“நிறைய கத்துக்கிட்டோம்” “பயம் போச்சு” “நண்பர்கள் கிடைச்சாங்க”
பள்ளி விடுமுறை விட்டுவிட்டால் வீடுகளில், சிறார்களின் சேட்டைகளைத் தாங்க முடியாமல், தாங்கள் பிறந்த ஊர்களுக்கு அவர்களை அழைத்துச் சென்று, தாத்தா பாட்டியிடம் விட்டுவிட்டோ அல்லது உடனிருந்தோ திரும்புவார்கள். சிறார்களின் உலகமே வேறு. அந்த உலகத்திற்குள் சென்றால்தான் அந்த உன்னதத்தை அனுபவிக்க முடியும். உள்ளுக்குள் செல்ல முடியாவிட்டால், அது சேட்டையாகத்தான் நமக்குத் தெரியும். தாத்தாவும் பாட்டியும் ஓரளவிற்கு அவர்களோடு ஒத்துப் போகிறார்கள்.
அதுவும் கிராமங்களில்தான். மற்றபடி பெற்றோர்கள் மறுபடியும் எப்போது பள்ளிக்கூடம் திறக்கும் என்று காத்திருக்கின்றனர். சரி, எல்லோராலும் குழந்தைகளின் உலகத்திற்குள் சென்று அவர்களோடு கூடிக் களிக்க முடியுமா-? அப்படியே களித்தாலும் அவர்களுக்கு அறிவின் சில உன்னதங்களைக் கற்றுத்தர முடியுமா? கற்றுக் கொள்வதை சிறார்களையே விரும்ப வைக்க முடியுமா? இந்தக் கேள்விகளுக்கு முடியும் என்று அழுத்தமாகச் சொல்கிறது பழகு முகாம்.
அதுவும் ஒருவர் இருவர் அல்ல. நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளும் ஒற்றைக் குரலில், நாங்கள் அடுத்த ஆண்டும் பழகு முகாமுக்கு வருவோம் _ என்று கூறுகின்றனரே எப்படி? சின்னச்சின்ன மூடநம்பிக்கைகளிலிருந்து, பேய், பிசாசு, பூதம், கடவுள் வரைக்கும் உண்மைகளைத் தெரிந்து கொள்கிறார்களே எப்படி? விடை மிகவும் சுலபமானது. கற்றுக் கொடுக்கிறவர்கள் குழந்தையாகவே மாறிவிடுவதுதான். அவர்கள் போக்கிலேயே சென்று கற்றுக் கொடுப்பதால்தான். தஞ்சை _ வல்லம், பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகத்தில் மே 6 தொடங்கி 11 வரை நடைபெற்ற பழகு முகாமில் கலந்து கொண்ட பிஞ்சுகளின் எண்ணங்கள் இங்கே….
கிசோர்
பள்ளிக்கூடத்தில் பத்து மாதமாக கற்றுக் கொண்டதைவிட இங்கே 5 நாள்களில் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டோம். இது நல்ல பயனுள்ளதா இருந்துச்சு. அடுத்த ஆண்டு பழகு முகாம் பத்து நாள் வையுங்க. அஞ்சு நாள் பத்தல. ஆசிரியர்கள் எங்கள நல்லா கவனிச்சுக்கிட்டாங்க. நிறைய நண்பர்கள் கிடைச்சாங்க. நான் பழகு முகாமை எப்பவுமே மறக்க மாட்டேன்.
பகுத்தறிவு
நெறைய கத்துக்கிட்டோம். அரண்மனைக்குக் (தஞ்சை சரபோஜி மன்னர் அரண்மனை) கூட்டிட்டுப் போனாங்க. ஓலைச்சுவடி எல்லாம் பாத்தோம். உணவு ரொம்பப் புடிச்சிருந்தது. நீச்சல் குளம், குதிரை சவாரி, விளையாட்டுகள், யோகா, சிலம்பம், கராத்தே ஆகியவற்றைக் கற்றுக் கொண்டோம். நல்ல பயனுள்ளதா இருந்தது.
சத்யபாரதி – புதுவை
நான் வந்து இங்க நிறைய கத்துக்கிட்டேன். குதிரை கொஞ்சம் பயமா இருந்துச்சு. ஆனா, இப்ப இல்ல. உணவு நல்லா இருந்துச்சு. நீச்சல், நீர் சறுக்குப் போறதுக்குப் பயமா இருந்துச்சு. அப்புறம் நல்லா இருந்துச்சு. ரொம்பப் புடிச்சது விளையாட்டுகள்தான். அடுத்த ஆண்டு கண்டிப்பா வருவேன்.
யஸ்வந்த் – சென்னை
நிறைய கத்துக்கிட்டேன். நீச்சல்னா பயம். இங்கு வந்து கத்துக்கிட்டேன். உணவு நல்லா இருந்துச்சு. ஓவியம், குப்பைகளிலிருந்து உருவங்கள் செய்வது, யோகா, சிலம்பம்ன்னு நிறைய கத்துக்கிட்டோம்.
துரை சக்ரவர்த்தி
நீச்சல் போனோம். நூலகம் போனோம். கையில ஏன் கயிறு கட்டக் கூடாதுன்னு சொன்னாங்க. பட்டிமன்றத்தில கலந்துக்கிட்டுப் பேசியது எனக்குப் புடிச்சிருந்தது.
ஹரிஹர சுதன்
ரொம்பப் புடிச்சிருக்கு. நிறைய கத்துக்கலாம். ஆறு நாளும் நண்பர்களோட மகிழ்ச்சியா இருந்தோம். நிறைய நண்பர்கள் கிடைச்சாங்க. வாழ்க்கையில் நாம் சம்பாதிக்க வேண்டியது நண்பர்கள்தான். இனிமேல் கையில் கயிறு கட்டக்கூடாதுன்னு தெரிஞ்சுக்கிட்டேன்.
பாவேந்தன்
மகிழ்ச்சியா இருந்துச்சு. பழகுவதற்கு இதுதான் நல்ல இடம். நிறைய கத்துக்கலாம். எனக்குப் பத்து நண்பர்கள் இருக்கிறார்கள். ஆசிரியர்கள் மிகவும் அருமையாகக் கற்றுக் கொடுத்தார்கள்.
சித்தார்த் – புதுவை
ஜாலியா இருந்துச்சு. பெரியார் பற்றி இன்னும் கொஞ்சம் தெரிஞ்சுக்கிட்டோம். சாமிங்கிறது டுபாக்கூருன்னு இன்னும் கொஞ்சம் கத்துக்கிட்டோம். மரம் நட்டோம். நான் நட்ட மரத்தை அடுத்த ஆண்டு வந்து பார்ப்பேன். குப்பைகளிலிருந்து உருவங்கள் செஞ்சது நன்றாக இருந்தது. எனக்கு இருபதுக்கும் மேல நண்பர்கள் இருக்காங்க.
நிவேதா – பல்லடம்
சூப்பரா இருந்துச்சு. இங்க இருக்கிற மரங்கள் ரொம்பப் புடிச்சிருக்கு. எங்கள எல்லோரும் நல்லா கவனிச்சுக்கிட்டாங்க. எல்லோருமே ப்ரண்ட்லியா பழகுனாங்க. நிகழ்ச்சிகள் எல்லாமே நன்றாக இருந்தது. சிலம்பம் மிகவும் பிடித்தது.
அறிவு ஞானசெல்வி – பல்லடம்
எல்லாமே ரொம்பப் புடிச்சிருந்தது. எல்லாமே சூப்பரா இருந்திச்சு. நீச்சல், நடனம், யோகா, சிலம்பம் எல்லாமே ரொம்ப ரொம்பப் புடிச்சிருந்தது.
அபிநயா – திருப்பூர்
ரொம்ப ரொம்பப் புடிச்சிருந்தது.நிறைய புதிய நண்பர்கள் கிடைச்சாங்க. அடுத்தாண்டும் வருவேன்.
கார்த்திகா – திருப்பூர்
ஜாக்கிங் போனது பிடித்தது. உணவு சிறப்பாக இருந்தது. நீச்சல் நன்றாக இருந்தது.
கோகுல கிருஷ்ணன் – கோயமுத்தூர்
ஜாக்கிங், கராத்தே, சிலம்பம், அருங்காட்சியகம்னு எதைச் சொல்றதுன்னே தெரியல. அப்புறம் எங்க வார்டன் எங்களை நல்லா கவனிச்சுக்கிட்டாங்க. பிஞ்சுகளின் உணர்வுகள் இப்படியென்றால் பெற்றோர்கள் என்ன சொல்கிறார்கள் பார்ப்போமா!
சோமசேகரன்
நான் பெரியார் பிஞ்சு, உண்மை, விடுதலை சந்தாதாரராக இருக்கிறேன் என்பதைப் பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன். நான் இரண்டு ஆண்டுகளாக கேட்டேன். மனைவி மறுத்து விட்டாள். ஆனால், வெளி அனுபவம், புதிய நண்பர்கள், தனித்தன்மை ஆகியவை கிடைக்கும் என்று சொன்னேன். விடுதலையை நான் மட்டும்தான் படிப்பேன். இப்பதான் ஒரு வாரமா என் மனைவியும் விடுதலை படிக்கிறாங்க.
விடுதலை பத்திரிகையை முதன்முதலா இங்கதான் முழுசா படிச்சிருக்கேன்னு நான்கூட கிண்டல் பண்ணினேன். புள்ளைய விட்டுட்டுப் போகும்போது, டாடாகூட காட்டலே. சந்தோஷமா இருந்துச்சு. இப்ப எல்லோரும் யூனிபார்ஃமுல இருக்கிறதால அடையாளம்கூட கண்டுபிடிக்க முடியல. இன்னும் 5 நாள் வச்சாலும் இருந்துக்கும் போலிருக்கு. ஆசிரியர் அய்யாவுக்கு நன்றியைத் தெரிவிக்கிறேன்.
கீதா
நானும் ஆசிரியர்தான். பள்ளியில் கிடைக்க முடியாத அறிவு, மகிழ்ச்சியை இங்கே வாரி வாரி வழங்கியிருக்கிறீர்களே, இது எப்படிச் சாத்தியமாகிறது. இந்த மந்திரத்தை எங்களுக்கும் சொல்லிக் கொடுங்கள். எங்களுக்கும் ஒரு பயிற்சி முகாமை நடத்துங்கள். எங்களின் குழந்தைகளின் மறுபக்கத்தைக் காட்டியதற்கு நன்றி.
சிவக்குமார் _ மேட்டுப்பாளையம் தி.க. இளைஞரணி அமைப்பாளர்
எனது நண்பரின் மகள் இரண்டு நாளைக்கு முன்பு அவருடைய அப்பாவுக்கு செல்பேசி மூலம் பேசியிருக்கிறாள். அதில், அப்பா கடவுள் இல்ல. அதை நம்பாதீங்கன்னு சொல்லியிருக்கு. அஞ்சு நாள்ல இது எப்படி நடந்துச்சுன்னு தெரியல. அதுமட்டுமல்ல. இன்னும் நிறைய இருக்கு. நேர்ல வந்து சொல்றேன்னும் பேசியிருக்கா. ஆச்சர்யமா இருக்கு. ஆண்டுக்கணக்குல சொல்லிக் கொடுத்தாலும் வராத அறிவு வந்திருக்கிறது. நன்றி.
முற்றிலும் புதுமையாக அமைந்த இந்தப் பழகு முகாமில் ஓவியம், இயற்கைப் பொருட்களில் உருவங்களைச் சமைத்தல், நாடகம், கதை, விடுகதை, கடி ஜோக்ஸ், சுற்றுலா ஆகியவற்றின் ஊடே முத்தான கருத்துகளை அவர்களுக்குப் புகட்டினார்கள். குழந்தைகளும் முகம் சுளிக்காமல் விரும்பிக் கற்றுக் கொண்டார்கள். தன்னம்பிக்கை பெற்று, மேடையேறிப் பேசினார்கள்; நடித்தார்கள்; பாடினார்கள்.
இன்னும் பல தனித்திறமையை வளர்த்துக் கொண்டனர். “என்ன மந்திரம் போட்டீர்கள்? எங்கள் பிள்ளை இப்படி மாறிவிட்டான் என்று சில பெற்றோர் நம்மிடம் வியந்தனர். மந்திரமெல்லாம் ஒன்றும் இல்லை; நாமும் குழந்தையாக மாறினால் அவர்களை அறிஞர்களாக்கலாம்; தன்னம்பிக்கையாளர்களாக்கலாம்; வருங்காலத் தூண்களாக்கலாம் என்பதை மீண்டும் எடுத்துச் சொல்லியது இந்த ஆண்டு பழகு முகாம்.
-தொகுப்பும் எழுத்தும்: உடுமலை வடிவேல்