்தானே அலைவார்கள்? என்று ஒரு நிமிடம் யோசித்தாள்.
எல்லாப் பிள்ளைகளையும் தூக்கிக் கிணற்றில் போட்டுவிட்டுத் தானும் விழுந்து செத்துப் போனாள். ஒரு பிள்ளை மட்டும் சாகாமல் தப்பிப் பிழைத்து நடந்த கதையை ஊராருக்குச் சொன்னது. நல்லதங்காள் மாதிரி கிணற்றில் விழுந்து செத்துவிட்டார்களே என்று ஊர்மக்கள் கண்ணீர் விட்டனர். அந்தக் கிணற்றடியிலேயே நடுகல் நட்டனர். இன்றைக்கும் செத்துப்போன சர்க்கரையம்மாள் மற்றும் அவளது பிள்ளைகளான மகாலட்சுமி, மல்லிகா, விநாயகமூர்த்தி ஆகிய நால்வரும் சாமிகளாக வழிபடப்படுகிறார்கள்.
இறந்து கொஞ்சநாள் அவர்கள் மனிதர்கள் என்பது ஞாபகம் இருக்கும். அப்புறம் ஒரு 20 வருடத்தில் செத்த மனிதர்கள் என்பது மறந்துவிடும். கும்பிடும் சாமியாகவே ஆகிவிடும். இதுதான் நடைமுறையாக இருக்கிறது. ஆகவே, காலம்தோறும் புதுசு புதுசாக சாமிகள் பிறந்துகொண்டே இருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
நாம் ஆரம்பத்தில் சொன்னது போல சாமிகளில் இரண்டு வகை உண்டு. ஒன்று ஏழைச்சாமிகள், அந்த ஏழைச்சாமிகள் என்பவர்கள் இறந்துபோன மனிதர்கள்தாம். அவர்களை, மக்கள் தெய்வங்கள் அல்லது நாட்டுப்புற தெய்வங்கள் என்று கூறலாம். இரண்டாவது வகை பணக்காரச் சாமிகள். அவற்றைப் பணம் படைத்த மனிதர்கள் உருவாக்கினார்கள். இரண்டாவது வகைச் சாமிகளைப்பற்றிப் பிறகு பார்ப்போம்.
இப்போது இந்த ஏழைச்சாமிகள் _ நாட்டுப்புறத் தெய்வங்கள் கிறித்தவ மதத்தில் உண்டா? இஸ்லாம் மார்க்கத்தில் உண்டா? என்று பார்ப்போம்.
உண்டு. இறந்துபோன மனிதர்கள்தானே ஏழைச்சாமிகள். கிறித்தவர்களிலும் இறப்பு உண்டுதானே. முக்கியமாக கிறித்தவ மதத்தைப் பரப்ப வந்த பாதிரியார்கள் பலர் இப்போதும் சாமிகளாக வணங்கப்படுகிறார்கள். சமயத்தைப் பரப்புகிற வேலையை மட்டும் செய்த பாதிரியார்களை மக்கள் சாமியாக்கவில்லை. நோயுற்ற மக்களுக்கு வைத்தியம் பார்த்த பாதிரியார்கள் _ கஷ்டப்பட்ட மக்களுக்கு ஓடோடி வந்து உதவிய பாதிரியார்கள். இவர்கள் இறந்தபிறகு அடக்கம் செய்யப்பட்ட இடங்களை மக்கள் வணங்கத் தொடங்கினார்கள்.
தென்மாவட்டங்களில் புளியம்பட்டி அந்தோணியார் கோவில் மிகவும் புகழ்பெற்ற சர்ச் ஆகும். உண்மையில் அது ஒரு பாதிரியார் அடக்கம் செய்யப்பட்ட இடமாகும். இதே போல குருசடி என வழங்கப்படும் இடங்கள் வழிபாட்டு இடங்களாக உள்ளன. இவையும் புனிதர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடங்களே ஆகும். குரூஸ் என்றால் போர்ச்சுகல் மொழியில் சிலுவை என்று பொருள். Cross என்று ஆங்கிலத்தில் சிலுவையைக் குறிப்பிடுவார்கள்.
தமிழகத்திற்கு முதலில் வந்த கிறித்தவர்களில் பெரும்பாலானோர் போர்ச்சுகீசியர்கள்தானே. அவர்கள் வார்த்தை குரூஸ் வேம்படி, மரத்தடி, ரயிலடி என்று நம் மக்கள் கூறுவது வழக்கம். அதே பாணியில் குரூஸ் அதாவது சிலுவை நடப்பட்ட அந்தச் சமாதிகளை குருசடி என்று கூறுகிறார்கள். புனித சின்னப்பர் குருசடி என்று விருதுநகர் மாவட்டம் சாத்தூரில்கூட ஒன்று இருக்கிறது.
இந்தப் புனிதர்களின் அடக்க சமாதிகளுக்கு மக்கள் வண்டி கட்டிக்கொண்டு வந்து கிடாய் வெட்டிப் பொங்கல் வைத்து மொட்டை போட்டு சப்பரம் தூக்கிக் கொண்டாடுவார்கள். தூரத்தில் நின்று பார்த்தால் ஏதோ ஒரு சுடலைமாடனுக்கு நடக்கும் விழா போலவே தெரியும். எந்த மதமானாலும் ஏழைகள் ஒன்றாகத்தானே தெரிவார்கள்.
இஸ்லாம் மதத்திலும் இதுபோல இறந்துபோன சமயப் பெரியவர்களை அடக்கம் செய்த இடங்கள் வழிபடப்படுகின்றன. அவற்றை தர்கா என்று கூறுவார்கள். அங்கேயும் சுடலைமாடசாமி கோவிலைப் போலவே ஆடு வெட்டிக் கறி சமைத்து நேர்ச்சை கொடுத்து மொட்டை போட்டுப் பொங்கல் வைத்து _ என எல்லாமே நடக்கும்.
கிறித்தவ, இஸ்லாமிய ஏழைச்சாமிகள் சிலரின் கதைகளை அடுத்தபடியாகப் பார்ப்போம்.