நோய் தடுப்போம்!
சொட்டு மருந்தை முறையாகச் சுட்டிக் குழந்தை உட்கொண்டால்
பட்டுப் போன்ற மேனியுடன்
பலநாள் வாழ்வர்; உண்மையிது;
குட்டிப் பாப்பா பிறந்ததுமே
கொடுப்போம் தடுப்பு நோய்மருந்தை!
எட்டிப் போகும் போலியோவும்;
எதிர்ப்புச் சக்தி உருவாகும்.
தடுப்பூ சிக்குப் பயந்திட்டால்
தாக்கும் உன்னைப் பலநோய்கள்;
படுக்கை தன்னில் வீழ்த்துகின்ற
பலநோய் தீர அறிவியலார்
தடுக்கும் மருந்தைக் கண்டிட்டார்;
தவறா மல்நாம் உட்கொண்டால்
மிடுக்காய் நாமும் வாழ்ந்திடலாம்; மெய்யாய் நலமும் பெற்றிடலாம்!
யாவரும் சமம்!
பிறப்பால் உயிர்கள் ஒன்றாகும்;
பிரித்துப் பார்த்தல் தவறாகும்;
புறத்தே உருவம் பலவாகும்;
புவியில் உயிர்கள் ஒன்றாகும்.
ஜாதி என்ற ஒன்றில்லை;
சமமே இங்கு யாவரும்தான்;
ஆதி நாளின் பிரிவுகளை
அன்பால் நாமும் களைந்திடுவோம்.
இனமும் மதமும் இங்கில்லை;
இரத்தம் சிவப்பு நிறமன்றோ?
மனமும் குணமும் பண்பட்டால்
மனித இனமே முன்னேறும்.
– கே.பி.பத்மநாபன், கோவை