சாமிகளின் பிறப்பும் இறப்பும் – 11
பெண்ணைக் காத்த பக்கீர்
– ச.தமிழ்ச்செல்வன்
எல்லா மதங்களிலும் ஆட்கள் சாவார்கள். அப்படிச் செத்தவர்கள் சாமியாக கும்பிடப்படுவார்கள். இஸ்லாம் அல்லது முஸ்லிம் மதத்தில் உள்ளவர்கள் இறந்துபோன மனிதர்கள் எல்லோரையும் வழிபடுவதில்லை. அல்லா ஒருவரே வழிபடத்தக்கவர் என்பார்கள். நாம் ஏற்கெனவே பார்த்த கதைகளில் வருவது போல பிறருக்காக இறந்தவர்கள், பிறருடைய உயிரைக்காக்க இறந்தவர்கள் மட்டுமே வழிபடப்படுகிறார்கள்.
அவர்களை அடக்கம் செய்துள்ள சமாதிகளை தர்கா என்று அழைப்பார்கள். அங்கு அடக்கமானவர்களை அவுலியாக்கள் என்பார்கள். அவுலியா என்றால் இறைவனின் தூதர் என்று பொருள்.
தஞ்சாவூர் நகரத்தில் உள்ள பெரிய ஆஸ்பத்திரி; அதாவது அரசு மருத்துவமனைக்குள்ளே ஒரு தர்கா இருக்கிறது. இஸ்மாயில் ஷா பள்ளிவாசல் என்று அதற்குப் பெயர். இன்றைக்கும் அங்கு வழிபாடு நடக்கிறது. ரொம்ப நாளைக்கு முன்னால் அந்த இடம் காடாக இருந்ததாம்.
சாயங்காலம் ஆகிவிட்டால் அந்தப் பகுதியில் வெளிச்சமே இருக்காது. கிச் கிச் என்ற பூச்சிகளின் சத்தமும் ஆந்தைகளின் அலறலும் தான் கேட்கும். அடர்த்தியான மரங்கள், செடி கொடிகள் காற்றில் அசைந்து கிர்ரிச் கிர்ரிச் என்று சத்தம் கேட்கும். திருடர்கள் ஒளிந்துகொள்ள அது சரியான இடமாக இருந்துள்ளது.
இருட்டுக்கும் திருடர்களுக்கும் பயந்த மக்கள் பகலில்கூட அந்தப் பக்கம் போவதில்லை. அந்தக் காட்டுப் பாதையில் ஒருநாள் மாலையில் இருட்டுகிற நேரம் ஒரு பெண் தனியாக நடந்து வந்தாள். கோயிலில் பூசை செய்கிற ஒரு பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்த பெண். என்ன அவசரமோ தெரியவில்லை.
வேக வேகமாக அவள் காட்டு வழியே ஓடி வருகிறாள், ஏய் குட்டி எங்கே போறே நில்லு என்று ஒரு சத்தம் கேட்கிறது. அவள் திடுக்கெனப் பயந்து நின்றுவிட்டாள். எங்கிருந்தோ திருடர்கள் வந்துவிட்டார்கள். ஏழு பேர், ஏழு பேருமே ஆண்கள், எப்போதுமே ஆண்கள்தானே திருடர்கள்.
ஏழுபேரையும் கண்டு அவளுக்கு ரத்த ஓட்டமே நின்றுவிட்டது. கிடுகிடுவென நடுங்கிக் கொண்டு நின்றாள். ஏழு பேரும் கையில் கத்தி, உருட்டுக்கட்டை எல்லாம் வைத்திருக்கிறார்கள். கழுத்திலே உள்ள நகைகளைக் கழட்டு என்கிறான் ஒருவன். வளையல்களைக் கழட்டு என்கிறான் இன்னொருவன். அஹ ஹ ஹ ஹா என்று சிரிக்கிறான் ஒருவன். சரியான வேட்டை என்று பல்லைக் காட்டுகிறான் ஒருவன்.
அய்யோ யாராவது என்னைக் காப்பாத்த வாங்க… என்று கத்துவதற்கும் கூட அவளால் முடியவில்லை. நாக்கு ஒட்டிக்கொண்டது போலிருக்கிறது. அவள் கண்களில் கண்ணீர் வழிகிறது. அவர்களைக் கையெடுத்துக் கும்பிடுகிறாள். அதைப் பார்த்த அவர்கள் மனம் இளகினார்களா? இரக்கம் இருந்தால் அப்பாவிப் பெண்ணை இப்படி வழி மறிப்பார்களா?
அந்த நேரம் அதே காட்டு வழியே ஒரு பெரியவர் பாட்டுப் பாடிக் கொண்டே நடந்து வருகிறார். அவர் ஒரு பக்கீர். பக்கீர் என்றால் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர். அல்லாவின் புகழைத் தெருத்தெருவாகப் பாடிக் கொண்டு செல்வார். மக்கள் அன்போடு கொடுப்பதைக் கொண்டு வாழ்பவர். சொத்து சுகம் ஏதும் இல்லாதவர். அவர் இங்கே ஏழு திருடர்களுக்கு இடையில் மாட்டிக் கொண்ட இப்பெண்ணைப் பார்க்கிறார்.
அப்படியே நின்றுவிட்டார். அந்த ஏழு பேரையும் பார்த்து இந்தப் பெண் பாவம். இவளை விட்டுவிடுங்கள் என்று கெஞ்சுகிறார். ஆண்டவர் பெயரால் கேட்கிறேன், விட்டுவிடுங்கள் அய்யா என்று கெஞ்சுகிறார். ஆண்டவராவது கோண்டவராவது போடா என்று அவரைக் கீழே தள்ளி மிதிக்கிறார்கள். ஒரு திருடன் அந்தப் பெண்ணின் கையைப் பிடிக்கிறான். இன்னொருவன் அவள் கழுத்துச் சங்கிலியை இழுக்கிறான். பக்கீர் ஓடிச் சென்று குறுக்கே சாடுகிறார்.
அப்பெண்ணைப் பார்த்து நீ ஓடிப் போயிடு தாயே என்று கத்துகிறார். திருடர்கள் அப்பெண்ணை விட்டுவிட்டு அவரை அடிக்கிறார்கள். கத்தியால் குத்துகிறார்கள். அதைப் பற்றிக் கவலைப்படாமல் நீ ஓடிப்போ என்று அவர் கத்திக்கொண்டே இருக்கிறார். மேலும் மேலும் கத்திகள் அவர் உடம்பில் இறங்குகின்றன. ஓடு தாயே… ஓடிரு தாயே… என்று கத்திக்கொண்டே இருக்கிறார். மேலும் மேலும் கத்திகள் அவர் உடம்பில் இறங்குகின்றன. ஓடு தாயே… ஓடிரு தாயே… என்று கத்திக்கொண்டே மண்ணில் செத்து விழுகிறார்.
அந்தப் பெண் அப்படியே திகைத்து நிற்கிறாள். தன்னைக் காப்பதற்காக தன் கண் முன்னேயே ஒரு அப்பாவி மனிதர் கொல்லப்பட்டுவிட்டார். கடவுளே உனக்குக் கண் இல்லையா என்று அவள் வானத்தை நோக்கிக் கத்தினாள். அடுத்த நிமிடம் அதிசயம் நடந்தது. திடீரென இடி இடித்தது.
கண்கள் கூசும்படி ஒரு மின்னல் வெட்டியது. மின்னல் வெட்டி மறைந்ததும் திருடர்கள் ஏழு பேரும் அய்யய்யோ… எனக்குக் கண்ணு தெரியலையே… எனக்குக் கண் போயிடுச்சே… என்று கத்த ஆரம்பித்தார்கள். கண்களைக் கசக்கிக் கொண்டு மரங்களில் முட்டி மோதியபடி ஆளுக்கொரு திசையில் போனார்கள். வானத்திலிருந்து வெள்ளம் பாய்ந்து வருவது போல பெருமழை கொட்டத் தொடங்கியது.
மழையில் கரைந்து பக்கீரின் ரத்தம் தரையில் ஓடுவது மின்னல் வெளிச்சத்தில் தெரிகிறது. அந்தப் பெண்ணால் துக்கத்தை அடக்க முடியவில்லை. என்ன நினைத்தாளோ தெரியவில்லை அந்த நிமிடமே தன் நாக்கைக் கையில் பற்றிப் பிடுங்கி இழுத்தாள். ரத்தம் பீறிட அப்படியே செத்துக் கீழே விழுந்தாள்.
நடந்ததை அறிந்த ஊர்க்காரர்கள் ஓடி வந்து பார்த்து அழுதார்கள். இறந்தவர்களின் உடல்களை அருகருகே புதைத்தார்கள். தினசரி வழிபடத் தொடங்கினார்கள். அவர் ஒரு முஸ்லிம். கறி, மீன் எல்லாம் சாப்பிடுபவர். ஆகவே, அவருக்குக் கறி வைத்துக் கும்பிட்டார்கள். இவள் ஒரு பிராமணப் பெண். கறி தின்று பழகாதவள். ஆகவே அவளுக்குச் சர்க்கரைப் பொங்கல், பழம், தேங்காய் என்று படைத்தார்கள்.
பின்னர் அந்த இடத்தில் ஆஸ்பத்திரி கட்டியபோது இந்தத் தர்காவை இடித்தார்கள். அதை உள்ளே வைத்தே கட்டினார்கள். இப்போது மக்கள் இவருக்கு அசைவம். அவளுக்குச் சைவம் படைத்து வழிபடுகிறார்கள்.
யாரோ ஒரு பிராமணப் பெண்ணுக்காக ஒரு முஸ்லிம் பெரியவர் தன் உயிரைக் கொடுத்தார். தனக்காக ஒருவர் தன் கண்முன்னே செத்து மடிகிறார். அதைக்கண்ட துக்கத்தில் அவள் தன் உயிரை மாய்க்கிறாள். இந்து, முஸ்லிம் என்று இருவரும் வித்தியாசம் பார்க்கவில்லை. இந்துவானாலும் முஸ்லிம் ஆனாலும் உயிர்கள் மனித உயிர்கள் அல்லவா? மதம் ஒரு சட்டை போலத்தானே?
இந்தக் கதையில் உண்மையிலேயே மின்னல் வெட்டியதா? திருடர்கள் குருடர்கள் ஆனார்களா? என்று கேட்டால் அப்படி நடக்காமலேகூட இருந்திருக்கலாம். திருடர்கள் இரண்டு பேரையுமே கொன்று போட்டுவிட்டுப் போயிருக்கலாம்.
கதையைச் சொல்ல நேரடி சாட்சி யார் இருந்தார்கள்? ஆனால் ஒரு இந்துப் பெண்ணுக்காக முஸ்லிம் பக்கிரி கொல்லப்பட்டது உண்மை. ஆகவே, மக்கள் கூடுதலாகக் கதையில் பல சம்பவங்களைச் சேர்த்து வளர்த்து விட்டிருக்கலாம்.
(தொடரும்)