மூக்குக்கொம்பன் என்ற காண்டாமிருகம்
ஆங்கிலத்தில் ரினோசரஸ் என்று அழைக்கப்படும் காண்டாமிருகங்கள் ரைனோசெரோடிடே (Rhinocerotidae) என்ற குடும்பத்தைச் சேர்ந்தவை. இவற்றில் இரண்டு ஆப்ரிக்க வகைகளும் மூன்று ஆசிய வகைகளும் உள்ளன.
விசித்திரமான தோற்றம், படகு போன்ற தலை, போர்க்கவசம் அணிந்ததுபோல மடிப்புகளோடு பாறை பாறையாக அமைந்துள்ள தோல் போன்ற தோற்றத்துடன் காண்டாமிருகம் காட்சியளிக்கிறது.
காண்டா என்னும் சொல்லுக்கு மிகப் பெரிய என்று பொருள். மூக்குக் கொம்பன், உச்சிக் கொம்பன், கொந்தளம் என்ற வேறு பெயர்களும் காண்டாமிருகத்திற்கு உண்டு.
கிரேக்கச் சொல்லான ரைனோகெரஸ் என்பதில் இருந்து வந்தது. செவ்வியல் கிரேக்க மொழியில் ரைனோசு என்பதற்கு மூக்கு என்று பொருள். கெரஸ் என்பதற்குக் கொம்பு என்று பொருள். எனவே, மூக்குக் கொம்பன் என்று பொருள்படும். ரைனோகெரசு என்பது ரைனோசெரசு என்று வழங்கப்படுகிறது. ஆங்கிலத்தில் பன்மைச் சொல் ரைனோசெர்ட்டி என்பதாகும்.
ஆப்ரிக்காவிலும், இந்தியாவின் வடகிழக்குப் பகுதியிலும், நேபாளம், பூட்டானில் சில பகுதிகளிலும், ஜாவா, சுமத்ரா தீவுகளிலும், இமயமலையின் அடிவாரத்தில் உள்ள புல்வெளிகள் மற்றும் அதை அடுத்த காடுகளிலும் காண்டாமிருகங்கள் காணப்படுகின்றன. ஆப்ரிக்காவிலும் சுமத்ராவிலும் காணப்படுபவைகளுக்கு 2 கொம்புகள் உள்ளன. இந்தியா, ஜாவாவில் வசிப்பவைகளுக்கு ஒரு கொம்பு மட்டுமே உள்ளது.Black Rhinocerous என்று கூறப்படும் கறுப்பு மூக்குக் கொம்பன் ஆப்ரிக்க விலங்காகும்.
பசும்புல், இலை, தழைகள், கிழங்குகள் போன்றவற்றைச் சாப்பிடும் காண்டாமிருகங்களைச் சதுப்பு நில விலங்கு என்றும் கூறலாம். இவற்றின் உடம்பில் உள்ள பேன், உண்ணிகளின் தொல்லையிலிருந்து மீள சகதியில் படுத்துப் புரள்கின்றன.
மணிக்கு 40 கி.மீட்டர் வேகத்துடன் ஓடக்கூடிய காண்டாமிருகங்கள் கூர்மையான மோப்பத் திறனையும் மிகத் துல்லியமாகக் கேட்கும் காதுகளையும் பெற்றவை.
இவற்றின் பெரிய எதிரி மனிதன்தான். மூக்கின் மீது வளரும் கொம்புகளுக்காக மனிதனால் வேட்டையாடப்படுகின்றன. கொம்பின் விலை 3 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புடையது.
கொம்புகள் உடைந்தாலோ, முறிபட்டாலோ வளர்ந்துகொண்டே இருக்கும். மணற்பரப்புகளில் அவற்றிற்கு வேண்டிய நீரைத் தோண்டுவதற்கும் எதிரிகளைத் தாக்கவும் கொம்பு பயன்படுகிறது.
தென்ஆப்ரிக்காவில் வாழும் வெள்ளை காண்டா 2300 கிலோ எடையுடன் பெரிதாக இருக்கும். அளவில் சிறியதான கறுப்பு காண்டா 1 டன் எடை உடையது. இவை இரண்டிற்கும் ஒன்றன்பின் ஒன்றாக இரண்டு கொம்புகள் உள்ளன. ஆசியாவின் கிரேட் இந்தியன் இனம் நல்ல தேக வளர்ச்சியுடன் இருக்கும். காண்டாமிருகத்தின் குட்டி 60 கிலோ எடை வரை இருக்கும்.
காண்டாமிருகங்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருவதால் பல நாடுகளில் காண்டாமிருகத்தை வேட்டையாடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.