சுவையான செய்திகள்
உடையாத சோப்புக்குமிழ்
ஜேம்ஸ் தீவார்
சோப்புக்குமிழ் சிறிது நேரத்திலேயே வெடித்துவிடும் தன்மை உடையது. இது, உடையாமல் இருக்கக்கூடியதுதான். புறத் தாக்குதலின் பாதிப்பினால்தான் உடைந்து போகிறது என நிரூபிக்க விரும்பினார் ஸ்காட்லாந்து நாட்டின் இயற்பியல் விஞ்ஞானியான ஜேம்ஸ் தீவார்.
காற்றை நீர்மமாக்கும் வழிமுறையைக் கண்டறிந்த தீவார், மிகத் தாழ்ந்த வெப்பநிலையில் இருக்கும் ஒரு நீர்மப் பொருளை அதே வெப்பநிலையில் வைத்திருக்க உதவும் ஒரு சிறப்புக் குடுவையைக் கண்டுபிடித்தார். இது, அவரது பெயரால் தீவார் குடுவை என்று அழைக்கப்படுகிறது. ஒரு மாதம் வரை சோப்புக்குமிழ் உடையாமல் இருப்பதை எடுத்துக்காட்டி, காற்றிலுள்ள தூசியும், வெப்பநிலையால் ஏற்படும் வறட்சியும்தான் சோப்புக்குமிழ் உடைந்துபோகக் காரணம் என்ற விளக்கமும் கொடுத்தார்.
இவருக்குப் பின்வந்த அமெரிக்க விஞ்ஞானி ஆர்லாண்டோ லாரன்ஸ் ஒரு வருடத்திற்கும் அதிகமாக சோப்புக்குமிழைக் கண்ணாடிப் புட்டியில் உடையாமல் வைத்துக் காட்டியுள்ளார்.
கதை கேளு கணக்கு போடு
பன்னிரெண்டாம் வகுப்பு முடித்துவிட்டு, கல்லூரி சென்று படிக்க இருக்கும் தமிழ்ச்செல்வி பள்ளியில் நடைபெற்ற பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி, வினாடி வினா….. என அனைத்துப் போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்று விடுவாள். வெற்றி பெற்றமைக்காக சான்றிதழும் புத்தகங்களும் பள்ளியில் கொடுத்தார்கள்.
எட்டாம் வகுப்புத் தொடக்கத்திலிருந்து போட்டிகளில் கலந்து கொண்டாள் தமிழ்ச்செல்வி. எட்டாம் வகுப்பில் மிகக் குறைந்த போட்டிகளிலேயே பங்கு கொண்டு குறைந்த எண்ணிக்கைப் புத்தகங்களையே பரிசாகப் பெற்றாள். ஒன்பதாம் வகுப்பில் எட்டாம் வகுப்பில் பரிசாக வாங்கியதைவிட 6 புத்தகங்கள் அதிகம் பரிசாகக் கிடைத்தன. பத்தாம் வகுப்பிலும் முந்தைய ஆண்டைவிட 6 புத்தகங்கள் அதிகம் கிடைத்தன. அதேபோல பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளிலும் ஆறு ஆறு புத்தகங்கள் அதிகம் பரிசு பெற்றாள்.
பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு எழுதி முடித்துவிட்டு விடுமுறையில் வீட்டில் இருந்தபோது, தான் பரிசாகப் பெற்ற புத்தகங்களை எண்ணிப் பார்த்தாள். 100 புத்தகங்கள் இருந்தன.
தமிழ்ச்செல்வி ஒவ்வொரு வருடமும் பரிசாகப் பெற்ற புத்தகங்களின் எண்ணிக்கையினைக் கண்டுபிடியுங்கள்.
விடை: இன்னொரு பக்கம்
சாதனைச் சிறுவன்
வருண்
ஆறாம் வகுப்புப் படிக்கும் பொள்ளாச்சியைச் சேர்ந்த பெரியார் பிஞ்சு வருண் மின்சாரத்தில் சுழலும் சிறிய காற்றாடி செய்துள்ளார். சிறிய மாவு அரைக்கும் இயந்திரத்தை வடிவமைத்துள்ளதுடன் ரிமோட்டினால் இயங்கும் பெட்டியை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார். இந்தப் பிஞ்சின் முயற்சியையும் ஆர்வத்தையும் பாராட்டுகிறோம். மேலும் இவர், ஓவியம் வரைவதிலும் அதிக ஈடுபாடு கொண்டுள்ளார்.
வாலில்லா குரங்கு
பிரெஞ்சு நாவலாசிரியர், டூமாஸ், இலக்கியக் கூட்டமொன்றில் பேசிக் கொண்டிருந்தார். அவர்மீது பொறாமையும், வெறுப்புணர்ச்சியும் கொண்ட நபர் ஒருவர், டூமாசை அவமானப்படுத்த நினைத்தார். எழுந்து நின்று, அன்பரே, உங்கள் மூதாதையர் வரலாறு ஏதாவது தங்களுக்குத் தெரியுமா? என்றார். தெரியும் என்றார் டூமாஸ்.
அவங்க மிகக் கேவலமான இனத்தைச் சேர்ந்தவர்களாமே என்றதும் உண்மைதான் என பதிலளித்தார். உங்கள் தந்தை யார்? என அந்த நபர் வினவ, அவர் ஒரு காட்டுமிராண்டி என்றார். தந்தைக்குத் தகப்பனார் என்றதும், நீக்ரோ என்றார். உங்க தாத்தாவுக்குத் தாத்தா என்றதும் ஒரு வாலில்லா குரங்கு என்று பதில் சொல்லிவிட்டு, நண்பரே, ஒரு செய்தி தெரியுமா உங்களுக்கு? என் பரம்பரை ஆரம்பமான இடத்தில் உங்க பரம்பரை முடிந்துவிட்டது.
வாலில்லா குரங்குகளான எங்கள் பரம்பரை பரிணாம வளர்ச்சி பெற்று மனிதர்களாகி விட்டனர். ஆனால், உங்க பரம்பரையில் இன்னும் வாலில்லா குரங்குகளாகவே இருக்கின்றனர் என்றதும் கூட்டத்திலிருந்த அனைவரும் சிரித்துவிட்டனர்.
2 ஓவியம் = 1 பங்களா
பிக்காசோ
ஓவியர் பிக்காசோ, ஓவியம் வரைந்து முடித்ததுமே, தான் வரைந்த ஓவியம் மக்களிடம் எந்த அளவிற்கு வரவேற்பைப் பெறும் என்று கணித்து விடுவார். அவரது ஓவியங்களை அவர், 6 லட்சம் ரூபாய்க்குக் கீழே விற்றதே இல்லை.
அதிக விலையாக 20 லட்சம் வரை விற்றுள்ளார். ஒருமுறை 2 ஓவியங்களைக் கொடுத்துவிட்டு ஒரு பங்களாவையே வாங்கியுள்ளார். அவரது சொத்து மதிப்பு 1125 கோடி.இவரது 14,000 படைப்புகளுள் 400 சிற்பங்கள் உள்ளன.
கோடை விடுமுறை
லாயிட் ஜார்ஜ்
இங்கிலாந்து நாட்டின் பிரதமராக 1916-1922 வரை பதவி வகித்தவர் லாயிட் ஜார்ஜ். இவரது ஆட்சியில்தான் முதலாம் உலகப்போர் நடைபெற்றது. பல சிக்கலான பிரச்சினைகளைச் சந்திக்க நேரிட்டது.
எனினும் ஜார்ஜ் இன்முகத்துடன் கட்டுக்கோப்பான உடலமைப்புடன் காணப்படுவார். இதனைப் பார்த்து வியந்த அரசியல் பிரமுகர் ஒருவர், போர் நடைபெறும் சூழலில் எப்படி இப்படி இருக்க முடிகிறது? என்றதும், பிரச்சினைகள் என்பது எனக்குக் கோடை விடுமுறை போன்றதாகும் என்று பதில் கூறியுள்ளார் ஜார்ஜ்.
தொகுப்பு: மேகா