உயிரினங்களை மதிக்கும் அயல்நாடுகள்
விலங்குகள் சாலையை கடந்து செல்ல அமைக்கப்பட்டுள்ள பாலம்
நீண்ட நெடிய சாலைகளின் குறுக்கே ஆடு, மாடுகள் செல்வதை சாலைப் பயணத்தின் போது நீங்கள் பார்த்திருக்கலாம். இதனால் சில நேரங்களில் அவற்றில் ஒன்றிரண்டு பேருந்து, சுமையுந்து போன்ற கனரக வாகனங்களில் அடிபட்டு இறந்து விடுவதுண்டு. மழைக்காலங்களில் சாலையின் ஒரு புறத்திலிருந்து மறு புறத்திற்குச் செல்லும் நண்டுகள், தவளைகள் ஏராளமாக வாகனங்களில் சிக்கி இறந்து விடுகின்றன.
இந்த நிலையைத் தவிர்க்க அமெரிக்கா, கனடா, ஜெர்மன், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, நெதர்லாந்து போன்ற நாடுகளில் ஓர் ஏற்பாட்டைச் செய்துள்ளார்கள். இந்த உயிரினங்கள் வசிக்கும் நிலப்பகுதிகளைப் போலவே மண், புல், பூண்டு, செடி, கொடிகள் உள்பட அப்படியே தோற்றமளிக்கும் பாலங்களை சாலைகளின் மேலே அல்லது கீழே அமைத்துள்ளார்கள்.
பெரும்பகுதி விலங்குகள் எந்தெந்தப் பகுதிகளில் செல்லுமோ அந்த இடங்களில் அமைத்துள்ளார்கள். இதனால் அவை எளிதாக அந்தப் பாதையைக் கடந்து சென்றுவிடுகின்றன. இயற்கையைக் காக்கும் இந்தப் பாலங்களைப் பசுமைப் பாலம் என்று அழைக்கிறார்கள். மனித இனம் தவிர்த்த மற்ற உயிரினங்கள் இயற்கையைச் சார்ந்தே வாழ்கின்றன. எனவே, அவற்றிற்கு இடையூறு செய்யக்கூடாது என்ற இந்த நல்ல எண்ணத்தைப் பாராட்டத்தானே வேண்டும்!
நண்டுப் பாலம்
இது சிவப்பு நண்டுகளுக்காக உருவாக்கப்பட்டு உள்ள சிறப்பு வழி.
ஆஸ்திரேலியாவில் உள்ள கிறிஸ்துமஸ் தீவு தேசியப் பூங்காவில் உளளது.
பயில்வான் நாய்
நம்ம ஊர் நாட்டு நாய் வகையைப் போலவே இருக்கும், இந்தப் பெண் நாயின் பெயர் வெண்டி. வழக்கமான ஆண், பெண் நாய்களுக்குத்தான் இது பிறந்ததாம். ஆனால், மரபணுக் கோளாறு காரணமாக வழக்கத்துக்கு மாறாக வளர்ச்சி அடைந்துள்ளது.
அதனால் பார்ப்பதற்கு பயில்வான் போல முரட்டுத் தோற்றத்துடன் உள்ளது. தலை, இதயம், நுரையீரல்கள் மற்றும் கால்கள் ஆகியவை வழக்கமான அளவிலேயே இருக்கின்றன. தோல்கள் மட்டும் இரண்டு மடங்கு பெருத்துவிட்டது. அமெரிக்காவில் உள்ள 28 கிலோ எடை கொண்ட வெண்டியின் வயது 4தான்.