விளையாட்டு
வளைகோல் பந்தாட்டம் (HOCKEY)
வளைந்த கோல் ஒன்றினால் பந்தினைத் தட்டியும் அணைத்தும், அடித்தும், ஒதுக்கியும், உருட்டியும் விளையாடுவதால் வளைகோல் பந்தாட்டம் (ஹாக்கி) என்று பெயர் பெற்றது.
இந்த விளையாட்டினைப் போன்ற விளையாட்டு சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தில் விளையாடப்பட்டுள்ளது-. இதற்கான குறிப்பு கி.மு. 2000ஆம் ஆண்டில் கட்டப்பட்ட ஸ்தூபி ஒன்றின் சுவற்றில் வரையப்பட்டுள்ளது.
வரலாற்றுச் சான்றுகள் அயர்லாந்து நாடுதான் ஹாக்கியின் தாயகம் என்பதை உறுதிப்படுத்துகின்றன. அன்றைய அயர்லாந்து மக்களால் ஹார்லே என்றழைக்கப்பட்டு அவர்களின் தேசிய விளையாட்டாகவும் இருந்துள்ளது. 15ஆம் நூற்றாண்டில் பிரான்சில் பிரபலமானபோது ஹொக்கெட் (Hoquet) என்ற பெயர் பெற்றுள்ளது.
பிரெஞ்சுச் சொல்லான ஹொக்கெட் என்பதற்கு, ஆடு மாடு மேய்ப்பவர்கள் பயன்படுத்தும் தடி அல்லது மட்டை என்பது பொருளாகும். இந்தச் சொல்லில் இருந்துதான் ஹாக்கி என்ற பெயர் வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
நவீன ஹாக்கி விளையாட்டு இங்கிலாந்தில் தொடங்குகிறது. Hoquet என்ற பிரெஞ்சுச் சொல் ஆங்கிலேயர்களால் ஹாவ்க்கி (Hawkie) அல்லது ஹாக்கி (Hockie) என்று 1838ஆம் ஆண்டில் அழைக்கப்பட்டது. 1908ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஹாக்கி விளையாட்டு சேர்த்துக்கொள்ளப்பட்டது.
நவீன ஹாக்கி விளையாட்டு இங்கிலாந்திலிருந்து 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் இந்தியாவில் பரவி இந்தியாவின் தேசிய விளையாட்டாகத் திகழ்கிறது.
1928ஆம் ஆண்டு ஆம்ஸ்டர்டாமில் நடைபெற்ற ஒலிம்பிக் ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி முதன்முறையாகப் பங்கேற்று தங்கப் பதக்கத்தினைப் பெற்றது. 1932, 1936, 1948, 1952, 1956 ஆகிய போட்டிகளிலும் இந்திய அணி தொடர்ந்து தங்கம் வென்றுள்ளது.
ஆடுகளம் ஆடுகளத்தின் நீளம் 90 மீட்டர், அகலம் 54 மீட்டர். நடுவில் நீண்ட கோடு போடப்பட்டு இரண்டாகப் பிரிக்கப்பட்ட அரங்கின் இருபுறமும் 22.5 மீட்டர் தூரத்தில் இரு கோடுகள் (Broken line) போட்டுக் கொள்ள வேண்டும்.
கோல் பகுதி
ஒவ்வொரு கடைக்கோட்டின் மத்தியிலும் ஒரு கோல் பகுதி உண்டு. அகலம் 3.6 மீட்டர், கம்பங்களின் உயரம் 2.1 மீட்டர்.
இரண்டு குழுக்கள்
ஒவ்வொரு குழுவிலும் 11 வீரர்கள் வீதம் 2 குழுக்கள் இருப்பர். இவர்களுள் 5 பேர் முன்னோடி ஆட்டக்காரர்களாகவும்(Forwards),
3 பேர் இடைக்காப்பாளர்களாகவும் (Half backs), 2 பேர் கடைக்காப்பாளர்களாகவும் (Full backs), ஒருவர் கோல் காவலராகவும் (Goal reapen) இருப்பர். வளைகோல் பந்தாட்டத்திற்கு 2 நடுவர்கள் தேவைப்படுவர்.
புல்லி (Bully)
விளையாட்டைத் தொடங்கும்போது, குழுவிற்கு ஒருவர் வீதம் இருவர் கலந்து கொள்ளும் புல்லி எடுத்தல் நடைபெறும். பக்கக் கோடுகளைப் பார்த்து நேருக்கு நேர் இருவரும் நிற்பர். நடுவர் குழல் ஒலி எழுப்பியதும் இருவரும் ஒரே நேரத்தில் மட்டைகளை 3 முறை பந்துக்கு மேலும் தரையிலும் தட்டுவர். பின்பு இருவரில் ஒருவர் பந்தைத் தட்ட ஆட்டம் தொடங்கப்படும். கோல் போட்ட பின்பும் இடைவேளைக்குப் பின்பும் ஆட்டத்தைத் தொடங்கும்போது புல்லி எடுக்க வேண்டும்.
கோல் விதி
விளையாட வரும் வீரர்கள் ஒவ்வொருவரும் தனக்கென்று சொந்தமான ஒரு கோலுடன் (Stick) வரவேண்டும். கோலின் முன்பாகத்தால்தான் விளையாட வேண்டும். பின்புறமாக விளையாடினால் தனி அடி தண்டனையாகக் கிடைக்கும்.
பந்தினை அடிக்கும்போதோ அல்லது அடிக்க முயலும்போதோ கோலின் எந்தப் பகுதியையும் தோளுக்கு மேலே உயர்த்துதல் கூடாது. உயரத்தில் வரும் பந்து தோள் அளவுக்குக் கீழே இறங்கும் வரை பொறுமையாக இருந்து விளையாட வேண்டும். பந்து கீழே வரும்போது எதிரே இருப்பவருக்கு அபாயம் கொடுக்கும் வகையிலோ அல்லது எதிரணியின் முன்னேற்றத்தைத் தடுக்கும் வகையிலோ விளையாடக் கூடாது.
வெற்றி தோல்வி
அதிகமாகக் கோல் போடும் குழுவே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். இரு குழுக்களும் சமமாக கோல் போட்டிருப்பின், நடுவர் 5 நிமிடம் கொடுத்து இருமுறை விளையாடும் வாய்ப்புக் கொடுப்பார். அப்போதும் இரு குழுக்களும் சமமாகக் கோல் போட்டிருப்பின் இரு அணிகளும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
இரு அணிகளும் சமமாகக் கோல் போட்டுள்ளன. எந்த அணி வெற்றி பெற்றது என்று தீர்மானிக்க, பெனால்டி முனையிலிருந்து அய்ந்து தனி அடிகளை அடிக்கும் உரிமம் வழங்கி ஆட அனுமதி வழங்குவதும் உண்டு.
ஆட்ட நேரம்
ஆட்டம் இரு பருவங்களாக ஆடப்படுகின்றது. ஒவ்வொரு பருவத்திற்கும் ஆடுகின்ற ஆட்ட நேரம் 35 நிமிடங்களாகும். முதல் பருவம் முடிந்து அடுத்த பருவம் தொடங்கும் முன்னர் 5 நிமிட நேரம் இடைவேளை கிடைக்கும். இடைவேளை நேரம் எந்தச் சந்தர்ப்பத்திலும் பத்து நிமிடத்திற்கு மேல் போகக்கூடாது.