உலகின் பழம்பெரும் நகரம் பெய்ஜிங்
இந்தியாவைப் போல பழமைப் பெருமையும், பல்லாண்டுக் கால வரலாறும் உடையது சீனா. அப்பெருநாட்டின் தலைநகரம் பெய்ஜிங். ஒருகாலத்தில் பீகிங் என்று அறியப்பெற்றது இப்போது பெய்ஜிங் அல்லது பீஜிங் எனப்படுகிறது.
பீஜிங் எனில் சீன மொழியில் வடக்குத் தலைநகரம் என்று பொருளாகும். சீனாவின் வடக்குப் பகுதியில் இப்பெயரைப் பெற்றிருக்கலாம்.
பீஜிங் சீனாவின் இன்றைய தலைநகர் மட்டுமல்ல, பல ஆண்டுகளுக்கு முற்பட்ட தலைநகரும் ஆகும். முதன்முதலில் கி.மு. 1057இல் தலைநகரம் அறிவிக்கப்பட்டது. அதன்பின் மரபுகள் பலவற்றினால் ஆளப்பட்டு பலமுறை அதன் பெயர் மாறி கி.பி.1949இல் தன் பழைய பெயரான பீகீங் என்பதைப் பெற்று இப்போது பெய்ஜிங் அல்லது பீஜிங் எனப்படுகிறது.
வறண்ட கடுங்கோடையும், வாட்டும் குளிரும் கொண்ட தட்பவெப்பநிலை இந்த நகரத்தில் நிலவுகிறது. மே மாதம் அல்லது செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் பீகிங் செல்ல ஏற்ற மாதங்கள்.
கன்பூசியஸ் கோவில்
ஏறக்குறைய ஒன்றரைக் கோடி மக்கள்தொகை கொண்ட மக்கள்தொகை மிகுந்த நகரங்களில் ஒன்று. பெய்ஜிங்கில் பேசப்படும் மண்டாரின் என்பது சீன மொழியின் ஒரு பிரிவு. சீனநாட்டின் அரசியல், கலை, பொருளாதாரம் ஆகியவற்றின் அடையாளமாக விளங்கும் அது பன்னாட்டு வாணிபம், வர்த்தகத் தொடர்புக்கு ஒரு மய்யமாகவும் விளங்குகிறது. தொழில் வளர்ச்சியின் அடையாளமாகத் தொழிற்பேட்டைகள் பல உள்ளன. நகருக்கு வெளியேயோ வேளாண்மை மிகுந்துள்ளது.
உலகிலேயே மிகப்பெரிய சதுக்கம் டியான்மன் சதுக்கம். சொர்க்கத்தின் அமைதிக்கான நுழைவு வாயில் என்னும் பெயருடையது. சீன வரலாற்று நிகழ்ச்சிகளின் மய்யமாக விளங்கியது அது. முன் வாயிலில் சீனாவின் வரலாற்றைப் புரட்டிப் போட்ட சேர்மன் மா எனப்பட்ட மாசேதுங்கின் படம் மக்களை வரவேற்கிறது. இந்தச் சதுக்கத்தினைச் சுற்றித் தேசிய அருங்காட்சியகம், மாசேதுங் நினைவகம், மக்கள் அரங்கம், டியான்மன் கோபுரம் உள்ளிட்ட பல குறிப்பிடத்தகு அடையாளங்கள் உள்ளன. உதயசூரியன் உதிக்கும் வேளையிலும், அந்திமச் சூரியன் மறையும் வேளையிலும் மக்கள் கூட்டம், கொடி ஏற்ற இறக்க நிகழ்ச்சிகளைக் காணக் குவியும்.
அரண்மனை
லாமா கோயில்
பெய்ஜிங் அரண்மனை
பெய்ஜிங் நகரின் நன்கு பாதுகாக்கப்படும் பிரம்மாண்டமான இந்தப் பழமையான அரண்மனைகளில் ஏறக்குறைய ஒன்பதாயிரத்துத் தொள்ளாயிரம் அறைகள் இருந்தன. இப்போதும் சுமார் எட்டாயிரம் அறைகள் காட்சிக்கு உள்ளன. இங்குள்ள சொர்க்க ஆலயம் சுமார் மூவாயிரத்து அய்நூறு ஆண்டுகளுக்குமுன் கட்டப்பட்டது. பழமையான சீனக் கட்டடக் கலையின் எடுத்துக்காட்டு இது. இங்கு அனைவரையும் கவருவது எதிரொலிக்கும் சுவர் ஆகும். சுவர்முன் நின்று குரல் எழுப்பினால் எதிரொலி கேட்கும்.
பெய்ஜிங் நகரின் அழகிய ஆலயம் லாமா ஆலயம் . இங்கு அறுபது அடி உயரத்தில் சந்தன மரத்தில் செதுக்கிய புத்தர் மரச் சிற்பம் காணலாம். லாமா ஆலயம் அல்லது திபெத்து ஆலயம் எனப்படுகிறது.
டியான்மன் கோபுரம்
சீனா என்றால் ஒருவர் நினைவில் முன்வந்து நிற்பவர் அந்நாட்டின் தத்துவமேதை கன்ஃபூசியஸ். அவர் பெயரால் ஏற்பட்ட சமயம் கன்பூசியஸ் சமயம். கன்பூசியசுக்கும், அவருடைய கோட்பாடுகளுக்கும், அவர் வழிவந்த சமயத் தலைவர்களுக்கும் அமைந்துள்ள ஆலயம் உள்ளது. சீன நாட்டை ஆண்ட மரபினரில் மிங் மரபினர் குறிப்பிடத்தக்கவர்கள். இந்த மரபின் பேரரசர்களின் கல்லறைகள் எழுப்பப்பட்டுள்ளன.
இம்பீரியல் அரண்மனை
நேரத்தை அறிவிப்பதற்காக அந்தக் காலத்தில் கட்டப்பட்ட கோபுரம் முரசுக் கோபுரம். பழங்காலத்தில் இம்முரசுக் கோபுரத்தில் இருபத்து நான்கு முரசுகள் முழங்கிக் கொண்டிருந்தனவாம். மணிக்கோபுரம் இரண்டு அடுக்கிலானது. இந்தப் பழமையான மணி இன்றும் நல்ல நிலையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
பேரரசர்களும், பேரரசிகளும் உலவிய பூங்கா பெய்ஹை பூங்கா. இதன் மய்யத்தில் தீவு ஒன்று உள்ளது. இந்தத் தீவில் ஒரு வெள்ளை ஆலயம் அமைந்துள்ளது.
சீனப் பெருஞ்சுவர்
உலக அதிசயங்கள் ஏழில் ஒன்றாகக் கருதப்படும் சீனப் பெருஞ்சுவரின் ஒரு பகுதி பெய்ஜிங் அருகில் செல்கிறது. சீனா சென்று வந்தவர் கண்டுவந்தேன் என்று சொல்லும் பெருமைக்கு உரிய வரலாற்றுப் பின்னணி உடைய சுவர் இது.
சுமார் இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் வாழ்ந்த பல அடுக்குகளால் அமைந்த சுண்ணாம்புக் குகைகளில் பீகிங் மனிதனின் எச்சங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.
இன்னும் பல
பீகிங் நகரின் மீன் காட்சியகம், இரண்டு பெரிய ரயில் நிலையங்கள், பன்னாட்டு விமான நிலையம், நகரப் போக்குவரத்தை நன்முறையில் இணைக்கும் பேருந்துகள், பாதாள ரயில்கள் உள்ளன.
எந்த நகருக்கும் இல்லாத, யுனெஸ்கோ நிறுவனம் சான்று அளித்த பழமைச் சின்னங்கள், வானை முட்டும் கட்டடங்கள், வணிக நிறுவனங்கள், ஆடம்பர விடுதிகள் எனப் பழமையுடன், புதுமை கைகோர்த்து உலவும் நகரம் பெய்ஜிங்.