கையில் கயிறு கட்டுவதால்….
இந்து மதக் கடவுள் பக்தியாளர்கள் பலர் கையில் கயிறு கட்டுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதனால் ஏற்படும் கேடுகள் குறித்து அண்மையில் தஞ்சாவூர் – வல்லம், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் ஒரு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நுண்ணுயிர்கள் வளர்வதற்கான ஊடகம் மற்றும் பெட்ரி தட்டு தயாரிக்கப்பட்டது. இது பாக்டீரியாக்கள் வளர்வதற்கான ஊடகமாகும். கடந்த மே மாதம் 10 அன்று பெரியார் பிஞ்சு நிறுவனர் ஆசிரியர் தாத்தா அவர்களின் முன்னிலையில், பிஞ்சுகள் பழகு முகாமில் இதற்கான செயல் விளக்கம் காட்டப்பட்டது.
இந்நிகழ்வில் சில பிஞ்சுகள் தாமாகவே முன்வந்து தங்கள் கயிறு மற்றும் விரல்களை ஆய்வு ஊடகத்தில் மாதிரியாகப் பதிவு செய்தனர். இவர்களுடைய கயிறு மற்றும் விரல்களில் இருந்த நுண்ணுயிரிகள் பெட்ரி தட்டில் வளர்ந்ததைக் கண்டு (படம்) பிஞ்சுகள் அதிர்ச்சி அடைந்தனர்.
கையில் கட்டப்படும் கயிற்றில் ஒரு சாயம் ஏற்றப்பட்டிருக்கும். இதனால் உடலில் ஒவ்வாமை ஏற்பட்டு தோல் பாதிப்புகள் வர வாய்ப்பு உள்ளது.
கயிறு கட்டப்படுவதால் நமது உடலின் இரத்த ஓட்டம் பாதிப்படைகிறது. நாம் குளிக்கும் போதும், கைகளைச் சோப்புப் போட்டுக் கழுவும் போதும் நுண்ணுயிரி மற்றும் அழுக்கானது கயிற்றில் தேங்குகிறது. மேலும், நுண்ணுயிரானது உணவு சாப்பிடும் போதும், இட்லி மாவு கரைப்பது மற்றும் பரோட்டாவிற்கு மாவு பிசைதல் போன்றவற்றின் மூலமும் நமது உணவுப் பாதையைச் சென்று அடைந்து வயிற்று உபாதைகளைத் தோற்றுவிக்கிறது.
மூடநம்பிக்கை காரணமாகக் கட்டப்படும் கயிற்றில் எவ்வளவு தீமை இருக்கிறது பார்த்தீர்களா? நெற்றியில் இடும் திருநீற்றில், குங்குமத்தில், சாந்துப் பொட்டுகளில் உள்ள வேதிப் பொருட்களால் தோலில் ஏற்படும் பாதிப்புகள் பல உண்டு. நம் வியர்வையில் உள்ள உப்பு அந்த வேதிப்பொருட்களில் கலந்து பாதிப்பை ஏற்படுத்தும். அதுபோலத்தான் இந்தக் கயிறும் நம் வயிற்றுக்குள் சென்று உடல்நலத்தைக் கெடுக்கிறது.
ஆய்வு ஊக்கம்: பேராசிரியை பர்வீன்
ஆய்வாளர்கள்: அ.சுஷ்மா, செ.வே.பெலிஸ்பாண்டியன்,
ச.ஜனனிபிரியா, ரெ.அ.சிந்து மற்றும் முனைவர் ச.குமரன்
உயிரித் தொழில்நுட்பவியல் துறை
பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்